காஞ்சனை கனவு!
தென் ஆப்பிரிக்காவின் ரயில் பயணத்தின்போதுபட்ட அவமானங்கள் காந்தியின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதுபோல வாழ்க்கையில் ஏதாவது ஒரு சம்பவம் திருப்பு முனையை ஏற்படுத்துகிறது. தாய்மையடைந்து மரு


தென் ஆப்பிரிக்காவின் ரயில் பயணத்தின்போதுபட்ட
அவமானங்கள் காந்தியின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதுபோல வாழ்க்கையில் ஏதாவது ஒரு சம்பவம் திருப்பு முனையை ஏற்படுத்துகிறது.
தாய்மையடைந்து மருத்துவமனைக்குச் செல்லும்போது பலர் பட்ட கஷ்டங்கள் ஏற்படுத்திய தாக்கம், ஒரு கிராமத்துப் பெண்ணை இந்திய இளைஞர்
களின் கனவான சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனையின்
உச்சத்துக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ராணி காஞ்சனா. ஐ.ஏ.எஸ். கனவில் 3 முயற்சிகளில்
தோல்வியடைந்தாலும் கணவரின் ஊக்கத்தால் 4-வது முயற்சியில் இந்திய வருவாய்த்துறைப்
பணிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். கொஞ்சம் பின்னோக்கிப்
பார்ப்போம்...
தாலுகா அலுவலகத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற தந்தை எஸ்.முருகவேல், தாய் தெய்வநாயகியின் ஒரே மகள் ராணி காஞ்சனா. எம்.எஸ்.சி. மைக்ரோ பயாலஜியில் பட்டம். வெளிநாட்டு வேலை - ராணி காஞ்சனாவின் இளமைக் கனவு இது.
ஆனால் படித்து முடித்தவுடன் 2002-ல் உடுமலையைச் சேர்ந்த விவசாயி பி.ஜெயக்குமாருடன் திருமணம். குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பாக இருந்தனர். மனைவியின் படிப்புக்குத் தகுந்த வேலை உடுமலையில் கிடைக்காதென்பதால் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யுமாறு ஜெயக்குமார் கூறினார்.
கடந்த 2004-ல் ஆஸ்திரேலியாவில் ராணி காஞ்சனாவுக்கு வேலை கிடைத்தது. மனைவியின் விசாவில் கணவர் ஜெயக்குமாருக்கு விசா தர ஆஸ்திரேலியத் தூதரகம் மறுத்தது. அதனால் ராணி காஞ்சனாவும் வேலையை உதறினார்.
இந் நிலையில் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஏழை, எளிய மக்கள் படும் வேதனைகள், துயரங்களைக் காணச் சகிக்காமல் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ராணி காஞ்சனாவின் மனதில் விதையாகத் தோன்றியது.
இந்தச் சமயத்தில் தந்தை முருகவேல் ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்து மகளுக்குக் கூறினார். கணவர் ஜெயக்குமாரும், உறவினர்களால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைப்பதற்கும், ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்கும் கண்டிப்பாக ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார்.
2005-ல் குழந்தை அர்ஜூன் ஆதித்யா. 2006-ல் மகனுக்கு 6 மாதமாக இருக்கும்போது ஐ.ஏ.எஸ். கனவுடன் சென்னைக்குச் சென்றார் காஞ்சனா. 2006 மற்றும் 2007-ல் துவக்க நிலைத் தேர்வில் தோல்வியடைந்தார். 2008-ல் மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் நேர்முகத் தேர்வில் தோல்வி. இனி ராணி காஞ்சனாவின் வார்த்தைகளில்....
""தோல்வி ஏற்பட்ட சமயத்தில் உறவினர்கள் கூறிய வார்த்தைகள் கடுமையான காயத்தை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் தாய்க்குத் தாயாகவும் தோழனாகவும் இருந்து ஆறுதல் கூறினார் கணவர் ஜெயக்குமார். மகனையும் வளர்த்தார். உறவினர்களின் இல்லங்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கும் திருமணத்துக்குப் பின் செல்லாததால் நெருக்கடி. அப்போதெல்லாம் கணவர் மட்டும் நிகழ்ச்சிகளுக்குச் செல்வார். அப்போதும் பலர் வார்த்தைகளால் அடித்தனர். ஆனால் ஜெயக்குமார் எதையும் லட்சியம் செய்யவில்லை.
இந்தச் சமயத்தில் 2009-ல் அகில இந்திய அளவில் 434-வது இடத்தில் ராணி காஞ்சனா தேர்ச்சி பெற்றார் என்ற செய்தி கிடைத்தவுடன் சொல்லால் அடுத்தவர் மனது புண்படும்படி பேசியவர்களின் வாயிலிருந்து இப்போது புன்சிரிப்புடன் வாழ்த்தும் சேர்ந்து கொண்டது.
2009-ல் தந்தைக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின்போது தீவிரமாக தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். யாரும் தகவல் சொல்லவில்லை.
ஆனாலும் தகவல் தெரிந்து 20 நாள்கள் தந்தையுடன் இருந்தேன். அந்த நிலையிலும் தேர்வுக்குச் செல் என்று தந்தையும் தாயும் சொன்னதைத் என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை (இதைச் சொல்லும்போது அவரின் கண்கள் கலங்கின).
தேர்வுக்கு இருந்த 10 நாள்களில் சென்னை சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் ஆர்.சத்தியமூர்த்தி, குடும்ப உறவுகளைத் தாண்டித் தேர்வுக்கு உதவியதை எப்போதும் மறக்க முடியாது. இதேபோலக் கணவர் ஜெயக்குமார். குழந்தையையும் கவனித்துக் கொண்டு எனக்குத் தேவையான உதவிகளையும் செய்தார். ஐ.ஏ.எஸ். தேர்வுதான் எனது இலக்கு. இப்போது இந்திய வருவாய்த்துறைப் பணிக்குத் தேர்வு பெற்றுள்ளேன். ஆனால் பயிற்சிக்குச் செல்லவில்லை. ஐ.ஏ.எஸ். தேர்வுதான் எனது இலக்கு'' என்றும் ராணி காஞ்சனா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...