/

இந்தியாவில் "ஐ.ஏ.எஸ்' ஆஸ்திரேயாவில் ஏ.எஸ்.ஓ.!

 திரை கடலோடியும் திரவியம் தேடு' என்றார் ஒüவையார். அந்த வகையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சின்னபொம்மன் சாலையைச் சேர்ந்த எம்.அருள்மணி இந்திய

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:22 pm

ஆர். வேல்முருகன்

 திரை கடலோடியும் திரவியம் தேடு' என்றார் ஒüவையார். அந்த வகையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சின்னபொம்மன் சாலையைச் சேர்ந்த எம்.அருள்மணி இந்திய இளைஞர்களின் கனவுப் பணியான ஐ.ஏ.எஸ்.க்கு முயற்சி செய்தார். ஆனால் வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் ஆஸ்திரேலியா சென்று அங்கு இந்திய ஐ.ஏ.எஸ்.க்குச் சமமான ஏ.எஸ்.ஓ. தேர்வில் தேறினார். கடந்த அக்டோபர் 10-இல் ஆஸ்திரேலிய முதல்வர் மற்றும் அமைச்சரகத்தில் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
 பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள சின்னபொம்மன் சாலையைச் சேர்ந்த மேகராஜ், வள்ளியம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் எம்.அருள்மணி. தந்தை மேகராஜ், தென்னை மரமேறும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
 உள்ளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்த இவர், கரட்டுமடத்தில் உள்ள காந்தி கலா நிலையத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார். பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் அறிவியலும் தொடர்ந்து எம்.பி.ஏ.வும் முடித்தார். எம்.பி.ஏ. தேர்வில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பிடித்தார்.
 கல்லூரித் தலைவர் எம்.ஏ. விஜயமோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், விவேகானந்தா பணிக்குழுத் தலைவர் எஸ்.வி.இளங்கோவும் படிப்புக்குப் பொருளாதார ரீதியாக உதவியதாகத் தெரிவித்த மேகராஜ், புதுதில்லியில் ஐ.ஏ.எஸ். படிப்பதற்காகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
 இதன்பின் கோவையில் உள்ள தனியார் எம்.பி.ஏ. கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி
 புரிந்தார்.
 கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக் குடியேற்ற முகவராக இருந்த நண்பர் மூலம் நிரந்தர விசாவின் மூலம் ஆஸ்திரேலியா சென்றார். கனடாவுக்கும் நிரந்தர விசா கிடைத்தாலும் அங்கு குளிர் அதிகம் என்பதால் ஆஸ்திரேலியா சென்று அங்கு கம்யூனிட்டி சர்வீஸஸ் திட்ட அலுவலராகப் பணிபுரிந்தார்.
 2011-ல் ஆஸ்திரேலிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுப் பணிக்காகத் தேர்வெழுதினார். நிரந்தர விசா இருப்பவர்கள் மட்டும் இத்தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்களாம். இப்போது யாருக்கும் நிரந்தர விசா வழங்கப்படுவதில்லையாம். நேர்முகத் தேர்வில் அருள்மணி வெற்றி பெறவில்லை.
 அப்போது கிடைத்த அனுபவத்தை வைத்துக் கொண்டு 2012-ம் ஆண்டில் மீண்டும் ஆஸ்திரேலிய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கு விண்ணப்பித்தார் அருள்மணி. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த பல ஆயிரம் பேரில் 830 பேர் முதல் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 120 பேர் மட்டும் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு பெற்றனர். இதிலும் 30 பேர் மட்டும் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதலிடம் பெற்றவர் அருள்மணி.
 இந்திய ஐ.ஏ.எஸ்.க்கு இணையான ஏ.எஸ்.ஓ. (ஆஸ்திரேலியன் சர்வீஸஸ் ஆபீசர்) என்ற தேர்வில் முதலிடம் பிடித்ததால் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் உள்ள முதல்வர் மற்றும் கேபினட் மினிஸ்ட்ரியில் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றார் அருள்மணி.
 அங்கு கொள்கைகளை உருவாக்குவதும், மறுபரிசீலனை செய்வதும், அதை அமல்படுத்துவதும்தான் அருள்மணியின் பணி. குறிப்பாகத் தொழிற்சாலை தொடர்புகள்தான் இவருடைய முக்கியப் பணி.
 பதவியேற்புக்கு முன் பொள்ளாச்சிக்கு வந்திருந்த அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
 ""ஆஸ்திரேலியா பல்வேறு கலாசாரங்கள் நிறைந்த நாடு. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 5000 குடும்பங்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றன. ஆஸ்திரேலியர்கள் பிறருக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். அங்குள்ளவர்களிடம் நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து நமக்கு மிகவும் உதவியாக உள்ளனர். அங்கு இனவெறிக் கொள்கை கிடையாது.
 இந்தியாவில் இருந்து சென்ற பலரும் சொந்தத் தொழில் செய்கின்றனர். ஆஸ்திரேலிய அரசுப் பொறுப்பில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் முதல் இந்தியன் நான்தான்.
 பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவை விட ஆஸ்திரேலியா மிகச் சிறப்பான இடம் பிடித்துள்ளது. குற்றங்கள் மிகக் குறைவு. சுற்றுச் சூழல் சிறப்பாக உள்ளது.
 முதல்வராக இருந்தாலும் அவருக்குக் கார் டிரைவர் கிடையாது. வெளியிடங்களுக்குச் சென்றால் அவரும் கார் நிறுத்துவதற்குப் பணம் கட்டியாக வேண்டும். அங்கு மக்களுக்காகத்தான் அரசு நடக்கிறது.
 இப்போது முதல்வருக்கு அடுத்தபடியாக அரசுப் பொறுப்பில் 4-வது இடத்தில் இருக்கிறேன். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முதல்வருக்கு அடுத்தபடியாக உள்ள இயக்குநர் ஜெனரல் பதவிக்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் அருள்மணி.
 - "வறுமையைக் கண்டு பயப்படக் கூடாது, வறுமை என்பது வரம், நம்பிக்கையுடன் கடின உழைப்பைக் கொடுத்து விடாமுயற்சி செய்தால் வெற்றித் திருமகள் நம் பக்கம்' என்ற அருள்மணி, இவ்வளவு உயர்ந்த நிலைக்கு தான் வருவதற்காகக் கஷ்டப்பட்ட தாய், தந்தைக்காக சின்னபொம்மன் சாலையில் வீடொன்றைக் கட்டிவருகிறார். தன்னுடைய விருப்பத்திற்காக பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல அவர்களின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.