கடற்கரை சிநேகிதன்! இயக்குநர் ராஜமோகன்
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் என்று பெயர். ஒரு சில தென்னந்தோப்புகளை கடந்து பயணிக்கும் ஒற்றையடி பாதைகளில் சென்றால் கடல் அலை வந்து கால் நனைத்து செல்லும். தேங்காய் வியாபாரிகளும், சில மீனவ மக்களும், வி


நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் என்று பெயர். ஒரு சில தென்னந்தோப்புகளை கடந்து பயணிக்கும் ஒற்றையடி பாதைகளில் சென்றால் கடல் அலை வந்து கால் நனைத்து செல்லும். தேங்காய் வியாபாரிகளும், சில மீனவ மக்களும், விவசாய மக்களும் வசிக்கும் அழகிய கிராமம்.
பிறந்து வளர்ந்து இதுதான் மனித வாழ்க்கை என ஆராய்ந்து பார்ப்பதற்குள் என் அப்பா என்னை விட்டு போய் விட்டார். அதுவரை மரணத்தின் வலி என்னவென்று தெரியாது. அப்பா ரெங்கப்பனை வீட்டின் ஒரு மூலையில் கிடத்தி வைத்திருந்தார்கள். ஊது வத்தி நெடி, சாராய நெடி, தாரை தப்பட்டைகளுடன் கூடிய ஆட்டம் என ஊரே கலவரப்பட்டு அப்பாவை அடக்கம் செய்து விட்டார்கள். மரணத்தின் வலி எங்கள் வீடு முழுவதும் பரவி கிடந்தது. மனித வாழ்க்கையில் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என அப்போதெல்லாம் எனக்கு தெரியாது. அதனால் அழுது கிடந்த பொழுதுகள் அநேகம்.
குடும்பத்தின் பொருளாதாரத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு அண்ணனுக்கும் எனக்கும் வந்து சேர்ந்தது. எட்டாம் வகுப்பின் போது வீடு வீடாக பேப்பர் போட என் ஊரை சுற்றியிருந்த கிராமங்கள் தோறும் சைக்கிளை எடுத்து கிளம்பி விட்டேன்.
மனசு எதிலும் ஒட்டாமல் அலைந்த நேரம். எல்லோரையும் கலவரப்படுத்தி எதாவது சாதிக்க வேண்டும் என அப்போதே முடிவு எடுத்து விட்டேன். காலை 6 மணிக்கு எழுந்தால் ராஜாக்கமங்கலம், ராஜாக்கமங்கலம் துறை, அழிக்காய், பிரம்படி தோப்பு, முட்டம் என என் சைக்கிள் பறக்க ஆரம்பித்து விடும். இந்த உலகம் ஒரு சிறுவனுக்கு வழங்க கூடிய எந்த சுதந்திரத்தையும் எனக்கு வழங்கவில்லை. அந்த விஷயத்தில் உலக வாழ்க்கையின் மீது பயங்கர கோபம் இருந்தது.
கடற்கரை கிராமங்கள் என்பதால் சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் என பொழுதுகள் ரம்மியமாக இருக்கும். அமைதியும், தனிமையும் அதிகமாக கிடைத்தது. காலை எடுத்த என் சைக்கிள் தினமணி, உள்ளிட்ட பத்திரிகைகளை வீட்டு வாசல்களில் வீசி எறிந்து விட்டுப்பள்ளி நோக்கி பயணிக்கும்.
"முட்டம்' மீனவ கிராமம். என்னால் இன்று வரைக்கும் நேசிக்கப்படும் கிராமம். கடல் அலைகள் வந்து ஊரையே கழுவி சுத்தம் செய்யும் அளவிற்கு கடலோடு சினேகம் கொண்ட கிராமம். பூமிக்கும் கடலுக்குமான உறவை கடல் அலைகள் தினந்தோறும் புதுப்பித்து கொண்டிருக்கிறது.
வயலில் களை எடுத்து போட்ட மாதிரி கூரை வேயப்பட்ட வீடுகள். கடல் அருகில் பிறந்ததால் மீன் பிடித்தே ஆக வேண்டும் என்ற கடமையில் கட்டுமரங்களில் மீன் பிடிக்க பயணமாகும் மீனவர்கள். முதல் நாள் மீன்களைக் காய வைக்கும் வெற்றிலை பாக்கு குழைய குழைய போட்ட மீனவ கிழவிகள். பள்ளி நேரம் வரை கடலில் குளித்து விட்டு அவசரமாக கால்சட்டையை மாட்டி கொண்டு பள்ளிக்கு ஓடும் சிறுவர்கள். கணவர்களை கடலுக்கு அனுப்பி வைத்து விட்டு கரையில் குழந்தைகளுடன் காத்திருக்கும் மனைவிமார்கள். என ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கும்.
சின்ன வயதில் இருந்தே உலகத்தை வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. கண்கள் பார்க்கும் வேடிக்கைகளை விடவா படைப்பாளிகளுக்கு கற்பனைகள் வந்த கொட்டி கொடுத்து விடப் போகிறது. கடலுக்கு செல்லும் ஆசை கணவனை கண்கள் கலங்க கட்டி பிடித்து முத்தம் கொடுத்த பெண்ணின் கண்ணீர் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. தினமும் பயணம் செய்து வந்ததால் எல்லோரும் என்னை அண்ணன், தம்பி என வயதுக்கு ஏற்றவாறு உறவு முறை வைத்து அழைப்பார்கள். எல்லா முகங்களும் எனக்கு பரிச்சயம்.
பேப்பர் போடுபவன் என்பதால் எனக்கு அந்த கிராமங்களில் தனி மரியாதை இருந்தது. காலையில் என்னை பார்த்தவுடனே "நாகர்கோவிலில் எதோ கொலையாமே எப்படி நடந்தது தம்பி' எனக் கேட்பார்கள். நானும் அதை பற்றி தெரிந்தது மாதிரி அது இப்படி அப்படி என ஏதோ ஒரு கதையை சொல்லி விட்டு சைக்கிளின் பெடலை அழுத்தி பறப்பேன். பேப்பர் விற்கிறவன் என்பதால் எனக்கு நாட்டு நடப்புகள் எல்லாம் தெரிந்திருக்கும் என்பது அவர்களின் கணிப்பு. கணிப்புகளிலே வாழும் மக்கள்தானே அவர்கள் என்ன செய்வார்கள்?
மீனவ வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் நானறிவேன். மீனவர்களோடு கடலுக்கு சென்றிருக்கிறேன். மீன் கிடைக்காமல் திரும்பி வந்திருக்கிறேன். உலகத்திலே மிகவும் பொறுமையோடு செய்கின்ற தொழில் அதுதான். கடலுக்கு சென்றவன் திரும்பி வருவானா என்பது கடலுக்குள் போகிறவனுக்கும் தெரியாது. கரையில் இருக்கும் தாரத்துக்கும் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அவர்களுடையது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தொழில் அந்த சமுதாயத்துக்கு உடையது.
இடையில் சென்னை வந்து உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த அண்ணன் விபத்தில் இறந்து விடவே குடும்பத்தை சோகம் இன்னும் தொற்றிக் கொண்டது. கோடி நாகங்கள் கூடி வாழ்க்கை முழுவதும் துரத்திக் கொத்தி கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். அது போன்ற உணர்வுதான் அப்போது.
அந்த சமயங்களில் எல்லாம் முட்டம் கிராமத்தில் அலையோரம் சைக்கிளை நிறுத்தி விட்டு வானம் பார்த்து படுத்து விடுவேன். அலைகள் கால் இடுக்குகளில் புகுந்து உடல் முழுவதும் பரவி மணல்களை உருவி செல்லும். வானமும் கடலும் ஏதேதோ சொல்லி செல்லும். வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்களுக்கான மருந்தை சரி விகிதத்தில் தருவது இயற்கைதான். எவ்வளவு பெரிய சோகம் இருந்தாலும் கடல் அலையில் கால் நனைத்தால் ஒரு புதிய தெம்பு வந்து விடும். சனி ஞாயிறு என்றால் இருட்டும் வரைக்கும் என் யாத்திரை தொடரும்.
மீனவ மக்களோடு அலைவேன், அலைகளோடு விளையாடுவேன். எங்கோ ஒரு பெரிய மலையிலிருந்து வெட்டி கொண்டு வந்து பூமி மூடிக் கிடக்கும் பாறையின் இடுக்குகளில் படுத்திருக்கும் என்னை, அலைகள் வந்து இழுத்து செல்லும். இயற்கையை நேசிக்க ஆரம்பித்த காலம். சூரிய உதயம் பார்த்திருக்கிறேன். சூரிய அஸ்தமனம் பார்த்திருக்கிறேன்.
மழை காலங்களில் ஊமைத் தனங்களுடன் இருக்கும் கடல் அலைகளோடு உறவாடி இருக்கிறேன். இந்து மாக சமுத்திரம், அரபிக் கடல், வங்காள விரிகுடா ஆகிய மூன்றும் சங்கமித்து கும்மி கொட்டும் விவேகானந்தர் பாறைக்கு சென்று இருட்டும் வரை வானம் பார்த்து கிடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற காசு சேர்த்து வைத்திருந்து பின் அதை குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்து வருத்தப்பட்டு இருக்கிறேன்.
கடற்கரையில் வானம் பார்த்து இயற்கையை நேசித்து கிடந்தவனை மாநகரம் ஒரு நாள் உள்ளிழுத்து கொண்டது. மாநகரத்தின் பொழுது போகாத நேரங்களில் மெரீனா கடற்கரைக்கு செல்வேன். கல்லூரிக்கு கட் அடித்து காதலிக்க இடம் தேடும் இளசுகள். மல்லிகைப் பூ விற்கிற விதவைகள். குழந்தைகளை குதிரைகளில் ஏற்றி விட்டு அவர்களின் பய முகத்தை ரசிக்கும் பெற்றோர்கள் என அனைவரும் அந்நியப்பட்டு இருப்பார்கள்.ஆனாலும் அன்று பார்த்த அதே வானும் கடலும் எனக்கு அன்னியமில்லை. அவையே என் படைப்பின் விதைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...