உறவுகள் ரொம்பவே மகத்தானவை! இயக்குநர் சிவா
""அஜித்துக்கு முதன் முதலாக கிராமத்துக் கதை. மொத்த கிராமமும் அஜித்தை பார்க்கும் ஆசையில் திமிறி நிற்கிறது. ""தல... தல...''ன்னு ரசிகர்கள் பக்கம் அஜித் திரும்பும் போதெல்லாம் சவுண்ட் கொடுப்பார்கள்.


""அஜித்துக்கு முதன் முதலாக கிராமத்துக் கதை. மொத்த கிராமமும் அஜித்தை பார்க்கும் ஆசையில் திமிறி நிற்கிறது. ""தல... தல...''ன்னு ரசிகர்கள் பக்கம் அஜித் திரும்பும் போதெல்லாம் சவுண்ட் கொடுப்பார்கள். ""முதல்ல ஷூட்டிங் நடக்கட்டும்... அப்பதானே படம் ஹிட்டாகும்'' என அவரே கிண்டல், கேலியுமாக கூட்டத்தை ஆசுவாசப்படுத்தி ஷூட்டிங் நடக்க உதவி செய்வார். இப்போதுதான் பேக்கப் ஆகி வந்திருக்கிறோம்.'' பரபரப்பு பணிகளுக்கிடையே "வீரம்' படத்தின் கதையைச் சொல்கிறார் இயக்குநர் சிவா.
அஜித் படம் என்றாலே இப்ப, ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம்.... இதிலும் ஏகப்பட்ட நடிகர்கள் போல...?
இவ்வளவு பெரிய நடிகர்கள் பட்டாளத்தோடு படம் உருவாகும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. இதுவரைக்கும் அஜித் படங்களில் பார்த்த யாருமே இல்லாமல் கதை பின்னத்தான் ஆசை. நினைத்தபடியே அந்த சுதந்திரம் தந்தார் அஜித் சார். ""கிராமத்துக் கதையா பண்ணுங்க'' என்றார். அவர் சொன்னது மாதிரியே இது அங்காளி, பங்காளி, அண்ணன், தம்பி என உறவு முறை கதை. எல்லாம் முடிந்த பின்தான் அஜித் சாரை கதைக்குப் பலமாக உள்ளே கொண்டு வந்தேன். எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் படத்துக்கு வேறு கலர். தமன்னா, விதார்த், அப்புக்குட்டி, முனிஷ் என நடிக்க தெரிந்தவர்கள் இதற்கு அசுர பலம். நாகரீக வாழ்க்கை அப்படி, இப்படி பரவி கிடந்தாலும், இன்னும் உறவு முறைகளுக்குள் வாழ்கிற வாழ்க்கைதான் நம்முடையது. ஆயிரம் மலைத் தாண்டி... ஏழு கடல் தாண்டி... என பாட்டி சொன்ன கதை. இன்னமும் ஞாபக அடுக்குகளில் துரு பிடிக்காமல் இருக்கிறது. கூட்டுக் குடும்பத்தை எவ்வளவு தூரம் மறந்து விட்டோம்? தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்ற முறை கொண்டாடி வந்தது நம் தலைமுறைக்கு மேலே யாருக்காவது ஞாபகம் வருமா? கோடை விடுமுறைக்கு கூட தாத்தா, பாட்டியைப் பார்க்க முடியாத நிலைக்கு குழந்தைகளைத் தள்ளி விட்டு விட்டோம். இதனால் எவ்வளவு இழந்திருக்கிறோம். வாழ்க்கையின் சாராம்சம் கூட்டிக் கழித்து பார்த்தால் என்ன இருக்கும்? அந்த குறையை நீக்குகிற மாதிரி ஒரு கதை. அஜித் சாருக்கு இந்த கதை புதிது என்பதால், சும்மா புகுந்து விளையாட்டு காட்டியிருக்கிறார்.
சின்ன சின்ன நடிகர்கள் கூட மக்களின் பிரதிநிதியாக... தவறுகளைக் கண்டு பொங்குகிற இடத்தில் இருக்க ஆசைப்படும் காலம் இது... இப்போது போய் முழு குடும்பத்துக்கான கதையில் அஜித் எப்படி...?
"வீரம்' படத் தயாரிப்பாளர் வெங்கடராம ரெட்டியைச் சந்தித்த போது ""எம்.ஜி.ஆருக்கு "எங்கள் வீட்டு பிள்ளை' மாதிரி அஜித்துக்கு இந்த படம் இருக்கணும். குழந்தைகள் முதல் தாத்தா, பாட்டி வரைக்கும் எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கணும்'' இதுதான் அவர் வைத்த முதலும், கடைசியுமான நிபந்தனை. ஒரு வழியாக கதை பிடித்து போய் அஜித் சாரிடம் சொன்னால், ""சூப்பர்ஜி... பின்னி எடுத்துடலாம்'' என கதைக்குள் வந்து அருமையாக செட் ஆகிவிட்டார். அவர் கேரக்டருக்கு விநாயகம் என்று பெயர். காமெடி, ஆக்ஷன், திரைக்கதை என எல்லாவற்றையும் தாண்டி அவரின் கேரக்டர்தான் நிற்கும். எல்லா படங்களிலும் குறிப்பிட்ட ஒரு சில இடத்தில்தான் அஜித் சாருக்கு விசில் பறக்கும். ஆனால் இதில் அப்படியில்லை. காட்சிக்கு காட்சி கைத்தட்டல் காத்திருக்கிறது. அவர் இயல்பாக கிரே ஹேர், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் எப்படி இருக்கிறாரோ அப்படியே விட்டு விட்டோம். ""நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா இந்த பட கிளைமாக்ஸ் மனசை உலுக்கிடுச்சு'' என அவர் சொன்ன போது அழலாம் போல் தோன்றியது. அதே சமயம், ""எந்தப் பொய் சொல்லியும் என் ஆடியன்ûஸ இதில் வலுக்கட்டயமாக புகுத்திடாதீங்க... அவங்களே இயல்பா இந்தப் படத்தை பார்த்து ரசிக்கட்டும்'' என அன்புக் கட்டளை வைத்திருக்கிறார். அதுதான் அஜித் சார்.
படத்தில் வீர வசனங்கள் ஏதாவது இருக்குமே...?
நிறைய எழுதி வைத்திருந்தேன். ஒன் லைன் தயார் செய்து சொன்னதுமே, ""ஜி தயவு செய்து பஞ்ச் டயலாக் வேணாம்'' என சொல்லி விட்டார் அஜித் சார். எனக்குள் ரொம்ப வருஷமாகவே ஊறிக் கிடந்த கதைதான். அதை டிரென்ட்டுக்கு ஏற்ற மாதிரி பள பளவென பாலீஸ் போட்டு கொடுத்திருக்கிறேன். உலகத்தில் எந்த விஷயத்தையும் விட உறவுகள் ரொம்பவே மகத்தானவை. ஆழ்ந்த மகிழ்ச்சியையும், ஆறாத ரணத்தையும் கொடுக்கும் வல்லமை உறவுகளுக்கு மட்டுமே உண்டு. அப்படி ஒரு விஷயத்தில்தான் அஜித் சார் இந்த கதையில் பயணிக்கப் போகிறார். வேண்டாத திணித்தல், தேவையில்லாத துதி பாடல் எதுவுமே கிடையாது. படம் வந்த பின் பாருங்கள். அஜித் இன்னமும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியப் போகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...