தெரிந்த தொழில்நுட்பத்தைப் புத்தகமாக மாற்றுங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழில் ஆயிரமாயிரம் புத்தகங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இலக்கியம், வரலாறு, சமூகவியல் உள்ளிட்டவை தொடர்பான புத்தகங்கள்தான் அதிகம் வருகின்றன. கணினித்தொழில்நுட்பம் தொடர்பாக வரும் புத்


ஒவ்வொரு ஆண்டும் தமிழில் ஆயிரமாயிரம் புத்தகங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இலக்கியம், வரலாறு, சமூகவியல் உள்ளிட்டவை தொடர்பான புத்தகங்கள்தான் அதிகம் வருகின்றன. கணினித்தொழில்நுட்பம் தொடர்பாக வரும் புத்தகங்கள் மிகக்குறைவுதான். விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில்தான் தமிழில் தொழில்நுட்பப் புத்தகங்கள் வருகின்றன என்றால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களை எழுதும் ஒரு சில எழுத்தாளர்களில் முன்னிலையில் இருப்பவர் ஜெ.வீரநாதன். "சித்திரமும் மவுஸ் பழக்கம்' என்ற இவரது புத்தகம் 2005-ம் ஆண்டுக்கான சிறந்த புத்தகமாக (கணினிப் பிரிவு) தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டது.
எம்.ஏ. வரலாறு, இதழியலில் முதுகலைப் பட்டயம், இதழியலில் எம்.ஃபில். ஆகியவற்றை மட்டுமே படித்துள்ள வீரநாதன், கணினி தொழில்நுட்பம் பற்றிய புத்தகங்களை எப்படி எழுத முடிகிறது. அண்மையில் முடிவடைந்த சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருந்த அவரிடம் பேசியதில் இருந்து...
கணினித் தொழில்நுட்பம் தொடர்பாக புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
1994 - ம் ஆண்டு கோவையில் கணினி பயிற்றுநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு நாங்களாகவே பாடத்திட்டம் உருவாக்கிக் கற்றுக் கொடுத்தோம்.
2000-ம் ஆண்டில் இணையதளம் பிரதானமாக பேசப்பட்ட நேரத்தில் தமிழர்களில் பலருக்கு இணையதளம் பற்றிய புரிதல் முழுமையாக இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். எனவே, இணையதளத்தை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் "இணையத்தை அறிவோம்' என்ற புத்தகத்தை முதல்முதலில் எழுதினேன். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
நீங்கள் எழுதிய மற்ற புத்தகங்கள் பற்றி....?
1997-98 முதல் இந்தியாவிலேயே முதல்முறையாக டி.டி.பி. பயிற்சியைத் தொலைநிலைக் கல்வி முறையில் கற்பிக்கத் தொடங்கினோம். மதுரையில் மடிசியா சார்பில் அச்சுத்துறை கண்காட்சி 2000-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அப்போது அச்சுத்துறையினருக்காக நடத்தப்பட்ட பயிலரங்கில் பயிற்றுநராகச் சென்றபோது கோரல் டிரா தொடர்பாக சிறிய புத்தகம் ஒன்றைத் தயார் செய்தேன். அதற்கு வரவேற்பு இருந்ததால் அந்தப் புத்தகத்தில் கூடுதல் விவரங்கள் சேர்த்து "சித்திரமும் மவுஸ் பழக்கம்' என்ற புத்தகத்தை எழுதினேன்.
2004-ம் ஆண்டு முதல் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் என்ற பெயரில் சொந்தமாக பயிற்சி நிறுவனம் தொடங்கினேன். அதன்பின்னர் டிடிபி டிசைனர் கையேடு, கணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி, இன்டிசைன் சிஎஸ்4, பேஜ்மேக்கர் 7.0,
இல்லஸ்ட்ரேட்டர் சி.எஸ்.2, போட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர்ஸ் கையேடு, வலையில் சிக்கிய மீன்கள், செல்போன் சர்வீஸ் உள்பட 18 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.
செல்போன் சர்வீஸ் புத்தகத்தை எப்படி எழுதினீர்கள்?
2008-ம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு வந்தபோது செல்போன் பழுதுபார்த்தல் பற்றி புத்தகங்கள் இருக்கிறதா? என வாசகர்கள் பலர் கேட்டனர். இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் 5 வார கால பயிற்சியாக நடத்தப்படும் செல்போன் பழுதுநீக்க சான்றிதழ் படிப்பை படித்தேன். இதுதொடர்பான ஆங்கிலப் புத்தகங்கள்,
செல்போன் பழுதுநீக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்கினேன். பின்னர் செல்போன் சர்வீஸ் புத்தகத்தை எழுதினேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.
இதுவரை உங்களது பயிலகத்தில் கற்றுக்கொண்ட மாணவர்கள் பற்றி...?
எங்களது பயிலகத்தில் கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகளில் பலர் டி.டி.பி. தொழிலை சொந்தமாக நடத்தி வருகின்றனர். சிலர் டி.டி.பி. தொழிலகங்களில் பணியாற்றி வருகின்றனர். இலங்கை, மலேசியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் பலர் இந்தப் புத்தகங்களை கையேடாக பயன்படுத்தி டி.டி.பி. தொழிலைக் கற்றிருக்கின்றனர். இப்புத்தகங்கள் மூலம் தங்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து மின்னஞ்சல் மூலமாக எங்களைத் தொடர்புக்கொண்டு தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
புத்தகத்தின் தலைப்பை எங்கு தேர்வு செய்கிறீர்கள்?
ஒவ்வொரு புத்தகக் காட்சிக்கும் செல்லும்போது 2 முக்கியமான விஷயங்களை கவனித்து வருகிறோம். முதலில் எங்களது புத்தகங்கள் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அறிகிறோம். இரண்டாவதாக அடுத்த புத்தகம் எழுதுவதற்கான தலைப்பை கண்காட்சிகளிலேயே தேடுகிறோம். வாசகர்களுக்கு எந்த வகையான புத்தகம் தேவை என்பதை கண்டறிந்து அதுதொடர்பான புத்தகத்தை வெளியிடுகிறோம். இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் வலைதள பக்க வடிவமைப்பு, சவுன்ட் எடிட்டிங் ஆகிய 2 தலைப்புகள் கிடைத்துள்ளன.
இளைஞர்களிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் ஏதாவது ஒரு முக்கியத் தகவல்...?
தொழில்நுட்பம் தொடர்பாக தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களைப் புத்தகங்களாக எழுதுங்கள். தொழில்நுட்பப் புத்தகங்களை எழுதும்போது தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும். தொழில்முனைவோர்கள் உருவாகும்போது நாட்டின் பொருளாதாரம் வலிமை பெறும். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உந்துசக்தியாக இருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...