செல்லாக் காசு!
சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ரூபி மட்டும் தன் வீட்டு வாசலில் தனியாக உட்கார்ந்து, சிறிய மரப்பெட்டிக்குள் இருந்த காசுகளை


சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ரூபி மட்டும் தன் வீட்டு வாசலில் தனியாக உட்கார்ந்து, சிறிய மரப்பெட்டிக்குள் இருந்த காசுகளை வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனை செய்து கொண்டிருந்தான்.
÷பக்கத்துக்கு வீட்டுக்குக்குப் புதிதாய் குடிவந்திருந்த, கல்லூரியில் படிக்கும் இளைஞன் வாசு, ரூபியைப் பார்த்து ""ஏம்பா ரூபி, இந்தத் தெருக்காரப் பசங்களெல்லாம் உன்னை அடிக்கடி "செல்லாக்காசு... செல்லாக்காசு...'ன்னு சொல்லிக் கிண்டல் பண்றாங்களே.. ஏன்?'' என்றான்.
÷""அதுவாண்ணா... எங்க தாத்தா நிறைய காசு சேர்த்து வெச்சிருந்தாங்க. அதெல்லாம் அந்தக் காலத்துப் பழைய காசாம்; இப்ப அது செல்லாதாம்; சும்மாதான் பெட்டிக்குள்ள கிடந்தது. "இதையெல்லாம் பத்திரமா சேர்த்து வெச்சிக்கோ ரூபி, என்னிக்காவது உனக்கு உதவும்னு சொல்லி அதை வச்சுதான் நான் விளையாடிகிட்டிருப்பேன். அதனாலதான் தெருப் பசங்களெல்லாம் என்னைப் அப்படிக் கூப்பிடுறாங்க போலிருக்கு!''
÷""அவங்க அப்படிக் கூப்பிடும்போது உனக்குக் கோபம் வரலையா?''
÷""எனக்கு ஏன்ணா கோபம் வரணும்? நான் அதை வச்சு விளையாடறதுனாலதானே அப்படிச் சொல்றாங்க, நான் பொம்மைகளை வச்சு விளையாடினா அப்படிச் சொல்ல மாட்டாங்க இல்ல...'' என்றான்.
""அவங்க அப்படிச் சொல்றதுல வேறு ஒரு அர்த்தமும் இருக்குங்கறது உனக்குத் தெரியுமா?''
÷""அது என்ன அர்த்தம்ணா?''
÷""நீ வச்சிருக்கிற காசு எதுக்கும் உபயோகப்படாதது போல நீயும் எதுக்கும் யாருக்கும் உபயோகப்படமாட்டாய், எதுக்கும் உதவாதவன் என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொல்லி கிண்டல் செய்யறாங்க.''
÷""அதுக்கு அப்படியான்ணா அர்த்தம்! எனக்குத் தெரியாதே... ஆமா... இந்தச் செல்லாத காசுகளையே நான் செல்ல வச்சுட்டா?''
÷""அப்படி நீ செல்ல வச்சுட்டியானா, அப்புறம் நீதான் அவங்களுக்கு சூப்பர் ஸ்டாரா தெரியுவ....''
÷""கண்டிப்பா நான் ஒரு நாள் சூப்பர் ஸ்டாரா ஆகிக் காண்பிக்கிறேன் பாருங்கண்ணா, அப்ப நீங்களே என்னைப் பாராட்டுவீங்க தெரியுமா?''
÷மிகுந்த நம்பிக்கையாக ரூபி கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த வாசு, ""வெரிகுட் ரூபி, இப்படித்தான் பாசிட்டிவான, நம்பிக்கையான வார்த்தைகளையே பேசிப் பழகணும். இப்படிப் பேசறவங்க எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா சாதித்துக் காட்டுவாங்க'' என்று அவன் தோளைத் தட்டிப் பாராட்டிவிட்டுச் சென்றான் வாசு.
÷அன்றிரவு முழுவதும் ரூபி உறங்கவில்லை. அவன், அந்தச் செல்லாத காசுகளை எப்படிச் செல்ல வைப்பது என்ற எண்ணத்தில் மூழ்கினான். அதைப் பற்றிக் கனவும் காணத் தொடங்கினான்.......ஆண்டுகள் பல கடந்தன!
அந்தக் கல்லூரியில் நாணயவியல் துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவுக்கு, கவர்னர் விருது வாங்கிய "நாணயவியல் நிபுணர்' மாணிக்கம் பாராட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடைக்கு ஏறி வந்தார். வந்ததும் அவரை வரவேற்று, கைகளை குலுக்கி, அவருக்குச் சிறப்பு செய்தார் கல்லூரி முதல்வர். அவரைப் பார்த்ததுமே அந்த நாணயவியல் நிபுணர் அவரை வணங்கி, ""அண்ணா என்னைத் தெரிகிறதா?'' என்றார்.
÷""ஓ.... கவர்னர் விருது வாங்கியபோதே நீ யார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதனால்தான் உன்னை, நாணயவியல் துறை சார்பாக நடக்கும் இந்த விழாவில் சிறப்பு செய்வதற்காக அழைத்தேன், நல்லா இருக்கியா ரூபி'' என்றார், ரூபியால் பாசத்தோடு "அண்ணா' என்று அழைக்கப்பட்ட வாசுவான அந்தக் கல்லூரி முதல்வர். இருவரும் ஒருவரை ஒருவர் அன்போடு தழுவிக்கொண்டனர். சிலமணி துளிகள் இருவரும் கடந்த காலத்தைப் பற்றிப் பேசினர். பின்னர் நிகழ்ச்சி ஆரம்பமானது.
÷கல்லூரி முதல்வர் முதலில் பேசத் தொடங்கினார். ""இந்தத் விழாவுக்கு மிகவும் பொருத்தமானவர் இங்கு வருகை தந்திருக்கும் ஆய்வு நிபுணர் மாணிக்கம்தான். காரணம், இவர் எனக்கு முன்பே அறிமுகமானவர். ஆம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் இருவரும் சகோதரப் பாசத்துடன் பழகியவர்கள். காலங்கள் கடந்து போய்விட்டாலும், அன்று அவர் கூறிய நம்பிக்கை வார்த்தைகள்தான் இன்று உங்கள் முன் அவரைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. உங்கள் ஆய்வுக்குப் பயனுள்ளதாகப் பல அரிய தகவல்களை உங்களுடன் அவர் பகிர்ந்து கொள்வார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறி அமர்ந்தார்.
÷மாணிக்கம் எழுந்து பேசத் தொடங்கினார். ""மாணவர்களுக்குப் பணிவான வணக்கம். இன்றைக்குக் காசு பார்க்கும் துறை பல இருந்தாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு காசை வைத்து ஆராயும் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கும் உங்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் இந்திய வரலாறு, மன்னர்கள் ஆட்சி, பண்பாடு, கலாசாரம், நம் முன்னோர் வந்த வழி இவை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள இத்துறைதான் பெரிதும் உதவுகிறது. நாளைய தலைமுறையினருக்கு நாம் பல அரிய தகவல்களை, பொக்கிஷங்களைப் பழங்கால நாணயங்களைக் கொண்டு ஆய்வுசெய்து தெரியப்படுத்துகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த காலகட்டங்களில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள்தான் அந்த நாட்டின் பெருமையைக் காலம் கடந்தும் பேசுகின்றன. அவற்றை நாம் காப்பாற்றியாக வேண்டும்.
÷என் தாத்தா, பாட்டி என்னிடம் கொடுத்த இத்தகைய நாணயங்கள்தான் என்னை இன்றைக்கு ஒரு நாணயவியல் நிபுணராக மாற்றியிருக்கிறது. அதை நான் பத்திரப்படுத்தி வைத்திருந்ததால்தான் அவை என் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவின. ஆனால், இதற்காக நான் என் தோழர்களால் "செல்லாக்காசு... செல்லாக்காசு...' என்றெல்லாம் கேலி செய்யப்பட்டிருக்கிறேன்.''
÷அரங்கத்தில் கைத்தட்டல்கள் எழுந்தன. மீண்டும் மாணிக்கம் பேசத் தொடங்கினார்.
÷""என்னுள்ளே வெற்றிக்கான விதையை முதலில் விதைத்தவர் என் உடன்பிறவா அண்ணன் வாசுதான். "முடியாது' என்பதைக்கூட முடித்துக் காட்டுவதில்தான் வெற்றியே இருக்கிறது. என் நண்பர்கள் தந்த அந்தச் "செல்லாக்காசு' என்ற பட்ட பெயராலேயே நான் இன்று வளர்ந்திருக்கிறேன், வெற்றி கண்டிருக்கிறேன். அப்படிக் கூறிய அந்த நண்பர்களுக்குதான் நான் முதலில் நன்றி கூறவேண்டும். நம் வெற்றிக்குக் காரணம் யார் தெரியுமா? நம்மை எதிர்ப்பவர்களும், நம்மைப் பார்த்துக் கேலி பேசுபவர்களும்தான்.
÷அன்று என்னை எனக்கு அடையாளம் காட்டி, என்னுள் இருந்த கனவுக்கு உரமிட்டு வழிகாட்டியாக இருக்க ஒரு வாசு அண்ணா இருந்தார். உங்கள் ஒவ்வொருவருக்கும் அதே போல ஒரு வழிகாட்டி அமைய இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்'' என்று கூறி அமர்ந்தார் மாணிக்கம்.
÷மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கரகோஷம் அடங்க நீண்ட நேரமானது.
÷நிகழ்ச்சி முடிந்து தன் அறைக்கு அழைத்து வந்த ரூபியிடம் கேட்டார் முதல்வர் வாசு, ""ஆமாம், நீ எப்படி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாய்?''
÷""அண்ணா, உங்களிடம் அன்று கூறியது போல அந்தச் செல்லாக்காசுகளை எப்படியாவது செல்ல வைக்க வேண்டும் என்ற எழுச்சி, வைராக்கியம், கனவு எனக்குள் எழுந்தது. தொடர்ந்து இதுபோன்று பழைய காசு வைத்திருப்பவர்களிடமும், பழைய பேப்பர் கடை, பழைய பொருள்கள் விற்கும் கடை என்றெல்லாம் தேடித் தேடிப் பழங்காசுகளைச் சேகரித்தேன். மேல்நிலை வகுப்பு வந்தவுடன் இது தொடர்பான படிப்பு இருப்பதாக ஆசிரியர் சிலர் கூறினர். அதனால், அத்துறையையே விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தேன். அப்போதுதான் என் தாத்தா, பாட்டி என்னிடம் கொடுத்துச் சென்ற நம் இந்திய நாணயங்கள் செல்லாத காசுகள் அல்ல, அவை நம் வரலாற்றைக் கூறும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த செல்லாக் காசுகளை வைத்து, நாணயவியல் தொடர்பான 25 க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். அதற்காகத்தான் எனக்கு கவர்னர் விருது வழங்கப்பட்டது.
÷""ஆமாம், நீ ஏன் உன் பெயரை மாணிக்கம் என்று மாற்றிக் கொண்டாய்?''
÷""ஆங்கிலக்கில் "ரூபி' என்றால், தமிழில் "மாணிக்கம்' என்று என் தமிழாசிரியர் எனக்குக் கூறி, இனிமேல் தமிழிலேயே உன் பெயர் இருக்கட்டும் என்றும், நவரத்தினங்களிலேயே விலைமதிக்க முடியாதது மாணிக்கம்தான். அதுபோல, விலைமதிக்க முடியாத இந்திய நாணயங்களைப் பாதுகாத்து நீ வைத்திருப்பதால் இனிமேல் "மாணிக்கம்' என்றே உன் பெயரை வைத்துக்கொள் என்று கூறி அப்படியே என்னை அழைத்தார். அவருக்காக என் பெயரையே நான் மாற்றிக் கொண்டேன். சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள்தான் அண்ணா'' என்றார் மாணிக்கம்.
÷""இல்லை மாணிக்கம், "நான் நிச்சயம் ஒரு நாள் சாதிப்பேன்' என்ற உன்னுடைய நம்பிக்கையும், தளராத உழைப்பும்தான் காரணம், நான் உன் அண்ணன் மட்டுமே!'' என்று கூறி சிரித்தார் வாசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...