80 ஏக்கரில் ஒரு பசுமைப் புரட்சி!
இயற்கை வளத்தை எப்படி உருவாக்குவது?, எப்படி பாதுகாப்பது? என்பதை செயல்விளக்கப் பண்ணை அமைத்து வழிகாட்டுகின்றனர் சேலம், கோவை, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளிகள் இருபத்தைந்து பேர். தரும


இயற்கை வளத்தை எப்படி உருவாக்குவது?, எப்படி பாதுகாப்பது? என்பதை செயல்விளக்கப் பண்ணை அமைத்து வழிகாட்டுகின்றனர் சேலம், கோவை, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளிகள் இருபத்தைந்து பேர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நாகாவதி அணை அருகே வெள்ளமலை கிராமத்தில் 80 ஏக்கரில் "கூட்டுறவு மூங்கில் காடு' என்னும் பெயரில் கூட்டுறவு முறையில் பண்ணையம் செய்து வருகின்றனர்.
மூங்கில் காடு உருவாக்க முன்னிலையில் இருந்து செயல்பட்டவரும், களத்தில் இருந்து பண்ணையம் செய்து வருபவருமான ப்ஃபியூஸ் நம்மிடம் பேசியதிலிருந்து...
குட்டுறவு மூங்கில் காடு எப்போது தொடங்கப்பட்டது?
தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே 2004-ம் ஆண்டில் 9 ஏக்கரில் மேட்டாங்காடு (எதுவும் விளையாத நிலப்பரப்பு) வாங்கினோம். அதில் வில்வம், நெல்லி, மூங்கில், எலுமிச்சை, கொய்யா, ஆமணக்கு, புங்கை ஆகிய 7 வகை மரக்கன்றுகளை நட்டோம்.
2006-ம் ஆண்டு அனைத்து மரக்கன்றுகளும் செழித்து வளர்ந்தன. ஆனால், மூங்கில் மட்டும் அதிக செழுமையாக லாபம் தரும் வகையில் வளர்ந்தது. அதைத் தொடர்ந்து அந்த நிலத்தைச் சுற்றியுள்ள மேலும் 71 ஏக்கர் நிலங்களைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 25 பேர் சேர்ந்து வாங்கினோம். 2008-ல் கூட்டுறவு மூங்கில் காடு வளர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2013-ம் ஆண்டில் இருந்து அதிக அளவில் வருவாய் கிடைக்கும்.
எதுவும் விளையாத நிலத்தை வளமாக்கியது எப்படி?
இந்த நிலத்தில் இதுவரை 25 தடுப்பணைகள், 10 குளங்கள் வெட்டியிருக்கிறோம். மழைக் காலத்தில் வரும் நீரை இதில் சேமித்து ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து வருகிறோம். குளங்கள் வெட்டிய சில இடங்களில் இயற்கை ஊற்றில் இருந்து தானாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
80 ஏக்கரிலும் கொய்யா, வில்வம், சந்தனம், வேம்பு, புங்கை, மாம்பழம், நாவல், எலுமிச்சை, நெல்லி, தேக்கு உள்ளிட்ட 25 வகையான மரங்களை வளர்த்து வருகிறோம். 45,000 மூங்கில் மரங்கள் உள்ளன.
மூங்கிலை அதிக அளவில் வளர்க்க காரணம் என்ன?
மூங்கிலில் பெருவாரை, சிறுவாரை என இருவகை உள்ளன. இதில் பெருவாரை ரகத்தை வளர்த்தால் அதிக தண்ணீர் தேவைப்படும். ஆனால், சிறுவாரையைப் பொறுத்தவரை குறைந்த தண்ணீரில் அதிக பயிரை வளர்க்க முடியும். மூங்கிலை நோய் எளிதில் தாக்காது. மழைக் காலத்தில் அதிக நீரை உறிஞ்சும். ஆனால், கோடை காலத்தில் மிகக் குறைந்த அளவில்தான் நீரை உறிஞ்சும். இதனால், சிறுவாரை மூங்கிலைதான் அதிக அளவில் பயிரிட்டுள்ளோம்.
நல்லம்பள்ளி ஒன்றியம் ஜருகு கிராமத்தில் மூங்கில் பொருள்கள் தயாரிப்பு தொழிலகம் நடத்தி வருகிறோம். இதில் சிறுவாரை மூங்கிலைப் பயன்படுத்தி மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ, அலமாரி, வீட்டு அலங்கார பொருள்கள் என வீட்டுக்குத் தேவையான அனைத்துத் தளவாட பொருள்களையும் குறைந்த விலையில் தரமாக உற்பத்தி செய்து வருகிறோம்.
உள்ளூர், வெளியூரில் உள்ள தொழிலாளர்கள் 40 பேர் இத்திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். கிடைக்கும் ஆர்டர்களைக் கொடுக்க முடியாத அளவுக்கு மூங்கில் பொருள்களுக்கு கிராக்கி உள்ளது. மூங்கில் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் பிளாஸ்டிக், ஸ்டீல் பயன்பாட்டை தவிர்க்க முடியும்.
இத்திட்டத்தில் செய்யப்படும் வேறு பணிகள் என்ன?
தாவரக் கழிவுகளைப் பயன்படுத்தி 1 யூனிட் மின்சாரம் ரூ.1.50 பைசாவில் உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. எங்களது காட்டில் இயற்கை உரங்கள் தவிர வேறு எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. குறைந்த விலையில் "பயோ-கேஸ்' உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறோம். மூங்கில் கழிவுகளையும், மண்ணையும் சேர்த்து செங்கல் உருவாக்கி அதைப் பயன்படுத்தி கட்டடம் கட்டியுள்ளோம். இதுதவிர மேலும் பல ஆய்வுகளைச் செய்து வருகிறோம்.
கூட்டுறவு முறையில் பண்ணையம் செய்வது ஏன்?
இனிவரும் காலங்களில் தனிநபரால் விவசாயம் செய்வது எளிதான காரியம் அல்ல. கூட்டுறவு முறையில் பண்ணையும் செய்யும்போது மேலைநாடுகளில் இருந்து இயற்கையை கொள்ளையடிக்க வரும் ஆதிக்க சக்திகளை எளிதில் எதிர்கொள்ள முடியும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட முடியும். கூட்டுறவு முறையில் பண்ணையம் செய்யும்போது, குளங்கள், தடுப்பணைகள் கட்டுதல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டால் செலவு குறையும்.
சுற்றுச்சூழல் தொடர்பாக உங்களது போராட்டங்கள் குறித்து...
சேலம் உள்பட சில மாவட்டங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் தொடங்கப்பட்ட பல ஆலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். நீர்நிலைகளை ஆக்கிரமித்திருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றிருக்கிறோம்.
உங்களது அடுத்தகட்ட திட்டம் என்ன?
கூட்டுறவு மூங்கில் காட்டில் தீவுகள் போன்ற அமைப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை இயற்கை சுற்றுலா அழைத்து வந்து 5 முதல் 10 நாள்கள் வரை பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். குட்டைகளில் மீன் பண்ணை அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை இத்திட்டத்துக்காக அரசிடம் இருந்து எவ்வித கடனோ, மானியமோ பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...