நினைத்த சினிமா கைக்குள் வந்திருக்கிறது! சிம்புதேவன்
இப்போது கூட ஒரு சினிமா பற்றி பேசுறாங்க... ""சினிமாவே ஒரு கற்பனை. ஆனால் கற்பனையிலும் இல்லாத ஒரு கதையை எப்படி சார் சினிமாவாக எடுக்க முடியும்?''னு ஒரு தம்பி போன் பேசினார்.


இப்போது கூட ஒரு சினிமா பற்றி பேசுறாங்க... ""சினிமாவே ஒரு கற்பனை. ஆனால் கற்பனையிலும் இல்லாத ஒரு கதையை எப்படி சார் சினிமாவாக எடுக்க முடியும்?''னு ஒரு தம்பி போன் பேசினார். அவர் கேட்டது நல்ல கேள்விதான். அதற்கு என்ன பதில் சொல்லுவது? ஒரு சின்ன கரு. அதை சுற்றி கதாபாத்திரங்களின் நகர்தல் சினிமாவின் சிம்ப்ளிசிட்டி என நான் பாடம் எடுக்க முடியாது. பேன்டஸி வித் காமெடி கதைகளில் நான் கிங்ன்னு சொல்றாங்க. அதில் அடுத்த எல்லையைத் தொடப் போகிற படமாக "ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' இருக்கும். என் வேலை, என் சினிமாவை பற்றி பேசுவோமா... தன்னிலை உணர்ந்து பேச்சைத் துவக்குகிறார் சிம்புதேவன்.
கவலை கொள்ளாத இம்சை அரசன்... மனித வடிவில் கடவுள் பூமிக்கு வந்தால்... ஜெய்சங்கர் காலத்து கௌபாய் சினிமா... என உங்கள் கற்பனை பெரிய அளவுக்கு போகும்... இந்த படத்துக்கான கற்பனை எப்படியிருக்கும்...?
"ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'... இந்த தலைப்புதான் கதை. மூணு களவாணி பசங்களுக்கும், ஒரு பெண்ணுக்குமான சிநேகமும்தான். அது வேண்டும், இது வேண்டும் என்கிற தேடலில் எதுவுமே கிடைக்காத போதுதான் பிரச்னை. இந்த நான்கு பேரும் ஏதோ ஒரு தேடலில் நினைத்ததை அடைய நினைக்கிறார்கள். அது அவர்களுக்கு கை கூடியதா? இதுதான் படம். காமெடி இருக்கிற அளவுக்கு யோசிக்கவும் வைக்கும். இதுவரை முழுக்க முழுக்க சென்னையைக் களமாக கொண்டு இயங்கியதில்லை. இதில் முழுக்க முழுக்க அது நிறைவேறியிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் தெரிந்தே செய்யும் தவறுகள்தாம் அதிகம். காலம் காலமாக அவற்றைச் செய்து பழக்கப்பட்டு இருப்பதால், அவை சில சமயங்களில் தவறுகளாக நமக்குத் தோன்றுவதில்லை. எல்லாவித தனி மனித ஒழுக்கங்களையும் சாமர்த்தியம் என வரையறுப்பது இங்கே பொதுப் பண்பாக மாறி விட்டது. அதை இயல்பு வாழ்க்கையாகச் சித்திரிப்பதும் மனநிலையாக மாறி வருகிறது. அது மாதிரியான அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளைத் துணைக்கு வைத்து இதைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.
அருள்நிதிக்கு காமெடி சினிமா புது ஏரியாதானே..?
மனசுக்குள் வெகு நாள்களாகவே இருந்த கதை. பாண்டிராஜ் மூலம் அருள்நிதியை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் எங்களுக்குள் சிநேகம் இருந்தது. பாண்டிராஜ்தான் ""நீங்க வெச்சிருக்கிற கதைக்கு அருள்நிதி செட்டாவார்'' என்று சொன்னார். கதை சொல்லிப் பார்த்தேன், ""இதை நாமே செய்றோம் சார்''ன்னு ரொம்பவே ஆர்வமாகி விட்டார். அருள்நிதி கொஞ்சம் முரடுதான். அதுதான் கதைக்கும் தேவைப்பட்டது. இயல்பாக இருக்கிற மனுஷனை காமெடி, ஆக்ஷன் என இரண்டு ஏரியாவுக்குமே பயன்படுத்தலாம் என இப்போது புரிந்து கொண்டேன். ""நாமே தயாரிக்கிறோம்'' என்று அவர் சொன்னது இன்னும் பலம். நினைத்த சினிமா கைக்குள் வந்திருப்பதில் எல்லாருக்குமே மகிழ்ச்சி.
ரொம்பவே முக்கியத்துவம் தந்து வசனங்கள் எழுதுவீங்களே...?
இருக்கலாம். ஆனால் அந்த பெயருக்காக நான் எழுதியதில்லை. சினிமாவுக்குள் எதுவுமே துருத்திக் கொண்டிருக்க கூடாது என்பதில் கவனம் வைப்பேன். அப்படித்தான் என் வசனங்களும். "அறை எண் 305-ல் கடவுள்' படத்தில் மனித உணர்வுகளுக்குப் பக்கத்தில் வசனங்கள் பயணிக்கும். இருந்தாலும், கதைக்குத் தேவைப்பட்டதை மட்டுமே எழுதினேன். "இம்சை அரசன்' படத்துக்கு எது தேவைப்பட்டதோ, அதுதான் அதிலும் இருந்தது. இந்தப் படத்திலும் அப்படித்தான் வசனங்கள் இருக்கும். வைரமுத்து சாரின் பாடல்கள் இந்தப் படத்துக்கு இன்னும் பலமாக வந்திருக்கிறது. மூன்று பாடல்கள்தான். அதில் ஒரு பாடலுக்கான சூழல் சொன்னேன்.
மூணு கோடி ஆம்பளைங்க...
மொத்த தமிழ் நாட்டுல....
உன்ன மட்டும் வெச்சிருக்கேன்...
உள் கூட்டு மாராப்புல...னு காதல் ரசம் சொட்ட ஒரு பாட்டு தந்தார் வைரமுத்து.
இம்சை அரசன் பாகம்-2 பற்றி ஒரே பேச்சாக இருந்ததே...?
இன்னும் இறுதி வடிவம் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் வடிவேலு சார் இப்போது ரொம்பவே பிஸி. எல்லாம் நல்ல விஷயமாக அமைந்தால் மகத்தான விஷயம் காத்திருக்கிறது. இம்சை அரசன் பாகம் 2 பேன்டஸியின் மொத்த உயரமாக இருக்கலாம். அந்த அளவுக்குக் கற்பனைகள் நிறைந்த கதை. நிச்சயம் நல்லது நடக்கும். தனுஷிடம் கூட ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அதையும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாற்றி விட்டன. அந்த விஷயத்திலும் நல்லது நடக்கும்.
"இரண்டாம் உலகம்' பார்த்தீங்களா...? இப்போ தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு...?
டப்பிங் வேலைகள் போய்க்கொண்டிருப்பதால் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் படத்துக்குள் வந்த பின் நிறைய சினிமாக்களைப் பார்க்க நேரம் இல்லை. ஒட்டு மொத்தமாக சினிமாவில் மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
2000-க்கு முன்பு இருந்த சூழல் வேறு. தமிழ் சினிமாவே அதன் பின்புதான் நிறைய மாற்றங்களைக் கண்டிருக்கிறது. 2000-க்கு பின்புதான் உலக சினிமாக்களின் திருட்டு டி.வி.டி., சென்னை பர்மா பஜாரில் சுலபமாகக் கிடைக்க ஆரம்பித்தது. அதுதான் தமிழ் சினிமாவின் போக்கையே சுத்தமாக மாற்றி விட்டது. அதற்கு முன்பு வருஷத்துக்கு நான்கைந்து படங்கள்தான் பார்க்க முடியும். இந்த காலக் கட்டத்தில் உருவான சில படங்கள் சொல்லப்பட்ட விதத்துக்கு உலக சினிமாக்களின் தாக்கம்தான் பெரிய காரணம்.
இதற்கு நிறைய சினிமாக்கள் உதாரணம். இப்போது வந்திருக்கிற குறும்பட உலகம் தமிழ் சினிமாவை வேறு திசைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. யாரிடமும் உதவியாளராக இல்லாத இளைஞர்கள் இயக்குநர்களாக அவதாரம் எடுக்கிறார்கள். பல வருடமாக உதவி இயக்குநர்களாக இருப்பவர்களிடம் எதிர்காலத்தை பற்றி பயம் இருக்கும். அது இப்போது வருகிற இயக்குநர்களிடம் இல்லை. தைரியமாக மோதி ஜெயிக்கிறார்கள். இது நல்லதா? கெட்டதா? என்று தெரியவில்லை. நான் அதை பற்றி யோசிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...