பாட்டி சொன்ன பா(டம்)ட்டு!
""அம்மா... பாட்டி நம்ம வீட்டிலேயே வந்து இருக்கப் போறாங்களாமே! அப்பா சொன்னார், நிஜமாம்மா?'' ஆவலுடன் கேட்டான் மனோகர்


""அம்மா... பாட்டி நம்ம வீட்டிலேயே வந்து இருக்கப் போறாங்களாமே! அப்பா சொன்னார், நிஜமாம்மா?''
ஆவலுடன் கேட்டான் மனோகர். எட்டாம் வகுப்பு படிக்கும் மனோகர் கதை சொல்ல பாட்டி இல்லாமல் நீண்ட நாள்களாக ஏங்கியவன்.
÷""ஆமா மனோகர், உங்க தாத்தா இறந்து ஒரு மாதம் ஆயிடுச்சுல்ல. அவர் போனபிறகு அவங்க மட்டும் கிராமத்துல எப்படித் தனியா இருக்க முடியும்? நம்மை விட்டா அவங்களுக்கு யார் இருக்கா? அதுதான் அப்பா கூப்பிடப் போயிருக்கார்''.
""அம்மா.., பாட்டி நிறைய கதை சொல்வாங்களா?''
÷""ம்.ம்..ம்.. நிறைய சொல்வாங்க. நீ அவங்களோட மரியாதையா நடந்துக்கிறதப் பொருத்துதான் இருக்கு. பெரியவங்ககிட்ட மரியாதையா, அன்பா பேசிப் பழகணும். அவங்க மனசு நோகாம பத்திரமா பாத்துக்கணும்'' என்றாள் பூமா.
÷""சரிம்மா'' என்றவன், "இனிமே ஜாலிதான்' என்று சொல்லிக்கொண்டே துள்ளிக்குதித்தபடி படுக்கைக்கு ஓடினான். ஆனால், அன்றிரவு முழுவதும் தூங்காமல், பாட்டி வந்ததும் என்னென்ன கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
÷
பாட்டி வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக ""ஹாய் பாட்டி, லீவுக்கு வந்தா எனக்குக் கதையெல்லாம் சொல்வீங்களே... இப்பவே எனக்கு சூப்பரான கதை ஒண்ணு சொல்லுங்களேன்...'' என்றான்.
÷""மனோகர், பாட்டி இப்பதானே ஊர்லேர்ந்து வந்திருக்காங்க, அவங்களை தொல்லை பண்ணக்கூடாது, குளிச்சு, சாப்பிட்டு ஓய்வெடுக்கட்டும். அப்புறமா கதை கேட்டுக்கலாம். நீயும் பள்ளிக்கூடம் போய்ட்டு வந்துடு'' என்றாள் பூமா.
÷""சொல்றேன்டா கண்ணா, உனக்கில்லாத கதையா? பள்ளிக்கூடம் போயிட்டு வந்ததும் சொல்றேன்'' என்றாள் பாட்டி.
÷""ஓகே பாட்டி "சீ யூ ஈவினிங், வந்ததும் கண்டிப்பா சொல்லணும், ஏமாத்தக்கூடாது'' என்று கட்டளையிட்டுவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டான்.
÷மாலை வீட்டுக்குள் நுழைந்தவன், அக்கம் பக்கம் உள்ள தன் நண்பர்கள் மூன்று பேரையும் கதைகேட்க அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு பாட்டியிடம் கதைகேட்க நால்வரும் ஆவலாகக் காத்திருந்தனர்.
"ஓரு ஊருல ஒரு ராஜா இருந்தார். அவர் பொய்யே சொல்ல மாட்டார். அவரைப் பொய் சொல்லச் சொல்லி அவருக்கு எத்தனையோ கஷ்டங்களைத் தந்தும், அவர் பொய் சொல்லமாட்டேன்னு கடைசிவரை பிடிவாதமா உண்மையே பேசி வாழ்ந்தார்'' என்று ஆரம்பித்த பாட்டி, அரிச்சந்திரன் கதையை சிறுவர்களுக்கு ஏற்றவாறு எளிமையாகக் கூறிமுடித்தார். நால்வரும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், ""ச்சோ... ச்சோ... பாவம் பாட்டி அந்த அரிச்சந்திரன். எவ்வளவெல்லாம் அவரைக் கஷ்டப்படுத்தியிருக்காங்க'' என்று வருத்தப்பட்டான். ஆனால், மனோகருக்குக் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது.
÷""அழாதேடா கண்ணா, இப்படித்தான் நானும் என்னோட அக்காவும் சின்னவளா இருந்தபோது அரிச்சந்திரன் சினிமா பார்க்கப் போயிருந்தோம். அந்தப் படத்தைப் பார்த்த எல்லோருமே அழுதுட்டாங்க. என்னோட அக்காவும் அழுதுகிட்டே அந்தப் படத்தைப் பார்த்ததை என்னால மறக்கவே முடியாது. "வாழ்ந்தால் அரிச்சந்திரனைப் போலத்தான் வாழனும்ணு' பலரும் பேசிக்கிட்டாங்க'' என்று மனோகருக்கு ஆறுதல் கூறினாள் பாட்டி.
÷மனோகர் உடனே, ""பாட்டி பாபுன்னு ஒருத்தன் எங்க கிளாசுல படிக்கிறான். அவனுக்கும் இந்தக் கதையைச் சொல்லணும். அவன் ரொம்ப பொய் சொல்வான். கிளாசுல இருக்கிறவங்களோட புத்தகம், பை, வாட்டர் கேன் எல்லாத்தையும் எடுத்து மறைச்சு வச்சுட்டு, எனக்குத் தெரியவே தெரியாதுன்னு பொய் சொல்வான். அவன்தான் எடுத்திருக்கான்னு கண்டுபிடிச்சு நாங்க சார்கிட்ட சொன்னாலும் ஒத்துக்கவே மாட்டான். கிளாசுலயே தான்தான் பெரியவன் என்று நினைப்பான். அவன் வாயிலேந்து உண்மையே வராது பாட்டி. அப்புறம்... அவனோட ஹோம் ஒர்க்கை எழுதித்தரச் சொல்லி எல்லாரையும் மிரட்டுவான். மாட்டேன்னு யாராவது சொன்னா, அவங்களோட ஸ்கூல் பைய எடுத்து ஒளிச்சு வச்சு வேடிக்கை பார்ப்பான். அவனால எங்களுக்கெல்லாம் ரொம்ப தொல்லையா இருக்கு பாட்டி, ரொம்ப ரெüடித்தனம் பண்றான்''.
÷""கவலைப்படாதீங்க. அவன் கூடிய சீக்கிரத்தில் திருந்திடுவான். அவனை என்னிடம் அழைச்சுகிட்டு வாங்க. நான் சரி பண்ணிடுறேன்'' என்றாள் பாட்டி.
÷""எப்படிப் பாட்டி? உன்னால முடியுமா?''
÷""முடியும்பா. நான் சொல்றபடி செய்'' என்று பாட்டி மனோகர் காதில் ஏதோ சொன்னாள்.
மறுநாள் பள்ளி விடும் நேரத்துக்கு சற்று முன்பு மனோகர், பாபுவைத் தனியாக அழைத்து, ""நீ கிளாசுல பண்ற சேட்டை தாங்க முடியாம பசங்கள் எல்லோரும் ஹெட் மாஸ்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. அவர் உன்னை ஸ்கூல விட்டே டிஸ்மிஸ் பண்ணிட்டாராம். ஹெட் மாஸ்டர் நம்ம சாரோட பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன். என்னைப் பார்த்ததும், ""அவனை உடனே இங்கே வரச்சொல்லுன்னு சொன்னார்'' என்றான்.
÷இதைக் கேட்டதும் பாபுவின் உடல் நடுங்கியது. முகமெல்லாம் வியர்த்தது. உடனே ஹெட் மாஸ்ட்டர் அறையை நோக்கி ஓடவும் ஸ்கூல் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. இதுதான் தகுந்த சமயம் என்று பாபுவின் பையை எடுத்துக்கொண்டு வாட்ச்மேனிடம் ஏதோ சொல்லிவிட்டுப் புறப்பட்டான் மனோகர்.
÷ஹெட் மாஸ்டர் அறைக்கு வாசலில் நின்றிருந்த பாபுவைப் பார்த்து, ""இங்க எதுக்கு நிக்கிறே? மணி அடிச்சாச்சுல்ல, வீட்டுக்குக் கிளம்பு'' என்றார் அட்டெண்டர்.
÷""ஹெட் மாஸ்ட்டர் சார் என்னை வரச்சொன்னாராம்''
÷""ஹெட் மாஸ்டரா? அவர் இன்னிக்கு ஸ்கூலுக்கே வரலையே...'' என்று அவனைப் பார்த்துக் கூறிவிட்டு அட்டெண்டர் அறையை பூட்டிக்கொண்டு புறப்பட்டார்.
÷பாபுவுக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆத்திரம் தலைக்கேறியது. இந்த மனோகர் பய என்னிடமே வேலையைக் காண்பிக்கிறானா? அவனை என்ன செய்றேன் பார்' என்று நினைத்துக்கொண்டே வகுப்புக்கு வந்தவன், அங்கு தன் பையைக் காணாமல் வாட்ச் மேனிடம் வந்து சொல்லி அழுதான்.
÷அவர், மனோகர் எடுத்துச் சென்றதாகக் கூறினார். மனோகர் வீட்டை நோக்கி கோபத்துடன் ஒரு சிறுத்தையின் உறுமலோடும் ஆவோசத்தோடும் கிளம்பினான் பாபு.
÷மனோகர் வீட்டுக் கதவை படபட வென்று தட்டிக்கொண்டே இருந்தான். கதவு திறக்கப்பட்டது; அங்கே மனோகரின் பாட்டி நின்றிருந்தாள்.
""யாருப்பா நீ, உனக்கு என்ன வேணும்?''
""ஏ.. கிழவி, அந்த மனோகர் பயல வரச்சொல்லு, என்னோட பைய எடுத்துக்கிட்டு வந்துட்டான், பாபு வந்திருக்கேன்னு சொல்லு'' மரியாதை இல்லாமல் கத்தினான் பாபு.
""ஓ... நீதான் அந்த பாபு தம்பியா? வா, வா.. உன்னைப்பற்றி மனோகர் நிறைய சொல்லியிருக்கான். நீ ரொம்ப நல்ல பையனாமே, எல்லார்கிட்டேயும் ரொம்ம மரியாதையா நடந்துக்குவியாம், பொய்யே சொல்ல மாட்டியாம் - இப்படி உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கான். வா, உள்ளே வந்து உட்கார், காப்பி கொண்டுவரேன் சாப்பிடு, பாபு வந்துடுவான்'' என்று பாட்டி கூறியதும், பாபுவுக்கு அழுகை அழுகையாக வந்தது. சீறிப் பொங்கிப் பாய்ந்து வந்த கோபமெல்லாம் பொங்கிவரும் பாலில் தண்ணீர் ஊற்றியதுபோல பாட்டி சொன்ன சொற்களால் "பொசுக்'கென அடங்கிப்போனது. "சீ... இந்தப் பாட்டியிடம் மரியாதை இல்லாம இப்படி நடந்துகிட்டோமே, அவங்க எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க, இப்படி அன்போட, பாசத்தோட பேசற பாட்டியையும், நம்மைப்பற்றி நல்லவிதமாகச் சொல்லியிருக்கிற மனோகரையும் தப்பா நினைச்சுட்டேனே...' என்று வெட்கித் தலைகுனிந்தபடி உள்ளே சென்று அமர்ந்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மனோகர் வந்தான். ""வாடா பாபு, உங்கிட்ட பொய் சொல்லிட்டேன்டா, என்னை மன்னிச்சுடுடா, நான்தான் உன் பையை எடுத்து வந்தேன், எல்லாம் எங்க பாட்டி சொல்லிக் கொடுத்ததுதான். உன்னை என் வீட்டுக்கு வரவழைக்கறத்துக்குப் பாட்டி கொடுத்த ஐடியாதான் இது''.
ஒன்றும் புரியாமல் விழித்தான் பாபு. பாட்டி அவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். சொல்லி வைத்தது போல அதற்குள் மனோகரின் அக்கம் பக்கத்து நண்பர்களும் வந்துவிட்டனர்.
""இதோ, பார் பாபு, மனோகர் ஒரு பொய் சொன்னதுக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருதே, அப்படிப் பார்த்தால், நீ தினம் தினம் சொல்ற பொய்யினால இவங்களெல்லாம் உம்மேல எவ்ளோ கோபப்படணும்! கோபப்படறதும் கோபப்படுத்தறதும் ரொம்பத் தவறானது. அதுனால கெட்டதுதான் நடக்கும்; நல்லது நடக்காது. உண்மைக்கு மதிப்பு அதிகம் உண்டுன்னு இனியாவது புரிஞ்சுக்கோ. என்னிக்குமே நம்ம கைய நம்பித்தான் நாம் வாழணும், அடுத்தவங்க முதுகுல ஏற நினைக்கக்கூடாது. உன் ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும். வேறு ஒருத்தர் உன் ஹோம் ஒர்க்கை செய்தா, நீ எப்படி பாஸ் பண்ணமுடியும்? அப்படி அடுத்தவங்களை கஷ்டப்படுத்த நினைச்சா துன்பம்தான் படணும். இதை ஓர் அருமையான பாட்டுல ஒரு கவிஞர் சொல்லியிருக்கார். நான் பள்ளியில படிக்கிறபோது எங்க பள்ளிக்கூடப் பாட புத்தகத்துல இருந்த பாட்டு இது. யார் எழுதினாங்கன்னு மறந்துபோச்சு. ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. இன்னும் மறக்காம நினைவுல வச்சிருக்கேன். உங்களுக்கும் சொல்றேன் கேளுங்க. அதை மனப்பாடம் செஞ்சு நினைவில் வைச்சுக்கோங்க. என்னிக்காவது உங்க வாழ்க்கைக்கு அது பயன்படும்'' என்ற பாட்டி, "அரிச்சந்திரன்' கதையை மிகமிகச் சுருக்கமாக பாபுவுக்குச் சொன்னாள்.
""மன்னிச்சுடுங்க பாட்டி, இனிமே இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டேன், பொய்யே சொல்லமாட்டேன், இனி யாரையும் ஹோம் வொர்க் பண்ணச்சொல்லி கஷ்டப்படுத்த மாட்டேன்'' என்று அழுதான் பாபு.
""அழாதே கண்ணா, தவறை உணர்ந்துட்டாலே போதும் மன்னிக்கத் தேவையே இல்லை. முதலில் இந்தப் பாட்டைக் கேளுங்க, உங்களுக்கும் பிடிக்கும்.'' என்று சொல்லி, பாட்டை ராகத்தோடு பாடிக்காட்டினாள் பாட்டி.
ஒரு கரிக்குருவி எருமையின் மீதே
உட்கார்ந்து கொண்டது பார்!
ஓ....ஓ... எருமை உன்னைவிட நானே
உயரம் என்றது பார்!
திரும்பும் முன்னே சிறுவன் ஒருவன்
சென்று பிடித்தான் பார்!
சிக்கிய குருவி படபட வென்று
சிறகை அடித்தது பார்!
அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால்
அபாயம் ஒன்றுமில்லை!
அடுத்தவர் முதுகில் ஏற நினைத்தால்
அதனால் வரும் தொல்லை!
எவரெவரெனினும் இதை உணர்வாரே
என்றைக்கும் நட்டமில்லை!
ஏழையின் முதுகில் ஏறி உட்கார
இனிமேல் சட்டம் இல்லை!
""சூப்பர் பாட்டி'' என்றான் மனோகர். மற்ற நண்பர்களும் அதை ஆமோதித்தனர். அந்தப் பாட்டை மீண்டும் சொல்லச் சொல்லி அனைவரும் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டனர்.
""பாட்டி இந்தப் பாட்டை நான் மறக்கவே மாட்டேன். இனி பொய்யும் பேச மாட்டேன். நான் தினமும் வந்து உங்ககிட்ட இதுமாதிரி கதைக் கேட்கலாமா? எனக்குத்தான் பாட்டியே கிடையாதே! அவங்கள நான் பார்த்ததும் கிடையாது. எனக்கும் நீங்களே பாட்டியா இருக்கீங்களா?'' என்று கேட்டான் பாபு.
பாபுவின் தோளில் தட்டிக்கொடுத்து, ""நான் உங்க எல்லோருக்கும் பாட்டிதான். அழாம வீட்டுக்குப் போய்ட்டு வா. நீ எப்ப வேணாலும் இங்கு வரலாம்'' என்றாள்.
""பாட்டி பாட்டிதான்'' என்றான் மனோகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...