சினி மினி
பிரபுதேவாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மீண்டும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா. நடிக்கும் முடிவை அறிவித்தவுடன் நாகார்ஜுனா, ராணா ஆகியோரின் புதிய தெலுங்குப் படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்


பிரபுதேவாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மீண்டும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா. நடிக்கும் முடிவை அறிவித்தவுடன் நாகார்ஜுனா, ராணா ஆகியோரின் புதிய தெலுங்குப் படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதோடு "ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் முதல்முறையாக தமிழில் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா. ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் என நயன்தாராவின் கிராஃப் மீண்டும் எகிறத் தொடங்கியிருக்கிறது.
ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ள அஜித், கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது தன்னுடைய வீடு, அலுவலகம் ஆகியவற்றின் வண்ணத்தை மாற்றி வருகிறார். வெவ்வேறு நிறங்களில் சில கார்களை வைத்திருக்கும் அஜித், ஜாதகப்படி தற்போது வெள்ளை நிற காரைப் பயன்படுத்தி வருகிறார். அவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் முதல் அனைத்தும் வெள்ளை மயமாகியுள்ளது.
ஸ்ரேயா நடித்த முதல் மலையாளப் படமான "போக்கிரி ராஜா' 2010-ல் வெளியானது. மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை சில மாற்றங்களுடன் "ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் தமிழில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார் தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன்.
ஆனால் இந்தப் படம் வெளிவந்தால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும்; அதனால் படத்தைத் தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஸ்ரேயா. படத்துக்கு தடை ஏற்பட்டால் தனக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்படும் என்று நிலைமையை ஸ்ரேயாவிடமும் அவரது தந்தையிடமும் தயாரிப்பாளர் விளக்கிச் சொல்ல, மனமிரங்கி புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார் ஸ்ரேயா.
"அழகர்சாமியின் குதிரை' படத்துக்காக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி அதையடுத்து கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் "மன்னாரு'. தன்னுடைய சொந்த பந்தங்கள் உள்பட யாரிடமும் மரியாதை கிடைக்கப் பெறாத ஒரு சாமானியன் அனைவரும் மதிக்கக் கூடிய அளவில் வாழ்க்கையில் உயருவது போல உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் வசனத்தையும் பாடல்களையும் "மைனா' படத்துக்காக தேசிய விருது பெற்ற தம்பி ராமையா எழுகிறார். இவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய எஸ்.ஜெய்சங்கர் படத்தை இயக்குகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் "இரண்டாம் உலகம்' படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தான் எதிர்பார்த்தது போல ட்யூன்கள் அமையாததால் அவரை நீக்கிவிட்டு ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்து ஒரு பாடலையும் பதிவு செய்திருக்கிறார் செல்வராகவன்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் விஜய் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். "கோ' படத்தில் இணைந்து நடித்த கார்த்திகா, பியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
ஆர்யாவும் ஜீவாவும் திரையுலகில் "திக்' ஃப்ரண்ட்ஸ். ஜீவா நடித்த "சிவா மனசுல சக்தி' படத்தில் ஆர்யாவும் ஆர்யா நடித்த "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஜீவாவும் கெஸ்ட் ரோலில் நடித்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரிப்பவர்களும் இந்த நண்பர்களே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...