எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மனப்பாடம் அல்ல, மனப்படம்!

இன்றைய தலைமுறைக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று நினைவாற்றல். காலம் போகிற போக்கில் பழையவற்றையெல்லாம் நினைவுப்படுத்திக் கொண்டு இருக்க முடியுமா? என்று நம்மிடம் அவர்கள் கேள்வி எழுப்பும் நிலையில் உ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:21 pm

தி. இன்பராஜ்



இன்றைய தலைமுறைக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று நினைவாற்றல். காலம் போகிற போக்கில் பழையவற்றையெல்லாம் நினைவுப்படுத்திக் கொண்டு இருக்க முடியுமா? என்று நம்மிடம் அவர்கள் கேள்வி எழுப்பும் நிலையில் உள்ளனர்.

ஆனால், படிக்கும் பருவத்தில் நினைவாற்றல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. நினைவாற்றல் என்பது தானாக வருவதில்லை என்றாலும் பயிற்சி மூலம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் என்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஆசிரியரான ஜான் லூயிஸ்.



ஹைதராபாதில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான நினைவாற்றல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது முறையாக "சாம்பியன்' பட்டத்தைப் பெற்ற பெருமைக்குரியவர்.

நம்மில் பலருக்கு நினைவாற்றல் போட்டி என்பது புதுமையாக இருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக முழுக்க நினைவாற்றல் போட்டிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி, நினைவாற்றல் போட்டி எப்படி நடத்தப்படும், இந்தப் போட்டியில் வெற்றிபெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், தனது எதிர்காலத் திட்டம் ஆகியவை குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார் ஆசிரியர் ஜான் லூயிஸ்..

""திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள பெருமாள்பாளையம் எனது சொந்த ஊர். சிறு வயதிலேயே திருச்சியில் குடியேறிவிட்டோம். எம்.எஸ்ஸி., வேதியியல் மற்றும் எம்.எட். படித்துள்ளேன்.

தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கடந்த

1997-ம் ஆண்டு ஒரு வெளிநாட்டு நண்பரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, எனக்குள் நினைவாற்றல் திறமை அதிகம் இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

அவரது ஆலோசனையின்படி அதை மேலும் வளர்த்துக் கொள்ளும்விதமாக, சில பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் "கியூப்' விளையாடத் தொடங்கினேன். நல்ல பலன் கிடைத்தது.

லண்டனில் உள்ள உலக நினைவாற்றல் விளையாட்டுக் குழுவின் கீழ் இயங்கும் இந்திய நினைவாற்றல் விளையாட்டுக் குழு மூலம் கடந்த மாதம் 31-ம் தேதி ஹைதராபாதில் "தேசிய நினைவாற்றல் சாம்பியன்ஷிப்- 2010' என்ற போட்டி நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் இருந்து 110 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். வார்த்தைகளை மனப்பாடம் செய்தல், எண்களை மனப்பாடம் செய்தல், பெயர்களையும், முகங்களையும் மனப்பாடம் செய்தல், சீட்டுக் கட்டுகளை மனப்பாடம் செய்தல், பைனரி எண்களை மனப்பாடம் செய்தல் என மொத்தம் 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 2,844 புள்ளிகள் பெற்று நான் முதலிடத்தைப் பிடித்தேன்.

நினைவாற்றல் போட்டி என்பது அர்த்தம் தெரியாமல் அப்படியே மனனம் செய்து ஒப்புவிப்பது அல்ல. எப்படி படிக்க வேண்டும், எப்படி படித்தால் நினைவில் நிற்கும் என்பன போன்ற பல உத்திகளை உள்ளடக்கியதுதான் நினைவாற்றல் போட்டி.

இது ஒரு கலை. இதைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். எனது 40 வயதில்தான் நினைவாற்றல் தொடர்பான திறமைகளை மேம்படுத்தத் தொடங்கினேன். தற்போது, எனக்குத் தெரிந்த உத்திகளை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

"மனப்பாடம் செய்வதற்கு மனப்படம் செய்தல்' முக்கியம் என்பதுதான் எனது தாரக மந்திரம். எந்த விஷயத்தையும் நாம் தெரிந்து கொள்ளும்போது அந்த விஷயம் பற்றி படக் காட்சிகளாக மனதில் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த முறையை அனைத்துக் குழந்தைகளுக்கும் எடுத்துக் கூறினால் படிப்பு சுகமானதாக அமையும். எல்லோரும் நினைவாற்றல் மிகுந்தவர்களாக வளர முடியும் என்பதற்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும்'' என்றார் அவர்.

நினைவாற்றல் போட்டியில் முதலிடம் பெற்ற ஜான் லூயிஸின் மகன் பெர்னட் ஒர்லான்டோ "ரூபிக் க்யூப்' விளையாட்டில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனைகளைப் படைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.