குறும்படங்களுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது!
பீட்சா' பட கதைக்கும் இந்தக் கதைக்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லை. ஆனால் நான் சொன்ன கதையைக் கேட்டதும், இதை "பீட்சா 2'-வாக எடுத்தால் என்ன? என்று கேட்டார் தயாரிப்பாளர். அப்படித்தான்


பீட்சா' பட கதைக்கும் இந்தக் கதைக்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லை. ஆனால் நான் சொன்ன கதையைக் கேட்டதும், இதை "பீட்சா 2'-வாக எடுத்தால் என்ன? என்று கேட்டார் தயாரிப்பாளர். அப்படித்தான் இந்தப் படம் "பீட்சா'வின் இரண்டாம் பாகமானது. அந்தக் கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?ன்னு கேட்காதவர்களே இல்லை. "பீட்சா' கதை நடக்கும் காலக் கட்டத்தில் நடக்கும் கதையாக இதை உருவாக்கியிருக்கிறோம். மற்றபடி இது தனி கதை. தனி ஸ்டைல். பளீச்சென சிரிக்கிறார் குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கும் படையெடுத்திருக்கும் மற்றுமொரு படைப்பாளி தீபன் சக்ரவர்த்தி. "தி வில்லா' மூலம் கோலிவுட் நுழையும் இளைஞர்.
""நான் கோயம்புத்தூர் பையன். இன்ஜினியரிங் படித்து விட்டு, அது தொடர்பான வேலைகளிலேயே ஆழ்ந்து கிடந்தேன். நேரம் போகவில்லையென்றால் நெட்டில் ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதுதான் வேலை. ஏதோ ஒரு வெளிநாட்டு சேனலில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஆறேழு இளைஞர்கள் போட்டி போட்டுக் குறும்படங்களை எடுப்பார்கள். அதன் சிறப்பம்சங்களை அலசி ஆராய்ந்து சிறந்த குறும்படங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இங்கேயும் அப்படி ஓர் ஏரியா கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அந்த சமயத்தில்தான் "நாளைய இயக்குநர்' அறிவிப்பு வந்தது. என்னை மாதிரியே நிறைய இளைஞர்களுக்கு அது வடிகால். நானும் படித்த படிப்பு, வேலையெல்லாவற்றையும் விட்டு விட்டு, சென்னைக்குப் பஸ் ஏறி விட்டேன்.
அமுதா', "ஆசை', "ஒரு நாள்', "காபி' என வரிசையாக குறும்படங்கள் எடுத்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடம் கற்றுக் கொடுத்தது. நிறைய கனவுகள் காண வழி கொடுத்தது. சுற்றி இருந்த நண்பர்கள் ""சினிமாவுக்கு போ''ன்னு சின்ன சின்ன அழுத்தம் தந்தார்கள். கூடவே இருந்த நல்ல உள்ளங்கள் கைப்பிடித்து மேலே தூக்கி விட்டார்கள். கிடைத்த சின்ன சின்ன இடைவெளிகளில் நிறையக் கற்றுக் கொண்டேன். அப்போதுதான் "பீட்சா' வெளிவந்து வெகுவாகப் பேசப்பட்டது. யோசித்துப் பார்த்தால் அதே மாதிரி ஒரு கதை என்னிடமும் இருந்தது. நேராக போய் தயாரிப்பாளர் சி.வி.குமாரை பார்த்து கதை சொன்னேன். கொஞ்சம் யோசித்தவர் ""சூப்பர் ஜி... நல்லாவே பண்ணலாம்...''ன்னு சில ஐடியாக்கள் தந்து இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.''
குறும்பட இயக்குநர்கள் எல்லாருக்கும் விஜய் சேதுபதிதான் ஞாபகத்துக்கு வருவார்... ஆனால் நீங்கள் புது ஹீரோவோடு வந்திருக்கீங்க....?
அவரிடம் கால்ஷீட் இல்லை. ஆனால் அவர் இந்த இடத்தில் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். விஜய் சேதுபதி எனக்கும் நல்ல நண்பர். இந்த ஸ்கிரிப்ட்டைப் படித்து விட்டு, சில கமெண்ட்ஸ் சொன்னார். அவருக்கும் நடிக்கத்தான் ஆசை.
ஆனால் அவரிடம் அப்போதைய நிலவரத்தில் ஐந்து படங்கள் கையில் இருந்தன. "சூது கவ்வும்' படம் பார்த்ததில் விஜய் சேதுபதியோடு வந்த அசோக் செல்வனைப் பிடித்திருந்தது. அசோக் செல்வனை அந்த இடத்துக்கு கொண்டு வந்து விட்டேன்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறவருக்கு இருக்கும் அந்த டெடிகேஷன்தான் எங்களைப் போன்ற முதல் பட இயக்குநர்களுக்கு தன்னம்பிக்கை தருகிற விஷயம். அந்த நம்பிக்கையை புது ஹீரோ அசோக் செல்வன் தந்திருக்கிறார். கதைக்கு உயிர் கொடுக்கிற இடத்தில் சஞ்சீத ஷெட்டி. அவரின் நேர்த்தியான நடிப்பு இந்த கதைக்கு அத்தனை பலம்.
பல ஆண்டு அனுபவம், அடி, அழுத்தம் தாங்கி வருபவர்களுக்கு சில சமயம் எடுபடாத இந்த சினிமா.... ஒரு சில குறும்பட அனுபவங்களோடு வருபவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது... இது எப்படி....?
இல்லை. எங்களுக்குள்ளும் நிறைய தடுமாற்றங்கள் இருக்கின்றன. வரிசையாக குறும்படங்கள் எடுத்து பழகிட்டோமா? எந்தக் கதைக்குத் திரைக்கதை எழுதினாலும் 10}20 நிமிடங்களுக்குள் படமே முடிந்து விடும். அவற்றையெல்லாம் மாற்ற உழைக்க வேண்டியிருக்கிறது.
நல்ல சிறுகதைகள் எழுதுபவர்களுக்கு திரையில் கதை சொல்லத் தெரியாது என்று சொல்லுவார்கள். அதே மாதிரிதான் இதுவும். சில பயிற்சிகளாலும், அனுபவத்தாலும் இதை மாற்றலாம். இப்போதுதான் குறும்பட இயக்குநர்களை மதித்து கதை கேட்கும் பழக்கமே கோலிவுட்டில் உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமா தவிர வேறு எங்கேயும் இந்த ஆரோக்கியமான நிலை இருக்கிறதா? என்று தெரியவில்லை.
குறும்பட அனுபவங்கள் நீண்ட சினிமா பயணத்துக்கு உதவுமா? என்று பல விவாதங்கள் இருந்தன. அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருகிறது. சினிமாவில்தான் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கதை சொல்லும் ஏரியா இருக்கிறது.
ஆனால் குறும்படத்தில் அப்படியல்ல. எல்லோரும் ரசிக்கிற மாதிரி, முக்கியமாக புரிகிற மாதிரி சில நிமிடங்களில் கதை சொல்லியாக வேண்டும். அப்படி பார்க்கப் போனால் குறும்படங்களுக்குதான் பெரும் பொறுப்பு இருக்கிறது. வெற்றி, தோல்வி என்று பார்க்காமல் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பார்த்தாலே எங்களது அவஸ்தைகள் தெரியும். பல அவஸ்தைகள், அனுபவங்களுக்குப் பின்தான் குறும்படத்தை உருவாக்குகிறோம். அதனால் குறும்பட உலகத்தில் இருந்து வருகிறவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...