எது மாதிரியாக இருந்தாலும் புது மாதிரி! சி.எஸ்.அமுதன்
"தமிழ்ப் பட'த்தை காமெடி தவிர்த்து வேறு எந்த வகையிலும் வைத்து பார்க்க முடியாது. போஸ்டர் பார்க்கும் போதே எல்லோருக்கும் அதன் வகை தெரிந்தது.


"தமிழ்ப் பட'த்தை காமெடி தவிர்த்து வேறு எந்த வகையிலும் வைத்து பார்க்க முடியாது. போஸ்டர் பார்க்கும் போதே எல்லோருக்கும் அதன் வகை தெரிந்தது. ஆனால் இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் "ரெண்டாவது பட'த்தை அப்படி எந்த வகையிலும் சேர்க்க முடியாது. இதுதான் என தீர்க்கமாக முடிவெடுத்தால், இல்லை இல்லை இது வேறு எதுவோ சொல்லுகிறது என தோன்றும். காமெடியாக பார்த்தால் சட்டென்று சீரியஸ் முகம் காட்டும். எந்த வகை படம் என்று பார்த்து விட்டு சொல்லுங்கள்'' வார்த்தைக்கு வார்த்தை யோசித்துப் பேசுகிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். "தமிழ்ப்படம்' மூலம் கோலிவுட் ஸ்டார்களுக்கு கிலி கொடுத்தவர்.
எந்த வகை படம் இதுவென உங்களுக்கே குழப்பம் இருந்தால்.... ரசிகர்கள் என்ன ஆவார்கள்...?
ரசிகர்கள் எப்போதுமே தெளிவாக இருக்கிறார்கள். ""இது நல்ல படம் பாருங்கள்'' என வரும் பப்ளிசிட்டிகளை அவர்கள் நம்புவதே இல்லை. ஏதோ ஒரு ரசிகன் பார்த்து விட்டு வெளியே வந்து ""நல்ல படம் பார்க்கலாம் பாஸ்....'' என மெசேஜ் தட்டினால்தான் நம்புகிறார்கள். மல்டி ஸ்டார், ஸ்டார் இயக்குநர், கிளாமர் குயின் எதுவுமே இல்லாத படங்கள்தான் இந்த வருட ஹிட். அந்த வகைதான் இந்தப்படம். ஆனால் காமெடியா, சீரியஸô இதில் எது அதிகம் இருக்குமென்று சொல்லத் தெரியவில்லை. ஒரு கதையென்றால் ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சம்பந்தமான சிலர், ஒரு காமெடியன், வில்லன் இதுவெல்லாம்தான் இருக்கும். இதையெல்லாம் தவிர்த்து இதில் முப்பது பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட இல்லாமல் கதை நகராது. இதை எந்த வகையிலும் சேர்க்க முடியாதென சொன்னதற்குக் காரணம், திரைக்கதை ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு முகம் காட்டும். இதுவரைக்கும் பார்த்த போது, இது எந்த வகை படமென்று எங்களுக்கே புரியவில்லை. சென்டிமெண்ட் கிடையாது. எமோஷன் கொஞ்சமுமில்லை. காதல் இருக்கிறது. சண்டை காட்சிகள் நிறைந்த படம். உருக வைக்கும் திரைக்காவியம் என எதுவுமே போட முடியாது. எது மாதிரியாகவும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கும். அது எப்படி இருக்கும் என்பதற்காகவே ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்தாக வேண்டும்.
அப்படி என்ன சுவராஸ்யம் இருக்கும்...?
சென்னை திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருக்கிற மூன்று இளைஞர்கள். காதல், நட்பு, துரோகம் என அவர்களின் வாழ்க்கையில் வந்து போகும் மூன்று பெண்கள். இந்த ஆறு பேரைப் பற்றியதுதான் கதை. இது தவிர இன்னும் முப்பது பேர். அவர்களுக்கு கதையில் என்ன வேலை? அதுதான் கதையின் சுவாரஸ்யம். இறுதி வரை கணிக்க முடியாத விறுவிறுப்புக்கு உத்ரவாதம் இருக்கிறது. ரிச்சர்ட் என்னுடன் படித்தவன். கிட்டத்தட்ட 16 வருஷ பழக்கம். எப்போதுமே மிடுக்காக இருக்கும் மேனரிஸம்தான் அவன் பாணி. ஆனால் அதையெல்லாம் மாற்றி உலவ விட்டிருக்கிறேன். சும்மா அரை மணி நேரம் பார்த்து விட்டு அவ்வளவு சந்தோஷப்பட்டான். இனி இதை பார்க்க மாட்டேன். ""தியேட்டரில் ரசிகர்களோடு விசில் அடித்து பார்க்க வேண்டிய படம் இது...''வென்று சொல்லி, அதன்பின் எந்த காட்சியையும் பார்க்கவில்லை. "களவாணி' படம் பார்த்து விட்டு விமலுக்கு வாழ்த்து சொன்னேன். ""தமிழ்ப்படம்' முடிந்த பின் அடுத்தப் படத்தில் நடிக்கிறீங்க...''ன்னு சொல்லியிருந்தேன். அதுதான் இது. அர்விந்தும் என் நண்பன். அவனுக்கு நல்ல பிரேக் காத்திருக்கிறது. விமலுக்கு ஜோடி ரம்யா நம்பீசன். கதையில் செம ஸ்கோப் இருக்கிறது. ரம்யாவின் கேரக்டருக்கு முதலில் நான் பிடித்தது விஜயலெட்சுமியை, ஆனால் அவர் பழகிய விதம், மேனரிஸங்கள் எல்லாமே அவரை இடம் மாற்றி போட்டு விட்டன. இத்தனை வருஷம் பார்க்காத விஜயலெட்சுமியை இதில் பார்க்கலாம். கிளாமரில் உச்சத்துக்குப் போயிருக்கிறார். இவர்களையெல்லாம் கதையின் புள்ளிகளாக வைத்து இணைத்திருக்கிறேன். படம் பாருங்கள்... புது அனுபவம் உண்டாகும்...
ஒரு புறம் பார்த்தால் தமிழ் சினிமாவின் அடுத்த
கட்டம் பற்றி மேடைக்கு மேடை முழங்குகிறார்கள்.... ஆனால் உங்களை மாதிரியான சில பேர் சினிமாவை சீரியஸôகக் கூட எடுத்துக் கொள்வதில்லேயே? ஏன்...?
எனக்கு சீரியஸ் சினிமா பிடிக்கும். அதை எடுக்கிறவர்களை இன்னும் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான சினிமாவுக்குள் என்னால் போக முடியாது. இப்படித்தான் சினிமாக்கள் இருக்க வேண்டும் என எந்தக் கொள்கையும் எனக்கு கிடையாது. போகிற போக்கில் கதை கிடைக்கும். அப்படித்தான் "தமிழ்ப்பட'த்தை பிடித்தேன். அதில் நிச்சயம் கதை கிடையாது. "ரெண்டாவது பட'த்தில் இருக்கும் கதை என்ன பாணியென்று நிச்சயம் தெரியாது. இதுதான் என் சினிமா. "தமிழ்ப்படம்' தயாரிப்பாளரை நிம்மதியாக தூங்க வைத்தேன். ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகிக் கொண்டிருந்த ரசிகர்களை அந்தப்படம் மூலம் சிரிக்க வைத்தேன். இது போதும்.
நிறைய கோலிவுட் ஸ்டார்களுக்கு "தமிழ்ப்படம்' தந்த வருத்தம் இன்னமும் இருக்கும்தானே...? என்னவெல்லாம் ரியாக்ஷன் கிடைத்தது...?
இப்போது பார்த்தால் கூட நிறைய பேர் ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். எங்கேயாவது பார்த்தால் பேசாமல் போகிறவர்களை கூட பார்த்திருக்கிறேன். ""ஏன் என்னை மட்டும் குறி வைத்தீர்கள்'' என சிலர் கேட்டார்கள். ""ஜாலியா ஒரு சினிமா. தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டோம். யாரையும் கஷ்டப்படுத்தலை...''ன்னு சொன்னேன். இருந்தும் அவர்களுக்கு வருத்தம்தான். இன்னும் சில பேர் ""ரசித்து பார்த்தேன்...''னு சொன்னாங்க. முதல் ஆளா பாரதிராஜா சார் ""ஏய் என்னையே கிண்டல் பண்ணிட்டீயா...''ன்னு கேட்டார். பதில் சொல்ல தெரியாமல் நின்றேன். அந்த வருத்தங்களையெல்லாம் இந்த "ரெண்டாவது படம்' மாற்றும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...