சின்னச் சின்ன நுணுக்கங்கள்! ஜில்லா இயக்குநர் நேசன்
நேசமுடன் கைக்குலுக்கி ஜில்லா உருவான கதையைச் சொல்கிறார் இயக்குநர் நேசன்.


""இது எனக்கு இரண்டாவது படம். முதல் படம் முருகா. நல்ல கதைதான். நிறைய சமரசங்கள் இருந்ததால் எடுபடாமல் போய் விட்டது. ஆனால் நல்ல பெயர் கிடைத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகளும் தேடி வந்தன. "என் மகனை ஹீரோவாக்கி ஒரு கதை'....என வந்தவர்களிடம் நான் வாய் திறக்கவில்லை. கொஞ்சம் புதுப்பித்து வெளியே வருவதற்கு வேலாயுதம் படத்தில் வேலை பார்த்தேன். அப்போதுதான் விஜய் சார் பழக்கம். நெருங்கி பழகும் வாய்ப்பு. திடீரென்று ஒரு நாள் ஏதாவது கதை இருக்கா நேசன் என பளீச்சென கேட்டார். அவருக்கு இரண்டு கதைகள் சொன்னேன். அதில் ஒன்றுதான் இந்த ஜில்லா,
நேசமுடன் கைக்குலுக்கி ஜில்லா உருவான கதையைச் சொல்கிறார் இயக்குநர் நேசன்.
சரி... இந்த கதையில் விஜய்க்கு பிடித்த அம்சங்கள் என்னென்ன....?
தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் பழக்கம் இல்லை. பார்க்கும் போதெல்லாம் சிரித்து விட்டுப் போவார். நானும் சிரித்து வைப்பேன். வேலாயுதம் படம் முடிந்த பின்னர் ""நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா நேசன்'' என்று கேட்டார். இரண்டு வருடங்கள் ஆகியும் அழைப்பு இல்லை. ஒரு நாள் சௌத்ரி சார் அழைத்து, ""விஜய் கால்ஷீட் என்னிடம் இருக்கு... நீங்க அவருக்கு ஒரு கதை சொல்லுங்க'' என்றார். அவரைப் போய் பார்த்தேன். ""கதையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கா நேசன்'' என்றார். ""இல்லை சார். இரண்டு வருடத்துக்கு முன்பு சொன்ன கதைதான். அப்படியேதான் எடுக்கப் போகிறோம். எந்த மாற்றங்களும் இருக்காது'' என்றேன். ""சூப்பர்... அதுதான் வேண்டும்'' என படப்பிடிப்புக்குத் தயாராகி விட்டார். கிளம்பும் போது தோள் தட்டி, ""படத்துக்கு என்ன பெயர்?'' என்று கேட்டார். ""சார் மதுரை பக்கம் ஜில்லா என்ற வார்த்தை பிரபலம். தல, தளபதி மாதிரி அந்த பெயரை இளைஞர்கள் மாஸô பார்க்குறாங்க. அதுதான் சார் தலைப்பு'' என்றேன். அரை மணி நேரத்தில் சிரித்துக் கொண்டே கை கொடுத்து தலைப்பை உறுதி செய்தார். குடும்பம், உறவுகள் என சுமந்து நிற்கிற ஓர் இளைஞனுக்கு வருகிற வெற்றியும், தோல்வியும்தான் கதையின் ஒன் லைன். அது அவருக்கு ரொம்பவே
பிடித்திருந்தது.
ரசிகர்களை விடுங்கள்... தலைவா பட அனுபவத்துக்குப் பின் விஜய்யே அதிரடியாக ஒரு ஹிட்டை எதிர்பார்ப்பாரே...?
சோகம், மகிழ்ச்சி என விஜய் சாரின் படங்களின் கிளைமாக்ஸ் இந்த இரண்டுக்குள்தான் அடங்கும். படம் முழுக்க பயணிக்கிற பாத்திரங்களின் தேடலுக்கு அதுதான் தேவை. ஆனால் ஜில்லா படத்தில் காட்சிக்கு காட்சி ஆர்.டி.எக்ஸ். பட்டாசு வெடிக்கும். விஜய் சார் நினைப்பதை கொடுத்து விட்டாலே அது நிச்சயம் சக்சஸ் அடிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போவது சகஜம்தான். ஆனால் எனக்கு தெரிந்த வரை தலைவா பட அனுபவம் என்று அவரிடம் எதுவும் இல்லை. இதிலும் துளி கூட அரசியல் கிடையாது. ஆட்டம், பாட்டம், சண்டை, சச்சரவு, காதல் என எல்லா இடங்களிலும் கதை போகும். சாதாரணமாகச் சொல்லப் போனால் ஒரு சின்ன வாழ்க்கையின் தொகுப்பு உள்ளேயிருக்கும். துப்பாக்கி படம் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி, இந்த படமும் அந்த இடத்துக்கு வரும். அந்த அளவுக்குச் சிரமமான தேடலுடன் திரைக்கதை பிடித்திருக்கிறேன். ஸ்டைல், டான்ஸ் போக சின்ன சின்ன நுணுக்கங்களைக் கூட தேடிப் பிடித்து நடித்து அசத்தியிருக்கிறார் விஜய் சார்.
மோகன்லாலுக்கு கதையில் என்ன ரோல்....?
மிக முக்கியமான ரோல். விஜய்க்கு அப்பா, அண்ணன் என மாறி மாறிச் செய்திகள் வருகின்றன. ஆனால் இந்த இடங்களை தாண்டி ஒரு குருவாக, காட்பாதராக லால் சார் வருகிறார். சின்ன வயதில் இருந்தே அவரின் நடிப்பையும், உயரத்தையும் அண்ணாந்து பார்க்கிறவன் நான். ஆனால் அவரோடு சேர்ந்து வேலைப் பார்க்கும் போது சினிமா மீது அவர் வைத்திருக்கிற டெடிகேஷன் ஆச்சரியமாக இருக்கிறது. ""சார் இந்த இடத்துக்கு லால் சார் இருந்தா நல்லாயிருக்கும்'' என்று தயங்கிக் கொண்டேதான் விஜய் சாரிடம் சொன்னேன். ""அவர் நடிப்பாரா...'' எனக் கேட்டவர். அடுத்த நாளே கேரளத்துக்குப் போய் லால் சாரை சந்தித்துப் பேசி விட்டார். ""நேசன் லால் சாரை பார்த்து விட்டேன். கதை பிடிச்சிருந்தா பார்க்கலாம் என சொல்லியிருக்கிறார். நீங்க வந்து கதை சொன்னா ஓ.கே.ஆயிடும்'' என சொன்னார் விஜய். உடனே கிளம்பி போய் கதை சொன்னேன். எதுவும் பேசாமல், ""எப்போ ஷூட்டிங்?'' என ஆர்வமாகி விட்டார். ஜூனியர், சீனியர் பேதம் பார்க்காமல் சினிமாவை நேசிக்கிற அவரின் துணிச்சலும், அர்ப்பணிப்பும் சினிமாவில் இருக்கிற ஜூனியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.
அஜித் படமும் பொங்கலுக்கு... பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருக்கே...?
"வீரம்' பட இயக்குநர் சிவா திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். நல்ல நண்பன். இரண்டு பேரின் படமும் பொங்கலுக்கு வெளியாவது எங்களுக்கு மகிழ்ச்சியே. ஷூட்டிங் சமயத்தில் எதேச்சையாக அஜித் சாரை விமானத்தில் பார்த்தேன். ""நேசன்... பாருங்க இந்த படம் பெஸ்ட்டா வரும்...'' என்று வாழ்த்துக்கள் சொல்லி விட்டு போனார். அஜித் கிரேட் மேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...