எனக்கு நானேதான் போட்டி!
எந்தப் படத்தை பற்றி பேசலாம் என்பதை யோசிக்கவே நேரம் பிடிக்கிறது... "ரம்மி', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "பண்ணையாரும் பத்மினியும்', "சங்குதேவன்' இதுவெல்லாம் விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள்.


எந்தப் படத்தை பற்றி பேசலாம் என்பதை யோசிக்கவே நேரம் பிடிக்கிறது... "ரம்மி', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "பண்ணையாரும் பத்மினியும்', "சங்குதேவன்' இதுவெல்லாம் விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள். இதைத்தவிர, 5 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். இன்னும் ஏராளமான கதைகள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. ஒரு ரம்மியமான சந்திப்பில் பளிச்சென மனம் திறந்தார் விஜய் சேதுபதி...
பெரிய நடிகர்களே வெற்றிக்குத் தடுமாறும் போது, "பீட்சா', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்',
"சூதுகவ்வும்'ன்னு பிரகாசமாக இருக்கிறதே...?
எல்லோருக்கும் அதே ஆச்சரியம்தான். இந்த மேஜிக் எப்படி நடந்து முடிந்ததென நினைத்துப் பார்த்தால் எனக்கு நிறைய ஆச்சரியம். ஒவ்வொரு படத்துக்கும் நான் கொடுத்த உழைப்பைத் தாண்டி, என்னை நடிக்க வைக்க முடியுமென்று நம்பிய இயக்குநர்கள் கையில்தான் இந்த வெற்றியெல்லாம் இருக்கிறது. "தென்மேற்கு பருவக்காற்று' படம் முடித்தவுடன், இரண்டு வருடங்கள் எனக்குப் படமே இல்லை. "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஷூட்டிங்கிற்கு அவ்வப்போது போய் விட்டு வருவேன். அந்த படத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. வாய்ப்பே இல்லாமல் இருந்தபோது, வந்த நிதானம்தான் அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளைத் தேடித் தந்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பதை ஒவ்வொரு படத்திலும் செய்து முடித்து விட்டால் என் ஒட்டு மொத்த கேரியருக்கே பெருமை சேர்ந்து விடும். அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
ஒரு வெற்றி வந்து விட்டாலே, மாஸ் கதை, கமர்ஷியல் சினிமா, பெரிய இயக்குநர்கள்ன்னு யோசனை பெரிதாக இருக்கும். இருந்தும்... இன்னும் புதுமுக இயக்குநர்களையே நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா...?
சினிமா கனவில் ஜெயிக்க துடிக்கிற அறிமுக இயக்குநர்கள்தான் நிறைய புது விஷயங்களை வைத்திருப்பார்கள். அதற்காக முன்னணி இயக்குநர்களைக் குறை சொல்லவில்லை. யாராக இருந்தாலும் நான் கதை கேட்காமல் நடிக்க மாட்டேன். இது என் சினிமா பாலிஸி. எந்த இயக்குநராக இருந்தாலும், கதைதான் அழுத்தமாக வேண்டும். ஒரு விஷயத்தை திருத்தமாக கையாளுகிற இயக்குநர்களின் கையில்தான் நல்ல சினிமா இருக்கும். அதைத் தேடித்தான் நான் போகிறேன். என் படங்களுக்கு பெரிய வியாபாரம் கிடையாது. முதல் நாள்
ஓப்பனிங்கும் இருக்காது. ஆனால் இதையெல்லாம் தாண்டி என் சினிமா ஜெயிக்கும்.
"ரம்மி', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "பண்ணையாரும் பத்மினியும்' எல்லா தலைப்புகளுமே கவனத்தை ஈர்க்குதே...?
நிச்சயமாக படங்களும் அப்படித்தான் இருக்கும். "பீட்சா'வுக்குப் பின் கேட்ட கதைகளில் எனக்கு பிடித்த கதை "ரம்மி'. 20 வருஷத்துக்கு மேலாக சினிமாவில் இருக்கிற பாலகிருஷ்ணன் இயக்குகிறார். நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்ன்னு சொல்லுவாங்களே அதுதான் கதை. நாம ஒரு திசையை நோக்கி பயணிக்க நினைத்தால், வாழ்க்கை நம்மை வேறு ஓர் இடத்துக்கு இழுத்துட்டுப் போகும். அப்படி போகிற போது நடக்கிற சம்பவங்கள்தான் "ரம்மி'. இனிகோ பிரபாகர், சூரி இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறார்கள். "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' கொஞ்சம் மெச்சூர்டா இருக்கும். பண்ணையாருக்கும் பத்மினி என்ற காருக்கும் இருக்கிற ரிலேஷன் ஷிப்தான் "பண்ணையாரும் பத்மினியும்'. இதில் எனக்கு கார் டிரைவர் கேரக்டர்.
"சங்குதேவன்' படம் மூலமா தயாரிப்பாளராகவும் களம் இறங்கி விட்டீர்களே...?
நான் தயாரிப்பாளர் கிடையாது. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்க உள்ளேன். ஜேஎஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. டிப்பர் லாரி டிரைவர் வேடம். சில நல்ல அனுபவங்களை இந்த படம் கொடுக்கும் என நினைக்கிறேன்.
உங்களையும் சேர்த்து அடுத்த செட் ஹீரோக்கள் திகுதிகுன்னு வந்துட்டாங்க. யாரை உங்களுக்குப் பிடிக்கிறது? அவர்களை எப்படி பார்க்குறீங்க..?
எனக்கு சிவகார்த்திக்கேயனை பிடிக்கும். அவருடைய டைமிங் சென்ஸ் வியப்பாக இருக்கிறது. அவரைப் பார்க்கும் போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. சமகாலத்தில் இப்படி ஓர் ஆள் பக்கத்தில் இருப்பது நல்லதுதான். "அட்டக்கத்தி' தினேஷ் பிடித்திருந்தது.
அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸ்ல அஜித், விஜய், விக்ரம், சூர்யா மாதிரி சிலர்தான் இருக்காங்க. சீரியஸ் சினிமாவுக்குள் தனுஷ் போயிட்டார். இனி அடுத்த தலைமுறை நீங்கள்தான். சிவகார்த்திக்கேயன், விஜய்சேதுபதின்னு அடுத்த ரேஸþக்கு சில பேர் வந்துட்டீங்க.. இப்போ உங்க ப்ளான் என்ன...?
யாராக இருந்தாலும் ஹிட் முதலிடம் தரும். ஆனால், திறமைதான் நம் காலத்துக்குப் பின்னும் நிற்கும். எனக்கு ஜெயிக்கணும்ங்கிற வெறியை விட என் கேரக்டருக்கு லைஃப் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் எப்போதும் மனதில் தேங்கி நிற்கும். இப்போதுதான் ஒவ்வொரு படம், ஒவ்வொரு நாள் என நல்ல வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கென எந்த ஹிஸ்ட்ரியும் இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். ஹீரோவாகி விட்டேன். இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போட்டின்னா எனக்கு நானேதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...