ரயின் மகாராஜா நீங்கதான்!
வேலைக்காக அன்றாடம் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ரயில் பயணம் என்பது எப்போதும் இனிமையாக இருக்காது.


வேலைக்காக அன்றாடம் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ரயில் பயணம் என்பது எப்போதும் இனிமையாக இருக்காது. ஆனால் ரயில் பயணத்தை ஆடம்பரமாகவும், நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான வசதியுடனும் அனுபவிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது இந்திய ரயில்வேயால் சுற்றுலாவுக்காக இயக்கப்படும் சில சொகுசு ரயில்கள். செலவு அதிகம் என்றாலும் வாழ்வில் ஒருமுறை சென்று வந்தாலும் நீங்காமல் நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சொகுசு ரயில்கள் பெரும்பாலும் வட இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களை மட்டுமே சுற்றி வருகின்றன என்பதால் தமிழகத்தில் இந்த ரயில்கள் குறித்து அறிந்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
மகாராஜா எக்ஸ்பிரஸ்: பெயருக்கு ஏற்றபடியே இதில் பயணிப்பவர்களையும் மகாராஜாக்களாக உணரச் செய்யும் அனைத்து வசதிகளும் இதில் உண்டு. இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த ரயில் உலகின் மிகவும் ஆடம்பரமான ரயில் என்பதற்கான சர்வதேச விருதை 2012-ம் ஆண்டு பெற்றது.
மொத்தம் 28 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் அதிகபட்சமாக 88 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ரயிலில் படுக்கை அறை, டைனிங் ஹால், குளியல் அறை, பரிசுப் பொருள்களுக்கான கடை, வை-ஃபை இண்டர்நெட், டிடிஎச் தொலைக்காட்சி சேவை, நூலகம் என அனைத்து வசதிகளும் உண்டு. ஒட்டுமொத்தமாக ரயிலில் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் உணர்வையே இந்த ரயில் ஏற்படுத்தும். தில்லியில் இருந்து வட இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல வாகன வசதியும் செய்து தரப்படுகிறது.
இதில் 4 நாள் சுற்றுலா மேற்கொள்ள ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம். இதில் ரயில் ஏறுவதில் இருந்து இறங்குவது வரையிலான அனைத்து செலவுகள் அடங்கும். தேன் நிலவு தம்பதிகள், பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பு சேவைகளும் அளிக்கப்படுகின்றன.
பேலஸ் ஆன் வீல்ஸ்: பெயருக்கு ஏற்றபடி ரயில் சக்கரத்தின் மேல் உண்மையாகவே அரண்மனை ஏற்றப்பட்டுள்ள உணர்வைத் தரும் மற்றொரு ஆடம்பர ரயில் இது. ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இயங்கி வரும் இந்த ரயிலின் 14 பெட்டிகளுக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. தில்லியில் இருந்து புறப்பட்டு ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்பூர், பாரத்பூர் வழியாக ஆக்ராவுக்குச் செல்கிறது. பெயருக்கு ஏற்றபடி ரயிலின் உள்புறம் மட்டுமின்றி வெளிப்பகுதியும் அரண்மனை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இந்த ரயிலில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தாமதமாகத்தான் இதன் கதவுகள் இந்தியர்களுக்காகத் திறந்தன. ஆனால் இப்போதும் கட்டணம் டாலரில்தான் குறிப்பிடப்பட்டு வருகிறது.
ஃபேரி குயின்: இப்போதும் இயக்கத்தில் உள்ள உலகின் மிகவும் பழமையான நீராவி என்ஜின் ரயில் என்ற கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது ஃபேரி குயின். இந்த ரயில் 1855ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து பின்னர் ரயில்வே அருங்காட்சியகத்தை அலங்கரித்த இந்திய ரயில். பின்னர் புதுப்பொலிவு பெற்று இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 1997-ம் ஆண்டில் ஆடம்பர ரயிலாக மீண்டும் தண்டவாளத்தில் தடம் பதித்தது. 60 பயணிகளுடன் தில்லியில் இருந்து ராஜஸ்தானின் ஆல்வார் வரை சென்று வருகிறது.
டெக்கான் ஒடிஸி: மகாராஷ்டிரத்தின் ராய்கரில் இருந்து கர்நாடகத்தின் மங்களூர் வரை படர்ந்துள்ள கொங்கன் பகுதியின் சுற்றுலாத் தளங்களை இணைக்கும் ஆடம்பர சொகுசு ரயில் டெக்கான் ஒடிஸி. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் மும்பையில் இருந்து புறப்பட்டு, ரத்னகிரி, கோவா, பெல்காம், கோல்காபூர், புனே, நாசிக், அவுரங்காபாத், அஜந்தா - எல்லோரா ஆகிய இடங்களுக்குச் சென்று ஒரு வாரத்தில் மீண்டும் மும்பை திரும்புகிறது. மற்ற சொகுசு ரயில்களில் உள்ள பார், உணவகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உண்டு என்பதும், இந்த ரயில் பெட்டிகளில் உள்ள சில சிறப்பு அம்சங்கள் சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.
போதுமான வரவேற்பு இல்லை என்று கூறி 2004-ம் ஆண்டு இந்த ரயிலை மகாராஷ்டிர அரசு கைவிட்டது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்: பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே பாணியில் 2009-ம் ஆண்டில் இந்த ஆடம்பர ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தில்லியில் இருந்து புறப்பட்டு ராஜஸ்தானில் 7 பகல், 8 இரவுகள் சுற்றி வரும் இந்த ரயில் ராஜஸ்தானில் புகழ் பெற்ற ஹவா மஹால், மோதி மஹால், ரண்தாம்பூர் கோட்டை, சித்தூர்கர் கோட்டை, லேக் பேலஸ் மற்றும் ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண அழைத்துச் செல்கிறது.
தி கோல்டன் சாரியட்: கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தால் இயக்கப்படும் இந்த ரயில் கர்நாடகத்தில் இருந்து கோவா வரையிலான சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் பெங்களூரில் இருந்து கோவாவுக்கு சென்று வருகிறது. மற்ற சொகுசு ரயில்களில் இல்லாத கூடுதல் வசதியாக ஆயுர்வேத சிகிச்சை மையம், உடற்பயிற்சிக் கூடம், உடல் ஊனமுற்றோரும் பயணிக்க சிறப்பு கேபின் ஆகியவை இதில் இருப்பது சிறப்பம்சம். இதில் இதுவரை பயணம் செய்தவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையைவிட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...