சினிமாதான் சுலபம்!
குறும்பட உலகத்தில் இருந்து மீண்டும் ஒரு படைப்பாளி... "பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்குபவர்... 26 வயது அருண்குமார்.


குறும்பட உலகத்தில் இருந்து மீண்டும் ஒரு படைப்பாளி... "பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்குபவர்... 26 வயது அருண்குமார்.
குறும்பட உலகத்தில் இருந்து புரமோஷன் கிடைத்திருக்கிறது.... வாழ்த்துகள் அருண்...
இதைச் சாத்தியமாக்கிக் காட்டிய சீனியர்களுக்கு நன்றி. நான் மதுரைக்காரன். திடீரென்று சினிமாவில் ஆர்வம். ஆனால் வீட்டில் இன்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். படித்து முடித்ததுமே ஏதோ ஒரு வேலை. மனசுக்கு ஒட்டவே இல்லை. திடீரென்று எல்லாவற்றையும் உதறி விட்டு, சினிமாவுக்குள் வந்து விட்டேன். முட்டி, மோதி ஒவ்வொரு சினிமா அலுவலகமாகப் போய் வந்து பார்த்தால், சினிமா ரொம்பவே கஷ்டம்தான். அப்போதுதான் குறும்பட உலக நண்பர்கள், கோலிவுட்டை பரபரப்பாகப் பேச வைத்திருந்தார்கள். நானும் அந்தப் பக்கம் போய் பார்த்தேன். பிடித்திருந்தது. "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சிக்காக ஒரு குறும்படம் எடுத்தேன். இதுவரை ஏழு படங்கள் வரை இயக்கியிருக்கிறேன். பார்த்தவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். அதுதான் அடுத்தடுத்த பயணங்களுக்கு எரிபொருள். அம்மா, அப்பா, நண்பர்கள் என எல்லோரும் என் மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஏழு படைப்புகளில் ஒரு படம்தான் இந்தப் "பண்ணையாரும் பத்மினியும்'.
"பண்ணையாரும் பத்மினியும்'.... படிக்கும் போதே, வேறு ஏதோ தோன்றுகிறது.....?
இது வேறு. மனித மனங்களின் பக்குவத்தை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஒரு குழந்தை மீது வைக்கிற நேசம். பெண்ணின் மீது வருகிற காதல். தகப்பன் மீது வைக்கிற அன்பு. இவற்றையெல்லாம் தாண்டி ஒரு மேஜை, தாத்தாவின் ரேடியோ பெட்டி, தலைமுறைகள் கடந்த சோறு போடும் நிலம்.. கல்லூரி தோழி எழுதிய காதல் கடிதம்...என ஒவ்வொரு மனிதனுக்கும் உயிரற்ற ஏதாவது ஒரு பொருளின் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். அது காதலும் கூட. இழந்த உறவுகள், சிதைந்த மனங்கள், மீளாத கனவுகள் என எவ்வளவோ இருந்தாலும், ஏதோ ஓர் உயிரற்ற பொருளிடம் உன்னதமாக இருக்கும் பக்குவம் மனித மனசுக்கு உண்டு. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருள்கள் நமது உணர்வுகளை, நினைவுகளைக் கிளறுகின்றன. எல்லாருடைய வாழ்க்கையிலும் சில பொருள்கள் நினைவுகளால் முக்கியத்துவம் அடைந்து இருக்கும். இந்த காரில்தான் போவேன். இந்த பேனாவில்தான் எழுதுவேன். இந்த கர்ச்சீப்... இந்த செல்போன்... என ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள். உயிரற்ற பொருள்கள் தரக்கூடிய உணர்வுகளும், கதைகளும் எப்போதும் தீரவே தீராது. 80-களில் பிரபலமாக இருந்த பத்மினி காருக்கும், அந்தக் காரை ஓட்டத் தெரியாத ஒரு பண்ணையாருக்கும் இடையே இருக்கும் சிநேகம், காதல், உரையாடல்கள் வாழ்வின் எந்த எல்லைக்கு அவரை எடுத்துச் சென்றது என்பதுதான் இதில் உள்ள கற்பனை.
நீங்கள் சந்தித்த போது விஜய் சேதுபதி ஒரு வளரும் இளம் நடிகர்..... இப்போது ஸ்டார் நடிகர்.... அவரின் வளர்ச்சிக்கு அப்படி என்ன காரணமாக இருக்கும்...?
விஜய் சேதுபதி ஒரு தீவிர கதைப் பிரியர். பத்து நிமிடங்களில் ஐந்து கதைகளை அவரால் எடை போட முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் கதை சொல்லலாம். புதுமுகம், ஸ்டார் இயக்குநர் என்ற பாகுபாடுகள் கிடையாது. அவருக்குக் கதை பிடிக்க வேண்டும். கதை பிடித்து, அதில் நடிக்கும் ஆசை அவரிடம் இருந்தால், அதை படமாக்கும் வரை விட மாட்டார். "பீட்சா' ஹிட்டுக்குப் பின்புதான் இந்தக் கதையை விஜய் சேதுபதியிடம் சொன்னேன். ரொம்பவே நல்லாயிருக்கு என்றவர், ஒரு நாள் அழைத்து எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டு கொடுத்தார். கிளைமாக்ஸ் காட்சி அத்தனை நெருடலாக இருக்கும்... கதை கேட்ட போது அந்த காட்சி பற்றி சொல்லியிருந்தேன். ஆனால் அதைப் படமாக்கும் நாளில், இப்படி.... அப்படி.. என எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஷூட்டிங் பிரேக்கின் போது அங்கிருந்தவர்களிடம் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தவர், திடீரென்று, ""சார் ஷாட் ரெடி'' என்றதும், கதை சொல்லிய போது என்ன எதிர்பார்த்துச் சொன்னேனோ, அதை அப்படியே கண் கலங்க நடித்து விட்டு போனார். அதுதான் விஜய்சேதுபதி.
குறும்பட இயக்குநர்களின் தகுதிகள் பற்றி... இன்னும் பெரிய விவாதங்கள் போய்க் கொண்டே இருக்கின்றன...?
இதைப் பெரிய தகுதி எனச் சொல்ல மாட்டேன். தகுதி இல்லையென்றும் சொல்ல முடியாது. என்னிடம் சரக்கு இருப்பதால்தான் தைரியமாக உங்களிடம் பேச முடிகிறது. ஆனால் இதே பேச்சு என் இரண்டாவது படத்துக்கும் வேண்டும். அப்போதுதான் இது உண்மையான தைரியம். அனுபவங்களை எப்போதும் வெளியில் இருந்துதான் தேட வேண்டும். உள்ளுக்குள் இருந்தே வெளியே வருகிறவனையும் தவறாக எடை போட முடியாது. குறும்படங்கள் இயக்குவதற்கு முன்பாகவே யாரிடமாவது உதவி இயக்குநராக சேரத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் அது சரியாக வரவில்லை. நண்பர்கள் சிலர்தான் குறும்பட உலகம் பற்றி ஐடியா கொடுத்தார்கள். அப்போதுதான் அதற்காகவே தீம் பிடித்து கதைகள் எழுத ஆரம்பித்தேன். இருந்தாலும் ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங் என எல்லா இடங்களையும் ஹோம் ஓர்க் செய்து கற்றுக் கொண்டேன். ஒரு முழு சினிமா இயக்குநராக மாற எல்லாத் தகுதிகளும் வேண்டும். அதை நான் வளர்த்துக் கொண்டேன். முதல் நாள் ஷூட்டிங்கின் போது பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும், சமாளித்து விட்டேன். குறும்பட உலகத்தில் எல்லா வேலைகளையும் நாம்தான் பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் மேக்கிங் பற்றிய கவலை இருந்தால் மட்டும் போதும். அப்படி பார்க்க போனால் சினிமாதான் சுலபம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...