மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

உண்மை தந்த பரிசு!

வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார் பரமசிவம். தலை பஞ்சுபோல வெளுத்திருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு அவளைப் பார்த்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:50 am

இடைமருதூர் கி.மஞ்சுளா

சார் என்னை ஞாபகமிருக்கா?''
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார் பரமசிவம். தலை பஞ்சுபோல வெளுத்திருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு அவளைப் பார்த்தார்.
 ""யாரும்மா நீ? என்னை உனக்குத் தெரியுமா?'' என்றார்.
 ""என்ன சார் இப்படிக் கேக்கறீங்க? நான் உங்ககிட்ட படித்த மாணவி துர்கா. என்னை அடையாளம் தெரியலையா?''என்றாள்.
 ""ஓ... நீயா? உன்னை மறக்க முடியுமா? எப்படிம்மா இருக்கே? திருமணமாயிடுச்சா? என்ன பண்ணிக்கிட்டிருக்கே?'' கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.
 ""சொல்றேன் சார்.... எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்றேன்'' என்று கூறத்தொடங்கினாள். ஆனால், அவருக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிதான் கண்முன் தெரிந்தது.
 ÷
 "இன்று அரையாண்டு விடைத்தாள் தரப்போகிறார்கள்' என்கிற செய்தி தீப்போல அனைத்து வகுப்பறைகளிலும் பரவியதுதான் தாமதம், வகுப்புக்கு வகுப்பு சலசலப்பு கேட்கத் தொடங்கிவிட்டது.
 பத்தாம் வகுப்பு "ஏ' பிரிவு அறைக்குள் நுழைந்த தமிழாசிரியர் பரமசிவம், கையில் இடுக்கிக்கொண்டு வந்த விடைத்தாள் கட்டை மேஜையின் மீது வைத்துவிட்டு வருகைப்பதிவை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். மாணவர்களின் கவனம் முழுவதும் அந்த விடைத்தாள் கட்டில்தான் பதிந்திருந்தது. எப்போது அந்தக் கட்டைப் பிரிப்பாரோ? முதல் பெயர் யாருடையதோ? கிளாஸ் ஃபர்ஸ்ட் யார் வந்திருப்பா?' எனப் பல கேள்விகளைச் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தனர்.
 வருகைப் பதிவை எடுத்து முடித்ததும், தமிழ்ப் புத்தகத்தை எடுத்துத் திறக்கப்போனார் பரமசிவம். அப்போது, ""சார் எப்ப சார் பேப்பர் தருவீங்க?'' என்ற குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்.
 ""ஓ... ரொம்ப ஆர்வமாக இருக்கீங்களே! அவ்வளவு நல்லா தேர்வு எழுதியிருக்கீங்க போலிருக்கு'' என்றவர் குரல் வந்த திசையை நோக்கினார். அவ்வாறு கூறியது பாலுதான் என்பது அவருக்குத் தெரியும். வகுப்பிலேயே அவன்தான் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவான்.
 ""முதலில் பாடத்தை கவனிங்க. வகுப்பு முடிஞ்சதும் பேப்பர் தர்றேன்'' என்றவர், பாடம் நடத்தத் தொடங்கினார். ஆனால், மாணவர்கள் மனம் பாடத்தில் பதியவில்லை. மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்ட பரமசிவம், நடத்திக்கொண்டிருந்த பாடத்தை அப்படியே நிறுத்தினார்.
 ""உங்க கவனமெல்லாம் இந்த மேஜையின் மீது இருக்கிறவரைக்கும் பாடத்தை நீங்க ஒழுங்கா கவனிக்க மாட்டீங்க... முதலில் அதைப் பிரிக்கிறேன்'' என்றபடியே கட்டைப் பிரித்தார்.
 உடனே வகுப்பறையில் சலசலப்பு அதிகமானது.
 ""மாலதி, தேவி, பஷீர், சுமதி, கார்த்திக் என்று அவர் கூப்பிட, அந்தந்த பெயருக்குரியவர்கள் வந்து பேப்பரை வாங்கிச் சென்றனர். அவர்களை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் கொடுத்துக் கொண்டிருந்த பரமசிவம் ""துர்கா'' என்றதும், தலையை நிமிர்த்தி ""சபாஷ்! இந்த முறை தமிழிலும் நீதான் ஃபர்ஸ்ட், வகுப்பிலும் நீதான் ஃபர்ஸ்ட் வந்திருக்கே, வாழ்த்
 துக்கள்'' என்றார்.
 கேட்டுக்கொண்டிருந்த சாந்திக்கு ஆத்திரமாக வந்தது. அவளைத் தவிர வேறு யாரும் கிளாஸ் ஃபர்ஸ்ட் வருவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தமிழில் துர்காதான் ஃபர்ஸ்ட் வருவாள் என்பது அவள் அறிந்ததுதான். எப்படி இந்த முறை இவள் கிளாஸ் ஃபர்ஸ்ட் வந்தாள்? காப்பி கீப்பி அடித்திருப்பாளோ?'' என சாந்தியின் குறுக்குப்புத்தி யோசிக்கத் தொடங்கியது.
 துர்கா, அவளுக்கு நேர் எதிர். பெயர்தான் துர்காவே தவிர, அவளைப்போல பரம சாதுவானவள் வகுப்பில் யாரும் கிடையாது. யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். எதையாவது எழுதிக்கொண்டே இருப்பாள். அவளுடைய எழுத்து முத்துக் கோர்த்ததுபோல முத்து முத்தாக இருக்கும். கட்டுரைத் தேர்வில் எப்போதும் பத்துக்கு பத்துதான் வாங்குவாள்.
 பேப்பரை வாங்க வந்த துர்காவின் கையைப் பற்றி ""வெரி குட் துர்கா, நல்லா எழுதியிருக்கே! இப்படித்தான் எழுதணும். மாணவர்களே! "உங்களுக்குப் பிடித்த வகுப்பாசிரியர் ஒருவரைப் பற்றி கட்டுரை வரைக' என்ற பகுதியில்தான் துர்கா முப்பதுக்கு முப்பது மார்க் வாங்கியிருக்கா. தவறில்லாமல், அடித்தல் திருத்தல் இல்லாம எழுதியிருக்கா. இனிமே நீங்களும் அவளைப் போலவே எழுதக் கத்துக்கணும்''
 ""அப்படி என்ன சார் அவ பெருசா எழுதியிருக்கா?'' என்று கேட்டாள் சாந்தி.
 ""உண்மையை எழுதியிருக்கா... உங்களைப் போல கதை விடாம உண்மையை மட்டுமே சொல்லியிருக்கா. அதுக்காகவே அவளுக்கு நிறைய மார்க் போடலாம்'' என்றார்.
 சாந்தி கப்சிப் ஆனாள்.
 ""தவறில்லாமல் எப்படி எழுதணும்கறதைப் படிச்சுக் காட்டறேன். எல்லோரும் கேளுங்க'' என்று படிக்கத் தொடங்கினார்...
 
 "காவிரி ஆற்றங்கரை ஓரமாக இருந்தது அந்தப் பள்ளிக்கூடம். ஆற்றுக்கும் பள்ளிக்கும் நடுவே ஒரு படுகை (ஆற்றங்கரை). அவ்வளவுதான் இடைவெளி. அந்த அளவுக்கு ஆற்றோரமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அதுபோல் வகுப்பு ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் தமிழாசிரியர் தமிழ்ச்செல்விதான். எனக்கு முதல் வகுப்பே தமிழ் வகுப்புதான். ஆறாவதிலிருந்து ஒன்பதாவது வகுப்பு வரை அவர்தான் எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தார். பொறுமையாகவும் புரியும்படியும் சொல்லித் தருவார். புரியாத மாணவர்களுக்கு வகுப்பு முடிந்ததும் தனியாகக் கூப்பிட்டுச் சொல்லித் தருவார். மாணவருக்குப் பிறந்தநாள் என்றால், அவர்களுக்கு நீதிநெறி நூல்களைப் பரிசாகத் தருவார். யாரையும் அடிக்கவோ, திட்டவோ மாட்டார். தவறு செய்த மாணவனைக் கூப்பிட்டு ஏதாவது ஒரு பாடத்தை எழுதச் சொல்வார். அதுதான் அவர் அவனுக்குக் கொடுக்கும் தண்டனை. ஆனால், அது தண்டனை இல்லை என்பதை நான் எட்டாம் வகுப்பு வந்த பிறகுதான் புரிந்துகொண்டேன்.
 "அப்படி நாம் எழுதும்போது அந்தப் பாடம் அப்படியே நம் மனதில் பதிந்துவிடும். அதனால்தான் எழுதச்சொல்கிறேன்' என்று ஒரு முறை கூறினார். அடிக்கடி எழுதிப் படிக்கச் சொல்வார். வாய்விட்டுப் படிப்பதைவிட எழுதிப் படித்தால் மனசில் உடனே பதியும் என்று சொல்வார்.
 கட்டுரை நோட்டில் அடித்தல், திருத்தல் இல்லாமல், தவறு வராமல் எழுதக் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்! இலக்கணத்தையும், இலக்கியத்தையும், தவறில்லாமல் படிக்கவும் எழுதவும் சொல்லி எனக்குத் தமிழ் மேல் இருந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தவர். அவர் சிறிது நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, கூண்டு வண்டியில்தான் பள்ளிக்கு வருவார். அப்படி அவர் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும்போது, அவர் போகும் பாதையில் யாராவது மாணவர்கள் வீடு இருந்தால், அவர்களையும் ஏற்றிக்கொண்டு, அவர்கள் வீடு வரை கொண்டு விடுவார்.
 இப்படி நான் பலமுறை அவரோடு வண்டியில் போயிருக்கிறேன். மகிழ்ச்சியாகவும் இருக்கும், பயமாகவும் இருக்கும். அப்படிப் போகும்போதெல்லாம். தமிழ் தொடர்பா நிறைய சொல்லித் தருவார். தமிழை இப்படித்தான் உச்சரிக்கணும், இப்படித்தான் எழுதணும், பாடப் புத்தகங்களைத் தவிர நல்ல அறிஞர்களின் நூல்களையும் தினமும் படிக்க வேண்டும். பெண் குழந்தைகள் நிறைய ஓடியாடி விளையாட வேண்டும். அதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும். உடம்பு தெரியாதபடி ஒழுங்காக உடை உடுத்த வேண்டும். ஆண் நண்பர்களோடு அதிகம் பேசிப் பழகக்கூடாது - என்றெல்லாம் வீடு வரும்வரை சொல்லிக்கொண்டே வருவார். சில சமயம் ஆசிரியராகவும், சில சமயம் நல்ல நண்பராகவும் பேசுவார். அவரால்தான் இன்றைக்கு என்னால் தமிழில் பிழையில்லாமல் படிக்கவும் எழுதவும் அதிக மார்க் வாங்கவும் முடிகிறது. அவர் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் அவர் எனக்குச் சொல்லித் தந்த பாடங்கள் பசுமரத்து ஆணிபோல மனதில் பதிந்துவிட்டன. என் வாழ்வில் மறக்கவே முடியாதவர் எங்கள் தமிழ்ச்செல்வி டீச்சர்தான்'.
 
 பரமசிவம் படித்து முடித்ததும் வகுப்பறை நிசப்தமாக இருந்தது. சிலர் கண்களில் நீர்மல்க அமைதியாக இருந்தனர். சாந்தியின் கண்கள் கூட கலங்கியிருந்தன. துர்காவும் கண் கலங்கியபடி நின்றிருந்தாள். அவளை சமாதானப்படுத்தி, இருக்கையில் உட்கார வைத்தார் பரமசிவம். ஆனால், அவர் மனமும் உள்ளூற அழுதது. எவ்வளவு அழகாக, தவறில்லாமல், அழகான தமிழில் எழுதியிருக்கிறாள். இந்த வயதிலேயே இவள் மனதுக்குள் நல்விதைகளை விதைத்த அந்த ஆசிரியருக்கு மனதுக்குள் நன்றி கூறினார்.
 அந்த ஆசிரியர் இறந்தபோது துர்கா கதறி அழுதது அவர் கண்முன் நின்றது. தமிழ்ச்செல்வி டீச்சரைப் பற்றி அவருக்கும் நிறையத் தெரியும். அவர் வகுப்பு என்றால், மாணவர்கள் அமைதியாக இருப்பதையும், அவர் பள்ளிக்கு வராத நாள்களில்கூட அவர் வகுப்பு மாணவர்கள் சப்தம் போட்டு, கலாட்டா செய்யாமல் அமைதியாக எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பதையும் அவர் பலமுறை கவனித்திருக்கிறார்.
 "நல்லாசிரியை' விருதுக்குத் தகுதியான அவர், அந்த விருதைப் பெறாமலேயே இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டால்தான் என்ன? மாணவர் மனதில் "நல்லாசிரியராக' என்றென்றும் நிலைத்துவிட்டாரே...! அது ஒன்று போதுமே!÷தமிழ்ச்செல்வி டீச்சர் எத்தனையோ மாணவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தியவர். அந்த வரிசையில் துர்காவும் ஒரு நாள் மிக உயர்ந்த நிலைக்கு வருவாள்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் பரமசிவம்.
 
 ""சார்..., என்ன சார், அந்தக் காலத்துக்கே போய்ட்டீங்களா?'' என்று துர்கா அவரை பழைய நினைவிலிருந்து வெளிக்கொண்டு வந்தாள்.
 ""ஆமாம்மா, உன்னையும் உன்னோட தமிழ்ச்செல்வி டீச்சரையும் மறக்கமுடியுமா? உன்னோட அந்தக் கட்டுரையைப் படிச்சதுக்குப் பிறகுதான் நானும் ஒரு நல்லாசிரியனாக நடந்துக்கணும்னு முடிவு செஞ்சேன். "நல்ல ஆசிரியர்' என்று மாணவர்கள் சொல்கின்ற அந்தச் சொல்தானே ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கிற வெற்றி! தமிழ்ச்செல்வி டீச்சர் மாதிரி, உன்னை மாணவியா அடைஞ்சது நான் பெற்ற மிகப் பெரிய பரிசுதான்'' என்றார்.
 ""எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா சார்? "தமிழ் படிச்சு நீ என்ன செய்யப் போற? தமிழ் படிச்சா வேலை கிடைக்காது' என்றெல்லாம் என்னைப் பார்த்து சொன்னவங்களும், கேலி பேசினவங்களும் வாயைப் பொத்திக்கிற மாதிரி, தமிழ்ச்செல்வி டீச்சரோட ஆசீர்வாதத்தால், தமிழையே முதன்மைப் பாடமா எடுத்துப் படிச்சு தமிழில் பிஎச்.டி வரை முடிச்சுட்டேன் சார். தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதல் இடத்தில் வந்திருக்கேன். இப்போது ஒரு கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கேன். இது தமிழ்ச்செல்வி டீச்சர் எனக்குத் தந்த மிகப்பெரிய பரிசு சார்'' என்றாள் துர்கா.
 ""இது உண்மைக்குக் கிடைச்ச பரிசும்மா...'' என்றார் பரமசிவம்.
 துர்காவை பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம், "தமிழ்ச்செல்விக்கும் துர்காவுக்கும் இடையே இருந்த ஆசிரியர் - மாணவர் உறவுபோல எல்லோருக்கும் வாய்த்துவிட்டால், இவ்வுலகில் நல்ல ஆசிரியர்களும் நல்ல மாணவர்களும்தான் இருப்பார்கள்' என்று நினைத்துக் கொண்டார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.