சினிமாவில் எந்த லாஜிக்கும் கிடையாது!லட்சுமி மேனன்
விழிகளும், இதழ்களும் ஒரு சேர படபடக்கிறது.... இந்த நொடி இது போதும் என்கிற அளவுக்கு உடல் மொழி கவனம் ஈர்க்கிறது...


விழிகளும், இதழ்களும் ஒரு சேர படபடக்கிறது.... இந்த நொடி இது போதும் என்கிற அளவுக்கு உடல் மொழி கவனம் ஈர்க்கிறது... கன்னக்குழியில் கவனம் புதைத்தால்... கண்களால் "பளீர்' சிரிப்பு சிரிக்கிறார்
லட்சுமி மேனன்...
கோலிவுட்டில் உங்களுக்குதான் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்... ஒரு சில படங்களிலேயே ஹிட் ஹீரோயின் இமேஜ் உங்கள் வசம்... இது எதிர்பார்த்த இடம்தானா...?
இந்த கேள்வி எனக்கு பிடிச்சிருக்கு... பாட்டி, அம்மா எல்லோருமே கேரளத்தில் டான்ஸ் ஸ்கூல் டீச்சர். அதுதான் என்னை சினிமா நோக்கி தள்ளி விட்டது. ""சினிமாவில் நடிக்க போறேன்...''னு சொன்னதும் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் ஷாக். கெஞ்சி கெஞ்சி இரண்டு வருடம் டைம் கேட்டு நடிக்க வந்தேன். இப்போது கிடைத்திருக்கிற இந்த பெயருக்கு நான் பெரிய உழைப்பை கொடுத்திருப்பதாக நினைக்கவில்லை. எல்லாம் அதுவாகவே நடந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இதுவரை ரிலீசான மூன்று படங்களின் கதையைக் கேட்டதில்லை. பிரபுசாலமன் சார் வித்தியாசமாகச் செய்வார் என்று நம்பி வந்தேன். அந்த நம்பிக்கைக்கு நல்ல லைஃப் கொடுத்தார். சசிகுமார் சாருக்கு என் மீது நிறைய அக்கறை. அதனால் அவரையும் நம்பினேன். இந்த வருடம் நல்ல வருடம். அவ்வளவுதான்.
சசிகுமாருடன் இணைத்து வந்த கிசுகிசுக்களால்தான் விஷால், விமல், கௌதம்கார்த்திக் ஹீரோக்கள் பக்கம் உங்கள் கவனம் திரும்பியிருக்கிறதா....?
எனக்கு நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே கிடையாது. சசி சாரை எனக்கு பிடிக்கும். அவரின் முந்தைய படங்கள் பார்த்திருக்கிறேன். "சுந்தரபாண்டியன்' படத்தில் நடிக்க கேட்டார். நடித்தேன். அந்த படம் ஹிட் ஆனதும், அடுத்த படத்திலும் நடிக்க அழைத்தார். நடித்தேன். இதில் என்ன இருக்கிறது? எனக்கென எந்த கதையும், கேரக்டரும் யாரும் உருவாக்கி வைத்திருப்பதாக உணரவில்லை. வரும் வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டால் அப்புறம் என்ன நடிகை? நல்ல கதைகளில் இந்த பொண்ணு நிச்சயம் நடிக்கும் என நம்பி வருபவர்களுக்கு என் கால்ஷீட் உண்டு. கிசுகிசுக்களையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
மாடர்ன் உடைகளில் இன்னும் அதீத அழகு இருக்கிறது... இப்போது "சிப்பாய்' பட ஸ்டில்ஸ் கூட ரசிக்க வைக்கிறது... இருந்தும் ஏன் இதுவரை தாவணி, பாவடையில் மட்டும் நடித்தீர்கள்...?
எனக்கும் மாடர்ன் உடைகள்தான் பிடிக்கும். "கும்கி' படத்துக்குப் பின் அப்படியொரு படத்தில்தான் நடிக்க விரும்பினேன். ஆனால் "சுந்தரபாண்டியன்' படம் கிராமத்து கதை என்பதால் பாவாடை, தாவணிக்கே முக்கியத்துவம் இருந்தது. "குட்டிப்புலி' படமும் அப்படித்தான். இனி இரண்டு படங்களாவது வேறு மாதிரியாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். "கும்கி' மாதிரி, "சுந்தரபாண்டியன்' மாதிரி இருந்தால் கூட பரவாயில்லை. கறுப்பு மை பூசி, மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என கேட்கிறார்கள். அதனால்தான் அந்தப் படங்களையெல்லாம் விட்டு விட்டு "சிப்பாய்', "மஞ்சப்பை' என கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக நடிக்க வந்து விட்டேன்.
ஹிட் படங்கள் அந்நியமில்லை... தனி ரசிகர் கூட்டம்... முன்னணி இயக்குநர்களின் படங்கள்... நிதானமான பயணம்தான்... ஆனால் இரண்டாவது படத்திலேயே விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போடுகிறவர்களும் இருக்காங்களே...?
அந்த நடிகர், இந்த நடிகர் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். இதுவரை கதை கேட்கவில்லை. ஆனால் இனி அப்படி இருக்க முடியுமா? என்று தெரியவில்லை. சில இடங்களில் நம் முந்தைய முடிவுகளை மாற்றியாக வேண்டும். இனி வரும் காலங்களில் எனக்கு நல்ல கதையும், அதைச் சரியாக வழி நடத்துகிற இயக்குநரும்தான் முக்கியம். விஜய், அஜித் கூட நடிக்கிற பக்குவம் எனக்கு வரலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் நாள் ஆகும். அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள நம்பகமான கதைகளில் நடித்து என்னை நான் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்டார் நடிகர்கள் இப்போதைக்குத் தேவையில்லை. ஒவ்வொரு படத்திலும் ஏற்படுகிற திருப்திதான்
முக்கியம்.
விஷால் வரைக்கும் வந்தாகி விட்டது.... இனியும் கதைதான் உங்களுக்கு முக்கியமா...?
சினிமாவுக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது. தாய் மொழி மலையாளம் என்றாலும், தமிழில்தான் நடிக்க பிடிக்கிறது. கதைகள், இயக்குநர்கள் என வித்தியசமான சினிமா இங்கே இருக்கிறது. அதற்காக மலையாள சினிமாவை குறைத்துச் சொல்லவில்லை. இப்போது கூட பாண்டிய நாடு. முந்தைய படங்களைப் போல இதிலும் எனக்கொரு சின்ன பங்கு உண்டு. கதையின் பயணத்தில் நானும் முக்கியமான பொண்ணு, தமிழில் பெரிய ஹீரோக்களோடு நடிக்க வாய்ப்புகள் வராமல் போனதில் வருத்தம்தான். ஆனால் சினிமாவில் பெரிதாக எந்த லாஜிக்கும் கிடையாது. நாளைக்கே விஜய், அஜித் கூட நடிக்கும் வாய்ப்பு வரலாம். அப்படி வந்தால் நடிக்க மாட்டேன் எனச் சொல்ல முடியாது. சினிமாவுக்கு வந்த புதிதில் கதைகளைப் பெரிதாக கேட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனால் இனி தனி பொறுப்பு இருக்கிறது. அதற்காக கதையை நிச்சயம் கேட்க வேண்டும்.
சரி உங்கள் ரோல் மாடல் யார்...?
நயன்தாரா... ஆச்சரியமாக இருக்கா..? அதுதான் உண்மை. தென்னிந்திய சினிமாக்களில் பத்து வருடங்களைக் கடந்த பின்னரும் நயன்தான் நம்பர் ஒன். அவரின் அனுபவம், இந்த சின்ன வயதில் யாரும் அடையாத ஒன்று. மீண்டும் சினிமாவுக்கு வந்தால் வாய்ப்பு இருக்குமா? என்று பலரும் யோசித்தார்கள். அதையெல்லாம் உடைத்து விட்டு அவ்வளவு படங்களில் நடிக்கிறார். ராஜா ராணி பார்த்தேன். சான்úஸ இல்லை. அனுஷ்கா, த்ரிஷா பிடிக்கும். கமர்ஷியல் சினிமாக்களில் இருந்தாலும், பெயர் சொல்லும் அளவுக்கு நல்ல படங்களிலும் நடிக்கிறார்கள்.
பத்து வருடமாக இங்கே த்ரிஷாவின் இடம் அப்படியே இருக்கிறது. இதுவும் ஆச்சரியம்தான்.
உங்கள் அழகின் ரகசியம் ப்ளீஸ்...?
நீச்சல் பிடிக்கும். குட்டி குட்டி தூக்கம் போடுவேன். சினிமாவுக்கு வந்த பின்பும் அதை விட முடியவில்லை. நீச்சல் அடித்தால் மனசு லேசாகும். உடல் எடை குறையும். தேகத்துக்கு நல்ல கலர் கிடைக்கும். இதுதான் என் அழகு ரகசியம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...