/

அண்ணாந்து பார்க்கும் ரசிகன்; குனிந்துகூட பார்க்காத சினிமா!

கடலைப் பின்னணி கதை களனாகக் கொண்டு "இயற்கை' படத்தைக் கொடுத்த இயக்குநர் ஜனநாதன், தற்போது "பேராண்மை' படத்தை காட்டைப் பின்னணி கதைக் களனாகக் கொண்டு கொடுக்க உள்ளார். தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களில் அதிகம்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:55 pm

அசோக்

கடலைப் பின்னணி கதை களனாகக் கொண்டு "இயற்கை' படத்தைக் கொடுத்த இயக்குநர் ஜனநாதன், தற்போது "பேராண்மை' படத்தை காட்டைப் பின்னணி கதைக் களனாகக் கொண்டு கொடுக்க உள்ளார். தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கும் உள்ளாகியிருக்கும் படமான இதுகுறித்து ஜனநாதனிடம்   

பேசினோம்:

பேராண்மை?

  ஒரு விஷயத்தைச் சினிமா மூலமாக உணர்த்த முயற்சி செய்கிறேன். "ஈ' படத்துல பயோ -வார்ங்கற மேட்டரைச் சொன்னேன். இதைப் பற்றி ஹாலிவுட்டில் கூட இன்னும் படம் வரவில்லை. உலக நாடுகளில் ஒரு பிரிவு மனிதர்கள் பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என சொல்லியிருந்தேன். இதில் கூலிப்படைகள் பற்றி சொல்றேன். இதே மாதிரி கதைகள் கொஞ்சம் அதீத கற்பனைகள் மாதிரி தெரிஞ்சாலும் இதுதான் உண்மை. உண்மை கற்பனையை விட பயங்கரமானது.

கூலிப்படைகள் என்றால்? நம்மூர் ஆள்களா?

  கூலிப்படைகள் என்றால் இங்கே உள்ளவர்கள் கிடையாது. இங்கே உள்ளவர்கள் பணம் கொடுத்தால் எப்படி கொல்றாங்களோ, அதையே சர்வதேச அளவில் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி அதிகமாக தமிழ் சினிமா பேசவில்லை. இந்தியாவின் வளங்கள் மேல் இன்னும் பல சர்வதேச நாடுகளுக்கு கண் இருக்கு. மதிப்பில்லாத பல வளங்களை அள்ளிச் சென்ற பின்னும் சர்வதேச நாடுகள் வேட்டை வெறியோடுதான் திரியுது. அந்த வளங்களை நாசம் செய்ய அரசியல் ரீதியான விஷயங்கள் ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்கு. இந்த விஷயங்களைத்தான் இதில் சொல்லப் போறேன்.



  படப்பிடிப்பு முழுவதுமே காடுகளில்தான் நடந்ததா?

  முழுப்படமே காடுகளில்தான்  நடந்தது. இப்படி எடுப்பது உள்ள சவாலான விஷயம் பார்க்க வரும் பார்வையாளனை சலிப்படையாமல் உட்கார வைப்பதுதான். வேறு லொக்கேஷனாக இருந்தால் வித்தியாசமான இடங்களை எல்லாம் காண்பிக்க முடியும். இதில் முடியாதே.

  கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகள்தான் படம் எடுத்தோம். இந்தக் காடுகளுக்குள் அட்டைப்பூச்சிகள் அதிகம். உடம்பு முழுவதும் உப்பைத் தேய்த்துக் கொண்டால் அட்டைப்பூச்சிகள் நம்மிடம் வராது. ஆனால் இந்த உப்பு வாசத்திற்கு யானைகள் நம்மை நோக்கி வரும். இதை அனுபவத்தில்தான் உணர்ந்தோம். கிரேன், காமிரா மற்றும் பல படப்பிடிப்பு சாதனங்களை டிரக்கில் எடுத்துச் சென்று அங்கிருந்து பரிசலில் கொண்டுபோய் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்குத் தூக்கிக்கொண்டு நடந்தோம். செல்போன்களும் இங்கு வேலை செய்யாது என்பதைவிட                                                                   செல்போன்களுக்கான அலைவரிசைகளை அந்த நிறுவனங்களே அனுமதிக்கக் கூடாது என்ற சட்டமும் உள்ளன. அங்கு வாக்கி டாக்கிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். நாங்கள் ஏதோ எப்படியோ படப்பிடிப்பை நடத்திவிட்டோம். சமீபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி இறந்தபோது அவரது உடலைத் தேடி எடுப்பதற்கு ஐந்தாயிரம் பேர் இரண்டு நாள் முழுவதும் ஈடுபட்டனர் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் படப்பிடிப்பு நடத்த எவ்வளவு சிரமப்பட்டிருப்போம் என்று.

பட டிரைலரைப் பார்க்கும்போது வெளிநாட்டு நடிகர்களை அதிகமாகப் பயன்படுத்திய மாதிரி தெரிகிறதே?

  படத்தின் மெயின் காட்சிகளில் நடிப்பதற்கு ஹாலிவுட் சென்று நடிகர்களைத் தேர்வு செய்தோம். ரோலண்ட், கிக்கிங்சர் சிசோ என்ற இரண்டு பேரை மெயின் ஆர்ட்டிஸ்டாகவும் பல நாடுகளைச் சேர்ந்த பதினைந்து துணை நடிகர்களையும் நடிக்க வைத்தோம். படப்பிடிப்பை இந்தியாவில்தான் வைப்போம் என்றவுடன் ரோலண்ட் கிக்கிங்கரும் சிசோவும் யோசித்தனர். இந்தியா என்றாலே பாம்புகளும், பல்லிகளும் நிறைந்த நாடு. அடிப்படை வசதிகள் இருக்காது. இந்து -முஸ்லிம் கலவரம் இருக்கும் என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது.

  பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளில் எல்லாம் ஹாலிவுட்டில் நடித்திருக்கிறீர்கள். அதைவிட இந்தியா நன்றாகவே இருக்கும் என்று நம்பகத்தன்மையை ஏற்படுத்தி கூட்டிவந்து நடிக்க வைத்தோம். இங்கு வந்தவர்கள் பிரமித்துப்போய் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதன்பிறகு படப்பிடிப்பு முடிந்தவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு பரிசு கொடுக்க ரோலண்ட்டும் கிக்கிங்கரும் விரும்பினர். ரோலண்ட கிக்கிங்கருக்கு சிசோவும் அங்கு வேலை பார்த்தவர்களின் பெயரைச் சீட்டில் எழுதி பானையில் போட்டு குலுக்கி எடுத்து பத்தாயிரம் ரூபாய் வரை பரிசாகக் கொடுத்தார்கள். அதில் முதல் பரிசு செட்டு உதவியாளர் அப்துல்லாவுக்குக் கிடைத்தது. கடைசியில் அவர்கள் எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தனர்.

  "பூ' -படம் ஒரு சிறுகதையிலிருந்தும், "நான் கடவுள்' -நாவலிலிருந்தும் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

  இது நல்ல ஆரம்பம். "ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு கதை இருக்கும்'னு சொன்னார் சுஜாதா. ஒரு இயக்குநர் தன் வாழ்க்கையில் பார்த்த, கேட்ட விஷயங்களை வைத்து அதிகபட்சம் மூன்று திரைப்படங்களை எடுக்க முடியும். அதற்கு மேல் காட்சி வடிவங்கள், அவரையும் அறியாமல் பழைய தன்மையைப் பிரதிபலிக்கும். இதிலிருந்து ரசிகர்களையும் நம்மையும் காப்பாற்றிக் கொள்ள எழுத்தாளர்களின் படைப்புகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது. புத்தகங்கள் சினிமாவாகும் போது அது இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.

யதார்த்த படங்களின் வருகை அதிகமாகி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

  தன்னை அண்ணாந்து பார்க்கும் ரசிகர்களை தமிழ் சினிமா குனிந்து கூடப் பார்ப்பதில்லை. சாப்பிட கையில் காசு இல்லாத போதும் படம் பார்க்கணும்னு ஆசையோடு அலைகிறவர்கள் நம்ம ரசிகர்கள். வயித்தை கிள்ளுற பசியோட நாயகனும் நாயகியும் சுவிஸ் மலையில டூயட் பாடுவதை ரசிச்சு கைதட்டுவாங்க. சினிமாவை வித்தியாசமான முறையில் ரசிக்கிற கூட்டம் இங்கேதான் இருக்கு. அப்படிப்பட்ட சினிமா ரசிகர்களுக்கு நாம் என்ன பெரியதாகச் செய்துவிட்டோம். எதையாவது செய்ய வேண்டும்னு ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

"பைசைக்கிள் தீவ்ஸ்' மாதிரி உலக சினிமாக்கள் தொட்ட இடங்கள் இன்னும் வெற்றிடமாகவே இருக்குது. ஹாலிவுட் ஃபேன்டஸிக்கு முன் நம்மால் போட்டி போடவே முடியாது. உலக அளவில் நம் சினிமாவை எடுத்துச் செல்ல யதார்த்த சினிமாக்கள்தான் ஒரே வழி.

தமிழ் சினிமாவை மாற்ற வேண்டும் என நினைக்கிற இயக்குநர்களில் நீங்களும் ஒருவர், தமிழ் சினிமா எப்படியிருக்கு?    இந்திய சினிமாக்களிலே தமிழ் சினிமாதான் தன் கலாசாரத்தை திருப்தியாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறது. மற்ற மொழி சினிமாக்கள் எல்லாம் தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. இதைப் பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். "சுப்பிரமணியபுரம்', "பருத்தி வீரன்', "வெயில்'னு நம்ம இளம் இயக்குநர்களின் படைப்புகளை பார்த்து விட்டு மற்ற இந்திய சினிமாக்கள் கலங்கி போய் நிற்குது தெரியுமா? மாற்றங்களை விரும்புகிறவர்கள் சினிமா நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தமிழ் சினிமா இனி தன் அடையாளத்தை சிறப்பாக வெளிப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.