நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 14
மாவட்ட ஊராட்சி அமைப்பு செய்யும் பணிகள் யாவை என்று இந்த வாரம் பார்ப்போம். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றால் எடுத்துச் செய்யப்படாத வேலைகளை மாவட்ட ஊராட்சி அமைப்பு செய்கிறது. 1. கிர


மாவட்ட ஊராட்சி அமைப்பு செய்யும் பணிகள் யாவை என்று இந்த வாரம் பார்ப்போம்.
கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றால் எடுத்துச் செய்யப்படாத வேலைகளை மாவட்ட ஊராட்சி அமைப்பு செய்கிறது.
1.
கிராமத்தில் இருக்கும் சாதாரண சாலைகளைப் பேருந்து செல்வதற்கு ஏற்றபடியான சாலைகளாகச் செப்பனிடுதல்.
2.
மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் உயர் நிலைப் பள்ளிகளுக்கான கட்டடம் கட்டுதல்.
3.
மின்சார வாரியம் தொடர்பான பணிகள்.
4.
குடிநீர் திட்டம் தொடர்பான பணிகள்.
5.
வனத்துறை வளர்ச்சிப் பணிகள்
6.
வேளாண்மை மற்றும் கால்நடைத் துறை வளர்ச்சிப் பணிகள்.
7.
அரசாங்க மருத்துவக் கட்டடங்கள் கட்டுதல் ஆகியவை மாவட்ட ஊராட்சி அமைப்பு செய்யும் பணிகளாகும்.
மாவட்ட ஊராட்சி அமைப்பின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக கூட்டங்கள் நடத்தப்படும். மாவட்ட ஊராட்சித் தலைவர், தேவைக்கு ஏற்ப இந்தக் கூட்டங்களை நடத்துவார். தலைவர் வராவிட்டால் துணைத் தலைவரே கூட்டங்களை நடத்துவார். இருவரும் வராவிட்டாலும்கூட, உறுப்பினர்களில் ஒருவரேகூட கூட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தலாம். ஆனால், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கலந்துகொண்டால் மட்டும்தான் அந்தக் கூட்டத்தை நடத்த முடியும்.
கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்களைத் தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்வார்கள்.
இந்தக் கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகம் பேசுவார்கள். அதனால் அனைத்து அரசுத் துறை சார்ந்த அலுவலர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும்.
கூட்டத்தில் பேசப்படும் திட்டங்கள் குறித்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக்கொள்வார்கள். எனவே திட்டங்கள் பற்றிய விவாதம் எளிமையாக இருக்கும்.
1. உற்பத்தித் திட்டங்கள்
வேளாண்மை, கால்நடைத் துறை, தொழில் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் மின்சாரத் துறை ஆகியவை இதில் அடங்கும்.
2. நலத்திட்டங்கள்
சுகாதாரம், ஆதி திராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலம், கல்வி மற்றும் சத்துணவு ஆகியவை இதில் அடங்கும்.
3. வளர்ச்சித் திட்டங்கள்
சாலைகள் அமைத்தல், குடி நீர் வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
மாவட்ட ஊராட்சி அமைப்பிற்குப் பல அதிகாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
நாம் இதற்கு முன்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி அமைப்பு பற்றி பார்த்தோம் அல்லவா. அந்த உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பணியை மாவட்ட ஊராட்சி அமைப்பு செய்யும்.
மாவட்ட ஊராட்சி அமைப்பிற்கு வேறு என்ன அதிகாரம் இருக்கிறது?
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்ந்த நிறுவனங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன அல்லவா. இந்த அமைப்புகள் செய்து வரும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான அதிகாரம் மாவட்ட ஊராட்சி அமைப்பிற்கு உண்டு.
மாவட்ட ஊராட்சி அமைப்பு இத்துடன் நிறைவடைகிறது. அடுத்ததாக நாம் பேரூராட்சி அமைப்பைப் பற்றிப் பார்க்கலாம்.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...