அமலாபால் இப்போது இன்னும் அழகு. விஜய்யுடன் "தலைவா', ஜெயம் ரவியுடன் "நிமிர்ந்து நில்' என அடுத்த கட்ட ரவுண்டில் இன்னும் அழுத்தமாக கால் பதிக்க இருக்கிறார். இதழ்களும்... இமைகளும்... இனிமையாகப் படபடக்க பேசுகிறார் அமலாபால்:
வரிசையாக ஹிட் படங்கள் இருந்தும்... ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவு நிதானம் தேவையா?
ஆமாம், "தெய்வத்திருமகள்' சமயத்தில் எல்லோரும் வாழ்த்தி பேசினாங்க. "வேட்டை' படத்தில் கமர்ஷியல் இடத்துக்கு வந்த போது, சிலருக்கு பிடிக்கலை. அதனால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளில் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். என் லெவல் இப்போது கூடியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் யாரையும் தவிர்க்கலை. கதை பிடிச்சிருந்தா உடனே ஒ.கே. சொல்லுவதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. என் முடிவுகளை நானே சுதந்திரமாக எடுக்கிறேன். ஒன்றுமே தெரியாத என்னை என் நடிப்பை வைத்து எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அவங்க நினைக்கிறபடியே நான் நடிக்க வேண்டும். அதுதான் எல்லோரின் எதிர்பார்ப்புமாக இருக்கும்.
"தலைவா', "நிமிர்ந்து நில்' இரண்டுமே ஸ்டார் வேல்யூ படங்கள்... கமர்ஷியலும் தவிர்க்க முடியாத இடத்தில் அங்கம் வகிக்கும்... இருந்தும், அப்படி என்ன நீங்கள் எதிர்பார்க்கும் இடங்கள் இதில் இருக்கும்...?
எனக்கு கதைகள்தான் முக்கியம். "சிந்து சமவெளி' பட பரபரப்புக்காக அதே மாதிரி படங்களில் நடிச்சிருந்தா இந்த இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். "மைனா' நல்ல திட்டமிடலோடு நடித்த படம். ஆனால் "சிந்து சமவெளி'தான் முந்திக் கொண்டது. அந்த சமயத்தில் தடுமாற்றம் இருந்தது. ஆனால் எந்த தப்பான இடமும் கிடைக்கலை. சில விஷயங்களை மறந்து விடலாம். இப்போதெல்லாம் என்ன கதை? என்ன கேரக்டர் என்றுதான் கேட்கிறேன். மலையாளத்தில் நான் நடித்த "ரன் பேபி ரன்' படத்தை பார்த்து பிடித்துப் போனதால் நடிகர் விஜய்தான் "தலைவா' படத்துக்கு என்னை அழைத்து வந்தார். அந்த கேரக்டருக்காக முதலில் தீபிகா படுகோன், சோனம் கபூர் என எல்லோரிடமும் பேசி இருக்காங்க. அதன் பின்தான் நான் வந்தேன். சமுத்திரக்கனி சார் அழைத்து "நிமிர்ந்து நில்' கதை சொன்ன போது, ""சார் நானே நடிக்கிறேன்''னு உள்ளே வந்து விட்டேன். இது இரண்டுமே நல்ல இடம் கொடுக்கும்.
முழு ரொமான்டிக் சப்ஜெக்டில் நடிப்பதுதான் இப்போதெல்லாம் ஹீரோயின்களுக்கு பிடிக்கிறது... நல்ல படங்களில் நடித்த சில ஹீரோயின்களுக்கு இப்போது
சினிமாவில் பெரிய லைஃப் இல்லையே...?
எல்லோருக்கும் ஓர் இடம் தேவைப்படுகிறது. "வானம்', "அருந்ததி' படங்களில் வந்த அனுஷ்காவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அதே மாதிரியான படங்களில் மட்டுமே அனுஷ்கா நடிக்கவில்லை, அனுஷ்கா அதே மாதிரிதான் நடிக்க வேண்டும் என யாரும் கேட்கவும் இல்லை. "சிங்கம்' மாதிரியான படங்களில் வரும் அனுஷ்காவையும் பிடிக்கிறது. "மகாதீரா' மட்டுமே காஜலுக்கு முக்கியமான படம் இல்லை. கிளாமர் இல்லாமல் வந்த "நான் மகான் அல்ல', "துப்பாக்கி'யும் நல்ல படங்கள்தான். "விண்ணைத்தாண்டி வருவாயா' த்ரிஷா, "நீதானே என் பொன் வசந்தம்' சமந்தா, இப்போது "எதிர்நீச்சல்' ப்ரியா ஆனந்த் என எல்லோரும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுகிறார்கள். எந்த படமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி நடிக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம்.
சினிமா ஹீரோயின்கள் யாரும் ப்ரெண்டா
இருக்காங்களா...?
"தெய்வத்திருமகள்' சமயத்தில் இருந்தே அனுஷ்கா நல்ல க்ளோஸ். என் ஒவ்வொரு படத்துக்கும் வாழ்த்து சொல்லுவாங்க. குட் மார்னிங்... குட் நைட்ன்னு எப்போதுமே டச்ல இருப்போம். "வேட்டை' படத்தில் நடித்ததால் சமீராரெட்டி ப்ரெண்ட் ஆகிட்டாங்க. மும்பைக்கு போனால் அவங்க வீட்டுக்குதான் போவேன். அந்தஅளவுக்கு எனக்கு அவங்க நல்ல ப்ரெண்ட். ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், கார்த்திகா, பிந்து மாதவின்னு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. தமன்னா நல்லாவே பேசுவாங்க. நிச்சயமாக எங்களுக்குள் போட்டி, பொறாமை எதுவும் கிடையாது.
டைரக்டர் விஜய்க்கும், உங்களுக்கும் "சம்திங்... சம்திங்னு...' சொல்றாங்க. இதற்கு இரண்டு பேருமே மறுப்புதான் சொல்றீங்க... ஆனால் "தலைவா' படத்தில் நடிக்கிறீங்க.. இதை எப்படி எடுத்துக் கொள்வது?
டைரக்டர் விஜய் சார் எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால் அதில் காதல் இல்லை. இதற்கு நிறைய முறை பதில் சொல்லி விட்டேன். இருந்தும் இந்த கேள்வி பின் தொடர்கிறது. சினிமாவைத் தாண்டி இன்னும் என்னை யாரும் கவரவில்லை. இதுதான் உண்மை!