எனக்கு கிடைத்தது எல்லாமே கிஃப்ட்: கார்த்தி
"ஆல் இன் ஆல் அழகுராஜா'வாக தீபாவளி ரேஸில் நிற்கிறார் கார்த்தி. ஒரு காலை பொழுதில் நடந்த நீண்ட உரையாடல்களில் பளீச்சென மனம் திறந்தார்....


"ஆல் இன் ஆல் அழகுராஜா'வாக தீபாவளி ரேஸில் நிற்கிறார் கார்த்தி. ஒரு காலை பொழுதில் நடந்த நீண்ட உரையாடல்களில் பளீச்சென மனம் திறந்தார்....
ராஜேஷ் - சந்தானம் கூட்டணி... ஹீரோ, ஹீரோயின் மட்டும்தான் மாறுவாங்க... மற்றபடி "அழகுராஜா' எப்படியிருக்கும்...?
"பருத்தி வீரன்' ஷூட்டிங்கின் போதுதான், அச்சு அசலா ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தேன். "நான் மகான் அல்ல', "சிறுத்தை' படங்கள் செய்யும் போது, நகர வாழ்க்கையின் வேறு பக்கங்களை பார்க்க முடிந்தது. இனி ஒரு புது மாதிரி இருக்க ஆசை வந்த போதுதான், கும்பகோணம் பக்கம் ஆரம்பித்து அம்பாசமுத்திரம் போறோம் என்றார் இயக்குநர் ராஜேஷ்.
கிராமம் கலந்த நகரங்களின் பின்னணியில் ஒரு படம் நடிக்க அவ்வளவு ஆர்வம் எனக்குள். ராஜேஷ் படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அந்த விதி இதிலும் மீறப்படவில்லை. லோக்கல் கேபிள் டி.வி. நடத்தும் எனக்கு அதை சன் டி.வி. மாதிரி பெரிய சேனல் ஆக்கிவிட ஆசை. இதற்கிடையே எனக்கும் காஜலுக்கும் க்ரிட்டிங் கார்டு காதல். ராதிகா ஆப்தேவுக்கு என் மேல் பப்ளி லவ். இதற்கு நடுவில்தான் சந்தானம் கொடுக்கிற காமெடி மிக்ஸர். ரொம்பவே ஸ்டைலிஸô படம் வந்திருக்கிறது. ""ஒரு தியேட்டர்ல இருக்குற அத்தனை ஆடியன்ஸýகளையும் படம் முடிகிற வரைக்கும் சிரிக்க வைக்கிற மேஜிக் தெரிந்த டைரக்டர்கள் இங்கே குறைவு. அந்த இடத்தில் ராஜேஷ் இருக்கார்'' என்று அண்ணன் ஒரு முறை சொல்லியிருந்தார். அந்த உண்மையை ராஜேஷுடன் இருந்த
நாள்களில் உணர முடிந்தது.
காமெடி சரவெடிக்கு உத்திரவாதம் தெரிகிறது... ஆனால் அதே சரக்கு சலம்பல் சந்தானம்தான் இதிலும் இருப்பாரா...?
காமெடி மட்டும்தான் ராஜேஷின் ஸ்கிரிப்ட் ஸ்டைல். இதிலும் அப்படித்தான். ஆனால் மற்ற படங்களில் இல்லாத பாசம், சென்டிமென்ட் இதில் அதிகமாக இருக்கும். இதற்கு முன்னால் ராஜேஷ் படங்களில் சந்தானம் செய்ததை அப்படியே செய்தால் போரடிக்கும் என்று எனக்கும் தெரியும். அதனால் இதில் சந்தானத்துக்கு பஞ்ச் வசனங்கள் கிடையாது. பாடி லாங்குவேஜ் மூலமாகவே சந்தானம் காமெடி செய்திருப்பார். கரீனாசோப்ரா என்ற கதாபாத்திரம் சந்தானத்துக்கு. தடதடக்கும் வசனங்கள் மூலமாக மட்டுமே காமெடி கொடுத்த சந்தானத்துக்கு இது பலப்பரீட்சை. அவரும் முதல் படத்தில் நடிக்க வந்தது மாதிரி அத்தனை ஹோம் ஒர்க் செய்திருக்கிறார். ஒவ்வோர் இடத்திலும் எதிர்பார்க்காத திருப்பங்கள் இருப்பதால், இதை வழக்கமான காமெடி படமாக பார்க்க முடியாது. படத்தின் கதையை நாம் எல்லோருமே எங்கேயாவது கிராஸ் செய்து வந்திருப்போம். அதனால் இது வேறு மாதிரியான உணர்வை தரும்.
காஜலுடன் இது இரண்டாவது படம் போல...?
இதற்கு முன் நாங்கள் இணைந்த "நான் மகான் அல்ல' ஹிட். அந்த கெமிஸ்ட்ரி ஃபார்முலா இதிலும் கைக் கொடுக்கும். படத்தை தாண்டி எங்களுக்கு நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் நடித்த ஓரிரு விளம்பரங்களில் கூட எங்களுக்கு நல்ல பெயர். படத்தில் காஜல் வரும் ஒரு ப்ளாஷ் பேக் அத்தனை சுவராஸ்யம். சித்ரா தேவி ப்ரியா என்ற கேரக்டரில் வருகிறார். தான் இந்த உலகத்தில் பிறந்ததற்காக இந்த உலகம் கொடுத்து வைத்திருக்கிறது என நினைக்கும் கேரக்டர். அவரின் அந்த பெயருக்கே ஒரு கதை வைத்து திரைக்கதையை இன்னும் கலகலப்பாக்கி இருக்கிறார் ராஜேஷ். எப்போதாவது கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிற பக்குவம் நிறைய நடிகைகளுக்கு இருக்காது. காஜல் அந்த பட்டியலில் இல்லை. "குஷி' படத்தில் அண்ணிக்கு காட்சிக்கு காட்சி வேலை இருக்கும். அது மாதிரி ஒரு ரோல்தான் சித்ரா தேவி ப்ரியா.
அஜித்தின் "ஆரம்பம்', விஷாலின் "பாண்டிய நாடு' படங்களும் ரேஸில் நிற்குதே... நட்பாக இருக்கிறவர்களுடன் பலத்த போட்டி இருக்கும் போல...?
போட்டி நல்ல விஷயம்தானே... அஜித்தை ரொம்பவே பிடிக்கும். "மங்காத்தா'வில் அறிமுக நடிகர்களுடன் ஈகோ இல்லாமல் நடித்திருப்பார். அவரை சந்தித்துப் பேசினால் அத்தனை சிலிர்ப்பு வரும். இப்போது கூட சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் பக்கத்தில்தான் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இருந்தேன். நிறைய விஷயங்கள் பேசினார். கலப்பு இல்லாமல் பேசும் அவர் வார்த்தைகளில் அத்தனை உண்மை. சினிமா தாண்டிய அவரது பேச்சு அத்தனை இயல்பு. என் படங்கள் பற்றி நிறையப் பேசினார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் என் மேல் வைத்திருக்கும் அக்கறையைச் சொல்லியது. பெங்களூருக்கும், ஊட்டிக்கும் தனியாக பைக்கில் போய்விட்டு வந்ததை, ரொம்பவே சாதாரணமாகச் சொன்ன போது, அஜித் வியப்பாக தெரிந்தார். விஷாலும் நல்ல நண்பர்தான். சந்திக்கும் போது சினிமாவைத் தாண்டி நிறையப் பேசிக் கொள்வோம். எல்லாப் படங்களுமே வெற்றிப் பெற வேண்டும் அதுதான் என் ஆசை.
"பிரியாணி',"காளி'ன்னு அடுத்தடுத்த படங்களுக்கும் நிறைய வேலை இருக்கும் போல...?
வெங்கட்பிரபுவின் வேலை ரொம்பவே பிடித்திருக்கிறது. யோசிக்கிறதே பெரிதாகத்தான் யோசிக்கிறார். தீபாவளிக்கு எப்படி "அழகுராஜா'வோ, பொங்கலுக்கு "பிரியாணி'. அதுவும் கலகலப்பாக இருக்கும். இரண்டு படங்களையும் ஜாலியாக முடித்து விட்டு அமர்ந்த போதுதான் "அட்டக்கத்தி' ரஞ்சித் "காளி' கதை சொன்னார். வட சென்னை கதை. இதுவரைக்கும் உழைத்ததை விட பத்து மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். என் படங்களில் "பருத்தி வீரன்', "ஆயிரத்தில் ஒருவன்' படங்களுக்கு நல்ல இடம் உண்டு. சிலர் பேசும் போது, ""அப்போதிருந்த உங்கள் பாதை இப்போது ஏன் மாறி விட்டது'' என்பது போல் பேசுவார்கள். அதற்குத் தீனியாக இந்தப் படம் இருக்கும். நிறைய புது விஷயங்கள் வைத்திருக்கிறார் ரஞ்சித். அவர் எதிர்பார்ப்பதை செய்து விட்டால் என் கேரியருக்கே பெருமை சேர்க்கிற படமாக இருக்கும். கதையை கேட்டவர்கள் எல்லாம் பெரிய எபிக் மாதிரி இருக்குன்னு சொல்லியிருக்கிறார்கள். நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய படமாகவும் இருக்கும். இப்போ "காளி'ன்னு சொல்றீங்க.. அநேகமாக தலைப்பு மாறலாம்.
சினிமா குடும்பமாக இருந்தாலும், துளி சினிமா வாசனை இல்லாத வளர்ப்பு... அமெரிக்க படிப்பு இதையெல்லாம் தாண்டி சினிமாவில் ஓர் இடம்.... நினைக்கும் போது என்ன தோன்றும்....?
எனக்கு கிடைத்தது எல்லாமே கிஃப்ட். சினிமா வாசனையே இல்லாமல் எம்.எஸ்.படித்து முடித்தேன். திடீரென்று பார்த்தால் மணிரத்னம் அசிஸ்டென்ட். அமீர், செல்வராகவன் படங்களில் யாரும் தொட முடியாத இடத்துக்குப் போனேன். முதல் படத்திலேயே நிமிர்ந்து பார்க்கும் எல்லை வரை போனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆனால், சினிமாவில் நுழைந்து எனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டதே பெரிய விஷயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...