டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சினி மினி

தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய படவுலகம் எப்போதுமே வட நாட்டு ஹீரோயின்களைத்தான் தேடி அழைத்து வருகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:01 am

ஜி. அசோக்

"அட்டக்கத்தி", "பீட்சா' படங்களைத் தொடர்ந்து திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் அடுத்த படைப்பு "சூது கவ்வும்'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சீதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த நலன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். குறும்பட இயக்குநர்கள் பெரிய திரைக்கு வந்தாலே, விஜய் சேதுபதிதான் ஹீரோ. ஏன் இப்படி என்றால்... ""சில படங்களை பார்க்கும் போதே கர்வம் வரும். இது மாதிரி நாமும் ஒரு கதை செய்தால் எப்படி இருக்கும் என்று ஏக்கம் வரும். அப்படியான ஏக்கத்தின் நிறைவு எனக்கு முதல் படத்திலேயே கிடைத்திருக்கிறது. வாழ்வில் எப்போதுமே மாறாத மாற்றங்கள்தான் இந்தப் படத்தின் கரு. ஒரு பிரச்னை அதை சுற்றி நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் என கதை போகும். முதலில் விஜய் சேதுபதியை கவனத்தில் கொண்டு இந்த கதையை எழுதவில்லை. கதையை கேட்டதும், நானே நடிக்கிறேன் என ஆவலாக முன் வந்தார் விஜய் சேதுபதி. "கதைப்படி ஹீரோவுக்கு 40 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்' என்றேன். அதோடு எங்கள் சந்திப்பு முடிந்து விட்டது. சில மாதங்கள் கழித்து உடல் எடை கூடி, கண்களில் லேசான சுருக்கங்களுடன் வந்து நின்றார். தலைக்கும், தாடிக்கும் கொஞ்சம் டை அடித்து பார்த்தால் நான் எதிர்பார்த்த ஹீரோ விஜய் சேதுபதி வடிவில் இருந்தார். அதனால் அவரை கதையின் நாயகனாக்கி விட்டேன்'' என்கிறார் நலன்.
 
 தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய படவுலகம் எப்போதுமே வட நாட்டு ஹீரோயின்களைத்தான் தேடி அழைத்து வருகிறது. கன்னட படவுலகம் இதில் முன்னிலை வகிக்கிறது. கன்னடத்தில் தற்போது நடித்து வரும் பெரும்பாலான ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிரபலமாக இருப்பவர்கள். ஒவ்வொரு முறையும் பெரிய ஹீரோக்கள் சாண்டல்வுட்டில் படங்களை அறிவிக்கும் போது, பெரிய ஹீரோயின்களின் பெயர்களையும் சேர்த்தே அறிவிப்பை வெளியிடுகின்றனர். கன்னட ஹீரோ புனித் ராஜ்குமாரின் பிறந்த நாள் விழா சமீபத்தில் நடந்தது. அதில் புது பட அறிவிப்பு வெளியானது. பிரபல தெலுங்கு பட இயக்குநர் ஜெயந்த் சி.பரன்ஜி இப்படத்தை இயக்குகிறார். இதில் புனித் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் ஸ்ருதி கால்ஷீட் தர மறுத்து விட்டாராம். சமீபத்தில் படக்குழு சார்பில் ஸ்ருதியை தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்ட போது, வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவரிடம் கால்ஷீட் இல்லையென்று பதில் வந்ததாம். படக்குழுவினர் மே மாதமே நீண்ட நாள்களுக்கு வெளிப்புற படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருப்பதால், இப்போது பாலிவுட்டில் நடிகை ப்ரணிதி சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
 
 சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் "காந்தர்வன்'. கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹனிரோஸ் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நெல்லை சிவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கை துரை இப்படத்தை எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசும்போது, ""காதல்தான் திரைக்கதையின் பிரதானம். மனித வாழ்க்கையை எத்தனை விஞ்ஞான மாற்றங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றிக் கொண்டே இருந்தாலும், காதல் அப்படியேதான் இருக்கிறது. காதலில் நிச்சயமாக கருத்து வேறுபாடு என்பதே இல்லை. ஆனால் காதலர்களுக்குள்தான் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. ஒரு நிமிஷ பார்வை காதலாகி, கசிந்துருக ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும். ஆனால் இப்போது அப்படியில்லை. ஒரு பார்வை... ஒரு எஸ்.எம்.எஸ்... என்றாகி விட்டது. அப்படிப்பட்ட காதலில் இருக்கும் வரம்பு மீறிய செயல்பாடுகளையும், நடந்த உண்மை நிகழ்வுகளையும் இதில் கதையாக்கி இருக்கிறேன். காதல் தோல்வின் கோபம், வலி திரைக்கதையின் பலமாக இருக்கும்'' என்றார் சலங்கை துரை.
 
 மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்தார். இந்நிலையில் அவரது அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழில் விக்ரம் நடித்த "சாமி' படத்தை கே.எஸ்.ரவிக்குமார் ஹிந்தியில் "போலீஸ் கிரி' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சஞ்சய்தத் நடிக்கிறார். இதைத்தவிர பாலிவுட்டில் அவர் நடிக்கும் சில படங்களுக்கு 100 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் தத்தின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் நடிக்கும் படங்களில் ஷூட்டிங் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பாலிவுட் மீடியாக்களுக்கு பதில் அளித்துள்ள சஞ்சய், ""என்னை நம்பிய தயாரிப்பாளர்களை கை விட மாட்டேன். குறிப்பிட்ட காலத்துக்குள் படங்களை முடித்து தந்து விடுவேன்'' என கூறியிருக்கிறார்.
 
 தருண் காந்த் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் கஞ்சா கருப்பு நடித்து தயாரிக்கும் படம் "வேல்முருகன் போர்வெல்ஸ்'. மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆருஷி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "மலையன்' படத்தை இயக்கிய கோபி இப்படத்தை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் அவதாரம் குறித்தும், படத்தின் களம் குறித்தும் கஞ்சா கருப்பு கூறும் போது, "" நான் பிறந்த சிவகங்கை மாவட்டம் எப்போதுமே வறட்சி நிலவும் பகுதி. பெரும்பாலான கிராமங்களில் குடிப்பதற்கே நல்ல தண்ணீர் கிடைக்காது. அந்த பகுதிகளில் நடக்கும் கதையாக இப்படம் அமைந்த சூழ்நிலையால் இதை தயாரிக்க முன் வந்தேன். காமெடியும், காதலும் சரி விகிதத்தில் இருக்கும். போர்வெல்ஸ் வண்டியின் உரிமையாளராக நான். அந்த வண்டியின் டிரைவராக மகேஷ். அங்கே ஒரு காதல். அதை சுற்றி நடக்கும் கலகலப்பான விஷயங்கள்தான் திரைக்கதை. இதற்காக சொந்தமாக ஒரு போர்வெல்ஸ் மெஷின் வண்டியை வாங்கியிருக்கிறேன். படப்பிடிப்புக்காக இல்லாமல் நிஜமாகவே போர் போடும் தொழிலாளர்களை வைத்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போர் போட்டு, சினிமாவுக்கு தேவையான காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்'' என்றார் கஞ்சா கருப்பு.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.