திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உன்னதம் யாருக்கும் விளங்குவதில்லை!

விஞ்ஞானம் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் நவீன வாழ்க்கை தொலைத்த அற்புதங்களில் கடிதமும் ஒன்று. வன்முறை, கவர்ச்சி, வெட்டு, குத்து, இரத்தம் என தமிழ் சினிமா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எழுபதுக

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:29 pm

ஜி. அசோக்

விஞ்ஞானம் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் நவீன வாழ்க்கை தொலைத்த அற்புதங்களில் கடிதமும் ஒன்று. வன்முறை, கவர்ச்சி, வெட்டு, குத்து, இரத்தம் என தமிழ் சினிமா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எழுபதுகளில் கடிதம் மூலம் வளர்ந்த காதலையும், அந்தக் காதலைத் தொலைத்த வலியையும் பத்திரப்படுத்தி "பொக்கிஷமா'கத் தந்திருக்கிறார் சேரன்.""மாற்றங்கள் மட்டும்தான் மாறாதது. எனக்கான சினிமா பாணியில் நான் ஜெயித்து விட்டேன். வழக்கமான சினிமாவில் பயணப்பட்டு சலிப்படைந்த ரசிகர்களுக்கு ஒரு நவீன கால சினிமாவைக் காட்டியிருக்கிறேன் என்ற பெருமை இருக்கிறது'' என்கிறார் சேரன்.

எழுபதாம் ஆண்டு கால படம் என்பதால் சிரமம் ஏற்பட்டதா?

ஓர் இயல்பான, யதார்த்தமான, உண்மையான சினிமாவை எடுப்பது எப்போதுமே எனக்குப் பிடிக்கும். எழுபதுகளில் நடக்கும் கதையைச் சொல்லும் போது ரசிகர்களை அந்த கால கட்டத்துக்கே அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அதில் வெற்றி பெற்றதாக நினைக்க முடியும். அதற்காக கதை, கதைக்களம், காட்சிகள், அரங்க அமைப்பு, உடைகள், கதாபாத்திரங்கள், உரையாடல் என அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டி இருந்தது. நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்தோம். தற்போது அதற்கான பாராட்டுகளைப் பெறும் போது சுகம் தெரிகிறது.

ஃபிளாஷ் பேக், கதை சொல்லும் நேரத்தின் நீளம் இதுவெல்லாம் உங்கள் படங்களில் தொடர்கிறதே?

கதை என்றால் என்ன? ஒரு நிமிடத்தில் நடந்த சம்பவத்தில் சில விஷயங்களைக் கலந்து ஒரு நாள் முழுவதும் சொல்லி முடிப்பதும் கதைதான். ஒரு வருடத்தில் நடந்ததை ஒரு நிமிடத்தில் அதே சுவாரஸ்யத்துடன் சொல்லி முடிப்பதும் கதைதான்.

"ஒரு ஊர்ல...' என பாட்டி ஆரம்பிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். பாட்டு பாடிக் கொண்டிருந்த சினிமாக்களுக்கு முன் தவமிருந்தவர்கள் நாம். பீம்சிங் காலம் வரை மூன்று மணி நேர சினிமாவைப் பார்த்தவர்கள் நாம் என்பதை மறந்து விடக் கூடாது.

 "தவமாய் தவமிருந்து' ஒரு அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் பாச உணர்வுகளின் கதை. அதைச் சொல்ல கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.

அதுபோல்தான் "பொக்கிஷம்'. இது கடிதம் மூலம் காதல் வளர்த்த கதை. இதை எடுத்தோம் வைத்தோம் என்று சொல்லி விட முடியாது. சினிமா என்பது உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். உண்மைக்கு நெருக்கமாக இல்லாத எந்த சினிமாவையும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிகழ் காலத்தில் இருக்கும் பார்வையாளனை, கடந்த காலத்தில் இருந்த ஓர் உலகத்துக்கு அழைத்துச் செல்லவே ஃபிளாஷ்-பேக் உத்தியைக் கடைப்பிடிக்கிறேன்.

"வெற்றிக் கொடிக் கட்டு', "தேசிய கீதம்' மாதிரியான சமூக படங்களை எதிர்பார்க்கலாமா?

சமூக படங்களை மக்கள் எல்லா காலங்களிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களின் ரசனைகள் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக் கொண்டே இருக்கிறது. இப்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்கள் மட்டுமே இங்கு வெற்றி பெறுகின்றன. மக்களின் ரசனை சமூக படங்களை நோக்கி வரும் போது என்னிடம் இருந்து நிச்சயமாக சமூக படங்களை எதிர்பார்க்கலாம்.

பொக்கிஷத்தின் காட்சி அமைப்பில் சிரமம் இருந்ததா?



70-ம் காலகட்டம், கம்யூனிச சிந்தாந்தத்தில் நாட்டமுள்ள கதாநாயகன், இலக்கியத் தேடல் கொண்ட நாயகி, காதல் கடிதங்களின் பயணம், இஸ்லாமியப் பின்னணி, நாகூர், கோல்கத்தா, சென்னை என காட்சிப்படுத்தலில் இருந்த எனக்கான சவால்களில் நான் சளைக்காமல் உழைத்திருக்கிறேன். நாயகனின் உடை பாணி, தோற்றம் ஆகியவை கதையின் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தை திரையில் கொண்டு வருவது நம் சினிமாவில் சிரமமான ஒன்றுதான். ஏனென்றால் பழமையைப் பாதுகாக்க, தொன்மங்களின் உன்னதத்தை விளங்கிக் கொள்ள இங்கு யாருமில்லை.

பட்ஜெட், குறுகிய காலம் இத்தனை வட்டங்களுக்குள் இயல்புத் தன்மை மாறாது பொக்கிஷத்தை நான் எடுக்க வேண்டியிருந்தது.

அடுத்த தேடல்?



வன்முறை, வக்கிரம் என்ற எந்த கெட்ட அஸ்திவாரங்களும் இல்லாத திரைப்படங்களை கொண்டு வருவேன் என்ற நம்பிக்கையை மக்களிடம் நான் தொடர்ந்து வழங்கியிருக்கிறேன். முந்தைய படங்களிலிருந்து மிக முக்கியமான படமாக "பொக்கிஷம்' இருந்தது என்பதில் மாற்றமில்லை. உண்மை நிலையிலிருந்து சற்றும் விலகாது, யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. வழக்கமான சினிமா உலகத்திலிருந்து நவீன சினிமாவை பார்வையாளனுக்குப் பழக்கப்படுத்தும் விதமாக என் அடுத்த தேடல்கள் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.