/

தடை முறித்த தட​கள ஓட்​டம்!

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. சிப்பிக்குள் இருக்கும் முத்தைத் தனித்து எடுத்து அடையாளம் காட்டுவதற்கு ஒரு முயற்சி தேவைப்படுவதை போல ஒருவரின் திறமையைப் பட்டைதீ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:59 pm

ஆர். வேல்முருகன்

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. சிப்பிக்குள் இருக்கும் முத்தைத் தனித்து எடுத்து அடையாளம் காட்டுவதற்கு ஒரு முயற்சி தேவைப்படுவதை போல ஒருவரின் திறமையைப் பட்டைதீட்டி பிரகாசிக்க வைக்க ஒரு வாய்ப்பு தேவைப்படுகிறது.

வறுமை காரணமாக வேலை தேடி வந்த இடத்தில் படிப்பைத் தொடர்ந்த கிராமத்து இளைஞர் ஒருவருக்கு தடகளப் போட்டிகளில் இருந்த ஆர்வத்தைத் தெரிந்து கொண்டு பயிற்சியளித்ததால் தொடர்ந்து ஓட்டப் பந்தயத்தில் சாதித்து வருகிறார். அந்த இளைஞர் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியைச் சேர்ந்த ஆர்.ராஜேஷ்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் திருமானூர். டீக்கடை வைத்திருந்த அப்பா ராஜேந்திரன். அம்மா ராஜம்மாள். அண்ணன், தம்பி என குடும்பத்தில் மொத்தம் 3 பேர். பத்தாம் வகுப்பு முடிந்தபின் கோவைக்கு வேலை தேடி வந்தார் ராஜேஷ். மாமா மூர்த்தியின் வீட்டில் தங்கி வேலை தேடத் துவங்கினார். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதையடுத்து அத்தை நாகேஸ்வரியின் தூண்டுதலின் பேரில் பிளஸ் 2 படித்தார். பின் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடப் பிரிவில் சேர்ந்தார்.

கல்லூரியிலும் முதல் 2 ஆண்டுகள் வரை விளையாட்டுத் தொடர்பான எவ்வித முயற்சியும் செய்யவில்லை. ஆர்வம் இருந்தாலும் உரிய பயிற்சி இல்லாததால் ராஜேஷால் பிரகாசிக்க முடியவில்லை. அதன்பின் இந்திய சர்வீசஸ் அணிக்குப் பயிற்சியளித்த ஜூனியர் கமாண்டர் ஆபீசர் ஆர்.சூரஜ்ஜிடம் 6 மாதங்கள் பயிற்சி பெற்றார். இதுதான் ராஜேஷின் வாழ்க்கையில் திருப்புமுனையானது. இதற்குள் ராஜேஷின் கல்லூரிப் படிப்பு முடிந்தது. மேல் படிப்புக்காகப் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் சேர்ந்தார்.

இக்கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த ஊக்கத்தாலும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் பாரதியின் கண்காணிப்பிலும் ராஜேஷ் எவ்விதத் தடையுமின்றி தடகள விளையாட்டில் காலூன்றிச் சாதனையின் உச்சத்துக்குச் செல்ல முடிந்தது.

சென்னையில் நடந்த அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றதுதான் முதல் பதக்கம். பாரதியார் பல்கலைக் கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான 1500, 5000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த சாதனையை ராஜேஷ் முறியடித்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இதன் மூலம் அனைவரின் பார்வையும் ராஜேஷ் பக்கம் திரும்பியது.இதன்பின் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தங்கப் பதக்கத்தை ராஜேஷ் தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். தருமபுரி, பாரதியார் பல்கலைக் கழகம், கோவை செம்மொழி மாரத்தான் எனப் பல்வேறு போட்டிகளில் ராஜேஷ் முதலிடத்தைக் கைப்பற்றித் தங்கப் பதக்கம் பெற்றார்.

புகழ்பெற்ற சென்னை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பல ஆயிரம் பேரில் மூன்றாவது இடம் கிடைத்தது. இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் மெடல்களையும் கைப்பற்றிச் சாதனை படைத்து வரும் ராஜேஷ் கூறியது:

""கல்லூரியில் படிக்கும்போது உரிய பயிற்சியாளர் அமைந்ததால் என்னால் சாதிக்க முடிந்தது. இப்போது சரஸ்வதி தியாகராஜா கல்லூரி நிர்வாகத்தினர் மிகுந்த ஒத்துழைப்புத் தருகின்றனர். ஆசிய மற்றும் உலக அளவில் தடகளத்தில் சாதித்து இந்தியாவுக்காகப் பதக்கம் வென்று ஓட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.