/

வெற்றிக்கான ரகசியம் தெரிந்தால் போதும்! இயக்குநர் ஆனந் கிருஷ்ணா

விடை தெரியாத விஷயங்களில் சந்தோஷமும் இருக்கும். வருத்தமும் இருக்கும். இது இந்த நேரத்தில் நடந்து விடும் என யாரும் கணக்குப் போட்டு வாழ முடியாது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:07 am

ஜி. அசோக்

இந்த நிமிஷம் எமன் நம்மைத் தேடி வந்தாலும், ""வாங்க எப்ப வந்தீங்க, வெயில், மழை என கடந்து வந்திருப்பீங்க... கொஞ்சம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க'' என கேட்கிற நிதானம் நமக்கெல்லாம் இருக்கா? அப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் அது எவ்வளவு பெரிய வரம். இந்த நிமிடம் வரை வாழாத மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் அந்த லிஸ்ட்டில் நான், நீங்க... யார் வேண்டுமானாலும் சேரலாம். யாரோ ஒருவர் எப்படி வாழ்வது என்பதை அவர்களின் வாழ்க்கை மூலம் சொல்லிக் கொடுப்பதாக இருந்துவிட்டால், இந்த நிகழ் நிமிடத்தை கூட தவற விடாத மனநிலை எல்லோருக்குமே வந்து விடும். அப்படி சிரமமான ஒரு கணத்தை கடந்து போய் உதாரணமாக நிற்கிற ஒரு மனிதன்தான் இந்த "ஆள்'. பரவசமாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. சுசி கணேசனின் மாணவர்.

"ஆள்' எப்படிப்பட்ட ஆளு...?
 விடை தெரியாத விஷயங்களில் சந்தோஷமும் இருக்கும். வருத்தமும் இருக்கும். இது இந்த நேரத்தில் நடந்து விடும் என யாரும் கணக்குப் போட்டு வாழ முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சுவாரஸ்யம்தான் நாள்களைக் கடத்திக்கொண்டு இருக்கிறது. என்னதான் பர்ஃபெக்ட்டா, நாகரிகம், ஒழுக்கம் என வாழ்ந்தாலும், நம் பலவீனத்தை யாராவது ஒருவர் பயன்படுத்திதான் நம்மை நகர்த்துகிறார். அதை சாமர்த்தியமாக வெளிக்காட்டாமல் சிலர் தப்பித்துக் கொள்ள பார்ப்பார்கள். ""என்னையே எனக்கு எதிராகத் தூண்டி விடுகிறாயா'' என சிலர் கத்தி பிடிக்கும்போதுதான் பிரச்னை. ஒரு தவறு நடக்கிறது. பெரிய குற்றம் நடக்கிறது. ""பொறுத்தது போதும்டா சாமி...'' என நமக்குள் இருக்கிற மிருகம் விழித்துக் கொள்கிறது. நல்லவன் கோபம் என்றைக்கும் அடங்காது. நடப்பவற்றை பார்த்து மனம் நொந்து, வெறுத்து ஒருநாள் ஆக்ரோஷப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருப்பான் இந்த "ஆள்'. பிழைப்பு தேடி சிக்கிம் மாநிலத்துக்குப் போன நம்ம ஹீரோ, சொந்தபந்தங்களைப் பார்க்க சென்னைக்கு வருகிறார். வந்திறங்கும்போது முகம் தெரியாத ஒரு கும்பல் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் ஹீரோவைக் கொண்டு வருகிறது. அவர்கள் வகுக்கும் திட்டம். நாட்டுக்கெதிரான நாசவேலை இவற்றைக் கடந்தாரா ஹீரோ? என்பதுதான் கதை.

காமெடியும், பேய் படங்களும்தான் இப்போது கோலிவுட்டின் சக்ஸஸ் ஃபார்முலாக்கள், இப்படியொரு கதை... அதுவும் முதல் படம்...? எந்த அளவுக்கு நம்பகமானது...?
 ஓர் அறிமுக இயக்குநராக எல்லாரின் கவனத்தையும் ஈர்ப்பது அவசியம். அதற்கு காமெடியும், பேய் படங்கள் மட்டுமேதான் சரி எனச் சொல்லுவது சரியாக இருக்காது. வெற்றி எப்போதும் நல்ல சினிமா பக்கம் இருந்துகொண்டே இருக்கும். அதை எட்டிப்பிடிக்கிற ரகசியம் மட்டும் தெரிந்தால் போதும். எல்லாவற்றையும் தொடங்கி வைக்க ஒரு படம்தான் காரணமாக இருக்க முடியும். அடுத்த மூன்று வருடங்களுக்கான டிரெண்ட் செட்டராக இந்தப் படம் ஏன் இருக்கக் கூடாது? இங்கு எதுவும் நடக்கலாம். நாம் சொல்ல வருகிற கதை, ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்கிற நம்பிக்கை முதலில் நமக்கே வர வேண்டும். முதல் பட வாய்ப்பு தேடிப் போன போது, ""இதுதான் பட்ஜெட், இதுக்குள் உங்களால் படம் எடுத்துத் தர முடியுமா?'' என்றார்கள். சரி என்று தேடிப் பிடித்த கதைதான் இது. சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்தியில் வந்து வெற்றி பெற்ற "அமீர்' என்ற படத்தின் சின்ன தழுவல் இந்தப் படத்தில் இருக்கும். இதை வெளிப்படையாகச் சொல்வதற்குக் காரணம் என் திரைக்கதையின் மேல் உள்ள நம்பிக்கை.

இது மாதிரியான சினிமாவுக்கு விதார்த் புது வரவு
 இல்லையா...?
 "மைனா', "கொள்ளைக்காரன்' என விதார்த்தின் ரூட் வேறு. அவரை இந்த மாதிரியான சினிமாவுக்கு யோசிப்பது சிரமம்தான். இது ஒரு பொது மனிதனுக்கு நடக்கக்கூடிய கதை. ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒருவர்தான் இந்தப் படத்துக்கு ஹீரோ என்பதில் தீர்மானமாக இருந்தேன். இப்போதுதான் சினிமாவுக்கு வந்திருக்க வேண்டும்; ஆனால் வெற்றியும் அந்நியமாக இருக்கக் கூடாது என்கிற தீர்மானத்தில் தேடியபோது விதார்த் ஞாபகத்துக்கு வந்தார். ஒரு சுவாரஸ்யமான சினிமாவுக்கான பொறுப்பு இந்தக் கதையில் இருக்கிறது. அதை தன் தோள்களில் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு நடிப்பு வல்லமை விதார்த்துக்கு இருக்குமா? என யோசித்தேன். "மைனா' அதற்குச் சிறந்த உதாரணமாகத் தெரிந்தது. நெருங்கிப் பழகினால் அதற்குத் தகுதியான ஆளாகவும் விதார்த் இருந்தார். இந்தப் படத்தில் விதார்த்துக்கென்று ஒரு தனி ஸ்டைல், லுக் எல்லாமே இருக்கிறது. பாடி லாங்குவேஜ், சீற்றம் எல்லாவற்றிலும் புதுப் பாணியைக் கொண்டு வந்திருக்கிறார். அதனால் மிகை நடிப்பு, பில்ட் -அப் என்ற பேச்சுக்கே இடமில்லை. காதல், கிராமம் என போய்க் கொண்டிருந்தவரை, ஓர் ஆக்ஷன் ஹீரோவாகவும் முன்னெடுத்து வந்திருக்கிறேன்.

கவிஞர் வாலியின் பாடல் ஒன்றும் இருக்கிறதல்லவா....?
 ஆமாம், வாலி சாரை சந்தித்தது என் வாழ்க்கையின் பேறு. நான் கடந்து வந்த பயணங்களுக்கும், கடக்கப் போகிற மைல்களுக்கும் வாலி சாருடன் நடந்த சந்திப்பு தகுந்த ஆதாரம். ""எல்லாவற்றையும் இழந்தவனுக்கு, வாழ்வதற்கு இந்த வாழ்க்கையைத் தவிர வேறு எதுவுமே இல்லை.... எளிய மனிதர்கள்தான் எப்போதுமே வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள்... எல்லாம் இழந்தவன் தனக்கு ஊக்கம் சொல்லிக் கொள்கிறமாதிரி ஒரு பாடல் வேண்டும் சார்...'' என்று போய் நின்றேன். சின்ன இடைவெளியில் ""தத்துவப்பாடல் மாதிரி சார்...'' என்றதும் புன்னகைத்தவர்...
 ""போடா போ
 ஊர் பேசும் ஒரு நாள்...
 உன்னை நீ நம்பு
 நாளை பூமி உன் வசம்.....
 வளமான பாடல் வரிகளைத் தந்தார். அறிமுக இசையமைப்பாளர் ஜோகன் இசையில் அப்படி வந்திருக்கிறது அந்த பாடல். சில பாடல்கள் உயிரின் ஆழம் வரைக்கும் போய் தொடுமே அது மாதிரி. காலத்திற்கும் மறக்க முடியாத வகையில் அமைந்த பாட்டு அது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.