குருவும் மூன்று சீடர்களும்
ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுலம் வாசம் முடிந்து மூவரும் பிரிந்து செல்லும் நேரம் வந்தது. குருவிடம் விடைபெற்றுக் கொண்டு மூவரும் தத்தமது வழியில் போனார்கள். இனி அவரவர் வாழ்க்கை அவரவர் கை


ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுலம் வாசம் முடிந்து மூவரும் பிரிந்து செல்லும் நேரம் வந்தது. குருவிடம் விடைபெற்றுக் கொண்டு மூவரும் தத்தமது வழியில் போனார்கள். இனி அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்.
என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை அரவணைத்துக் கொள்வதாக, அவன் கேள்விப்பட்டான். குருவிடம் தான் பெற்ற ஞானத்தால் எப்படியும் அரசனைக் கவர்ந்து விட முடியும் என்று நம்பினான்.
அரசவை சென்று மன்னனைத் துதி பாடி நின்றான்.
கல்வி, கேள்வி, வீரம், அறம் எனத் தனது பண்புநலன்கள் குறித்து விவரித்துப் பாடப்பட்ட அந்தத் துதிப் பாடலைக் கேட்டு அகமகிழ்ந்து போனான் அரசன்.
சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அங்கேயே இருக்குமாறு முதலாவது சீடனைக் கேட்டுக் கொண்டான் அரசன்.
அன்று முதல் தன்னை ஓர் அரசவைக் கவிஞனாக நிலைநிறுத்திக் கொண்டான் அந்த சீடன்.
இரண்டாவது சீடனிடம் நிறைய யோசனைகள் இருந்தன. ஆனால் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்பதில் குழப்பம் இருந்தது.
அவன் தன் மனம்போன போக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்தான்.
ஒருநாள் பிற்பகல் வேளையில் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான். அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கி உண்டு பசியாறினான்.
இதற்கு முன், தனது வாழ்நாளில் அப்படியொரு சுவையான உணவை அவன் உண்டதில்லை. அதன் சுவை நாவில் நின்றது. அந்த அறுசுவை உணவைத் தயாரித்து அளித்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான்.
தனக்குப் பின்னால் அந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லாமல் அவர் வாடுவது புரிந்தது.
சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டான். இவனுடைய பணிவு, அக்கறை, விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றால் பெரிதும் கவரப்பட்ட அந்தப் பெரியவர், சமையல் கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவனும் ஆர்வத்துடன் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.
வெகு விரைவிலேயே பிரபலமானவர்கள், செல்வந்தர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுத்துப் புகழ் பெற்றான். சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான் அந்த இரண்டாவது சீடன்.
முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான் மூன்றாவது சீடன்.
நீண்ட நெடிய குருகுலவாசத்துக்குப் பின்னர் அங்கே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
அப்போதுதான் அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் அற்ப வேலைகளைச் செய்து கொண்டு, வீணாகப் பொழுதைக் கழிப்பதைக் கண்டான். தனக்கு அமைந்தது போல ஒரு குருவின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.
ஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை அளிக்கக் கூடாது என்று எண்ண ஆரம்பித்தான். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கே வழிதேட வேண்டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற கேள்வியும் உடன் எழுந்தது.
அப்போதுதான், அவனுக்கு அவனுடைய குரு அடிக்கடி சொல்லும் உபதேசம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
எந்த ஒரு நல்ல காரியத்தையும் சிந்தித்தவுடன் செயல்படுத்தத் துவங்கிவிட வேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தானே தேடி வரும் என்பதுதான் அந்த உபதேசம்.
உடனடியாக, அந்தச் சீடன், அச் சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். சில சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர். அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக வளர்ந்தான்.
சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, தன்னைச் சிறந்த கல்வியாளனாக நிலைநிறுத்திக் கொண்டான் அந்த மூன்றாவது சீடன்.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள்... காலம் உருண்டோடியது.
ஒருநாள் குருவிடமிருந்து மூன்று சீடர்களையும் காணவிரும்புவதாக அழைப்பு வந்தது.
மூவரும் குருவைக் காண ஒருசேரக் கிளம்பிப் போனார்கள்.
வயோதிகம், குருவின் உடலைத் தளரச் செய்திருந்ததே தவிர, மனத்தை அல்ல; குரு புத்தி தெளிவுடனே இருந்தார். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும் மகிழ்ச்சியுற்றார்.
தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர். தங்கள் சொந்த வேலைகளைப் புறம் தள்ளி வைத்துவிட்டு ஆசிரமத்தில் தங்கி, குருவுக்குப் பணிவிடைகள் செய்தனர்.
அப்போதுதான் அது நடந்தது. குரு, மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார். அவரது பேச்சிலும் செயலிலும் இது நன்றாகவே தெரிந்தது.
இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம்நோகச் செய்தது.
அரசவைக் கவிஞனாக உள்ள தன்னைக் காட்டிலும் அவன் உயர்ந்தவனா என்று முதலாவது சீடன் வருந்தினான்; நாடு போற்றும் நளபாகச் சக்கரவர்த்தியாக உள்ள தன்னைக் காட்டிலும் அவன் உயர்ந்தவனா என்று இரண்டாவது சீடனும் வருத்தப்பட்டான். அதற்காக அவர்கள் இருவருக்கும் குருவின் மீதான பக்தி கொஞ்சமும் குறையவில்லை. தீர்க்கதரிசியான குரு, எதையும் நன்கு ஆய்ந்து தெளிந்த பின்பே முடிவெடுப்பார், என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
ஒருநாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார்த்து, இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார். பின்னர் முதலாமவனைப் பார்த்துச் சொன்னார் }
"நீ அரசவைப் புலவன்! சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான்! நான் மறுக்கவில்லை!'
என்றார் அவர்.
பின்னர், இரண்டாமவனைப் பார்த்துச் சொன்னார் }
"நீ சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு ஒப்பானவன்! அதனால் நீயும் உயர்ந்தவன்தான்! நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி நிறுத்திய குரு, சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார் ,
"அறியாமையில் இருக்கும் ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது, குருடனுக்குப் பார்வை அளிப்பது போல! கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும்! அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்! அதனால்தான் உங்கள் இருவரையும்விட மூன்றாமவனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திருக்கக்கூடாதுதான்! உங்கள் மூவரையும் சமமாகப் பாவித்திருக்க வேண்டும்... என்னை மன்னித்துவிடுங்கள்...' என்றார் குரு.
"அகங்காரம் எங்கள் கண்களை மறைத்துவிட்டது. எங்கள் இருவரைக் காட்டிலும் அவனுடைய சேவை உயர்வானது என்பதை நாங்கள் இப்போது தெளிவாக உணர்ந்து கொண்டோம். தாங்கள்தான் எங்களை மன்னிக்க வேண்டும்' என்றனர் சீடர்கள் இருவரும் ஒருமித்த குரலில்.
மென்மையாகப் புன்னகைத்த குரு அவர்கள் இருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...