எல்லா விதமான சினிமாக்களும் வர வேண்டும்!
பதற்றமில்லாமல் தொடங்கிய படம்தான். ஆனால் நினைத்ததை விட கூடுதல் எனர்ஜியும், நேரமும் செலவழிக்கும்படி ஆகிவிட்டது.


"அஞ்சான்' எதிர்பார்ப்பு ஜுரம் கோலிவுட் தாண்டி பாலிவுட் வரை தகித்துக்கிடக்க... லிங்குசாமியின் முகத்தில் அத்தனை பரபரப்பு. ""நின்று பேச நேரம் இல்லை. இப்போ யுவனைப் பார்க்க போகிறேன். காரில் ஏறுங்க பேசிக் கொண்டே போகலாம்.'' வடபழனியிலிருந்து தி.நகர் நோக்கி பரபரத்து பாய்கிறது லிங்குவின் கார்...
எப்படி இருந்தது "அஞ்சான்' மேக்கிங்... அனைத்துப் பகுதிகளிலும் எதிர்பார்ப்பு எகிறும் அளவுக்கு படத்தின் கேன்வாஸ் என்ன...?
பதற்றமில்லாமல் தொடங்கிய படம்தான். ஆனால் நினைத்ததை விட கூடுதல் எனர்ஜியும், நேரமும் செலவழிக்கும்படி ஆகிவிட்டது. எல்லாம் முடித்து படம் பார்த்த பிறகு மனசுக்கு பிடித்த ஒரு நல்ல படம் செய்திருக்கிறோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. உங்களுக்கு பிடித்த படம் எது? என்று கேட்டால் இப்போது "அஞ்சான்'தான். அந்த அளவுக்கு திருப்தி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்கிற வேகம் எல்லாரிடமும் இருந்தது. அந்த வேகம்தான் படத்தை வேறு ஒரு விதத்தில் வடிவமைத்து, வேறு ஓர் உயரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. பெர்சனலாக எனக்கு செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்வது பிடிக்காது. புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்பதுதான் என் குணம். அதனால் எந்த உழைப்புக்கும் நான் தயாராக இருந்தேன். அதற்கு இந்த "அஞ்சான்' நல்ல உதாரணம்.
மும்பை டான், நிழல் உலக தாதாக்களின் பின்னணி என படத்தைப் பற்றி ஏரளாமான கதைகள் உலவுதே...?
பின்னணி அதுவாக இருக்கலாம். ஆனால் கதை முழுக்க முழுக்க வேறு ஒரு களத்தில் இயங்கும். எல்லா கதைகளையும் ஒரு சின்ன ஸ்பார்க்தான் தொடங்கி வைக்கும். அதை மட்டும் மனசுக்குள் தக்க வைத்து கொண்டால், தேடுவதை எட்டிப் பிடிக்கலாம். அப்படி கிடைத்த கதைதான் இதுவும். சூர்யாவுக்கு நான் சொல்லிய நான்காவது கதை இது. அதற்கு முன் சொன்ன கதைகள் சூர்யாவுக்கு பிடித்திருந்தாலும், நாங்கள் இணைவது எதனாலோ தள்ளிப் தள்ளிப் போனது. இந்தக் கதையில் இரண்டு பேருக்குமே திருப்தி. இப்போது இணைந்தால் நன்றாக இருக்கும். இதுதான் நாம் இணைய வேண்டிய முதல் படம் என இருவருக்குமே தோன்றியது. இணைந்து விட்டோம். "பையா' பட ஷூட்டிங் போதே கார்த்தியிடம் இந்தக் கதையைச் சொன்னேன். நீங்களும், சூர்யாவும் இதில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் பேச்சு இருந்தது. அதுதான் இப்போது வேறு இடத்தில் வேறு ஓர் உருவமாக வந்து நிற்கிறது. ஒரு சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னரும் மனதில் நிற்க வேண்டும். அதை நிச்சயம் செய்வான் இந்த "அஞ்சான்'. அப்புறம் யுவனோடு நான் சேர்கிற நான்காவது படம் இது.
"ஆனந்தம்' பட அப்பாஸ் கேரக்டருக்காக சந்தித்த சூர்யா இப்போ இல்லை... திரை ஆளுமை, வியாபாரம் எல்லாவற்றிலும் சூர்யாவுக்கு இருக்கிற தனித்தன்மை வியப்புக்குரியது.... எப்படி இருந்தது... அவருடன் வேலை பார்த்தது...?
ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விதத்தில் ஸ்பெஷல். ஒருவர் புதுப் புது டெக்னிக்கை திரையில் கொண்டு வந்து வித்தை காட்டுவார். சிலர் தமிழ் சினிமாவின் உயரத்தைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பார்கள். சிலருக்கு பி,சி சென்டர்கள் மீது குறி இருக்கும். இந்த மூன்றுமே சூர்யாவுக்கு மட்டும்தான் சாத்தியமாகி இருப்பதாக உணர்கிறேன். "ஆனந்தம்' பட அப்பாஸ் கேரக்டருக்காக சூர்யாவைத்தான் முதலில் சந்தித்தேன். அன்று சினிமா கணக்குகள் சரி வர புரியாமல் இருந்தவர், இன்றைக்கு பெரிய இடத்துக்கு "ஜம்ப்' ஆகி வந்திருக்கிறார். இப்படி ஒரு விஷயத்தை யோசிக்கிறேன் என எஸ்.எம்.எஸ். கொடுத்தால், மறுநாளே நமக்கு வேறு ஒரு லுக்கில் போட்டோ அனுப்புவார். இது மாதிரியான ஒரு படத்தை சூர்யாவின் உழைப்பு, பங்கு இல்லாமல் என்னால் எடுத்திருக்க முடியாது. எல்லாவற்றையும் உடைக்க வேண்டும் என்கிற வேகம்தான் அவரை இங்கு கடத்தி வந்திருக்கிறது.
பிரம்மாண்ட எதிர்பார்ப்பு... கடுமையான உழைப்பு... சின்சியர் மேக்கிங் இவையெல்லாம் இருந்தும் இன்னும் கமர்ஷியல் இயக்குநராகவே இருப்பதில் வருத்தம் இருக்கிறதா...?
எல்லாருமே கொண்டாடுகிற சினிமாவைக் கொடுப்பதில்தான் ஒரு கலைஞனுக்கு திருப்தி இருக்கிறது. சினிமா எண்டர்டெயின்மென்ட் மீடியா. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதைத்தான் நான் கொடுக்க முடியும். ஆனால் எந்தப் படத்தையும் நான் சுலபமாக எடுத்து விடவில்லை. எல்லாப் படத்துக்கும் அப்படியொரு உழைப்பு கொடுத்திருக்கிறேன். என்னைச் சுற்றி, என்னில் நடந்த பாதிப்புகள்தான் என் படத்தின் கதை. அதை கமர்ஷியல் எனவும் சொல்லி விட முடியாதே.
ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களின் வெற்றி... மறுப்பக்கம் பேய் படங்களின் தொடர் அணிவகுப்புகள் இவையெல்லாம் சேர்ந்து, எதிர்காலத்தில் அழுத்தமான கதை, சிந்தனையைத் தூண்டும் திரைக்கதை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுமோ...?
இங்கே எல்லா விதமான சினிமாக்களும் வந்தாக வேண்டும். மக்களுக்குப் பிடித்த படங்கள் மட்டுமே இங்கே ஜெயிக்கிறது. அப்படியானல் ரசனைக்கு ஏற்ப படங்கள் எடுப்பதில் தவறில்லையே. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா மாதிரியான படங்கள் வெற்றி பெற்றதற்கு அதில் இருந்த புதுமைதான் காரணம். டிஜிட்டல் சினிமா என்பது படங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. நாளுக்கு நாள் படம் ரிலீஸôகிற காலம் இது. எதைப் பார்க்கலாம், எதைத் தவிர்க்கலாம் என்பது மக்களுக்கு தெரிகிறது. பத்து கமர்ஷியல் சினிமாக்கள் வந்தால் அதில் ஒரு நல்ல சினிமா வர வேண்டும் என்று விரும்புபவன் நான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...