சிறுகதை: வானவில்
மழை பெய்து ஓய்ந்திருந்தது. வீட்டு முன்னால் சிற்றோடை போல் பாதை வகுத்து ஓடிக்கொண்டிருந்த மழைத் தண்ணீரில் சத்யா கப்பல் விட்டுக்கொண்டிருந்தான். அருகில் அவனது அப்பா ராமலிங்கம் வண்ணக் காகிதத்தில் கப்பல் செ


மழை பெய்து ஓய்ந்திருந்தது. வீட்டு முன்னால் சிற்றோடை போல் பாதை வகுத்து ஓடிக்கொண்டிருந்த மழைத் தண்ணீரில் சத்யா கப்பல் விட்டுக்கொண்டிருந்தான். அருகில் அவனது அப்பா ராமலிங்கம் வண்ணக் காகிதத்தில் கப்பல் செய்து தந்துகொண்டிருந்தார். சத்யாவின் அக்கா ஆதித்யா வாசல் திண்ணையில் அமர்ந்தபடி தம்பி கப்பல் விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மிதமான சாரல் ஒருபுறம்; இதமான வெயில் மறுபுறம். இவற்றோடு மழை ஏற்படுத்திய குளிர்ச்சி, மண்வாசனை இவைகளும் சேர்ந்துகொண்டு அந்தச் சூழ்நிலையே மிகவும் ரம்யமாய் இருந்தது.
அப்பா கொடுத்த கப்பல் ஒன்றை நீரில் விட்டுவிட்டு சத்யா நிமிர்ந்தபோது கீழ்த்திசை வானில் ஒரு காட்சி. வண்ணங்களை வாரி இறைத்தது போன்ற ஓர் அழகான வளைவு. சத்யா மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவன் இதுவரை இப்படி ஓர் அற்புதக் காட்சியை வானில் கண்டதில்லை. அப்பாவையும் அக்காவையும் அழைத்துக் காண்பித்தான்.
""அட... வானவில்!'' என்றார் அப்பா.
சத்யாவின் பாட நூலில் வானவில் குறித்த குழந்தை பாடல் ஒன்று வருகிறது. அதில் வானவில் படமும் உண்டு. அதை வைத்து அவன் தன் மனதில் வானவில்லை ஒரு கற்பனை செய்து வைத்திருந்தான். அதனை இதோடு தொடர்புபடுத்திப் பார்த்தான். நிஜத்தில் வானவில்லின் பிரம்மாண்டம் அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இமை கொட்டாமல் அதைப் பார்த்தபடி இருந்தவன் அப்பாவிடம் கேட்டான்.
""வானவில் எப்படிப்பா வருது?''
""சூரிய ஒளி வளிமண்டலத்தில் இருக்கிற நீர்த்துளிகள்ல பட்டு பிரதிபலிக்கிறதுனால வானவில் வருது!'' என்றார் ராமலிங்கம்.
""சூரிய ஒளி வெள்ளையாத்தான இருக்கு! அப்புறம் வானவில் மட்டும் எப்படி கலரா வருது?'' சத்யா கேட்டான்.
""சூரிய ஒளி வெள்ளைதான்! ஆனால், அதுல பல வண்ணக் கதிர்களும் அடங்கியிருக்கின்றன! நீர் துளில பட்டு பிரதிபலிக்கிறப்ப ஒளிக்கோட்டம் ஏற்பட்டு வண்ணம் பிரிஞ்சு தெரியுது!'' என்றார் அப்பா.
""ஒவ்வொரு வண்ணக் கதிருக்கும் ஒவ்வொரு அலை நீளம் உண்டு. கதிர்களோட அலை நீளத்தைப் பொறுத்துத்தான் அதோட ஒளிக்கோட்டக் கோணமும் அமையும். நீளமானஅலைநீளம் கொண்ட கதிர்களோட ஒளிக்கோட்டக் கோணம் குறைவாகவும், குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களோட ஒளிக்கோட்டக் கோணம் அதிகமாவும் இருக்கும்.
நீளமான அலைநீளம் கொண்ட சிவப்பு வண்ணக்கதிர் வானவில்லோட வெளிப்புறமும், குறைவானது அலைநீளம் கொண்ட நீலக்கதிர் வானவில்லின் உட்புறமுமாக அடுக்கப்படுவது இதனால்தான். நான் சொல்றது சரியாப்பா!'' என்றாள் அக்கா ஆதித்யா.
""ரொம்ப அழகாச் சொன்ன ஆதித்யா!'' என்று அவளைப் பாராட்டிய ராமலிங்கம், ""வானவில் நிலத்தில் மட்டுமில்லை, கடல்லயும் வரும்! ஏன் உயரமான நீர்வீழ்ச்சி இருக்கிற இடத்தில்கூட வானவில் வர வாய்ப்புண்டு. நிலத்துல இருந்து பார்க்கிறப்ப அரை வட்டமா தெரியிற வானவில் ஆகாயத்துல இருந்து பார்க்கிறப்ப முழு வட்டமாகத் தெரியும்!'' என்றார்.
""வானவில் பளிச்சுனு ரொம்ப அழகாத் தெரியுதுலப்பா?'' என்று சத்யா கேட்டான்.
""இப்பா வானம் பாதி மேக மூட்டமாவும் பாதி வெயிலாவும் இருக்கு. நாம் நிற்கிற இடத்துல இருந்து மேகத்தோட கறுப்பு பின்னணியில் வானவில் தெரிவதினால் ரொம்ப நேர்த்தியா பளிச்சுனு இருக்கு'' என்றார் அப்பா.
""வானவில் ஏம்ப்பா வருது?'' இது ஆதித்யாவின் கேள்வி.
ராமலிங்கம் அவளை நிமிர்ந்து பார்த்தார். ஆதித்யா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி. அவள் என்ன நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று தெரியவில்லை. ஆனால் அதில் ஒரு தத்துவ விசாரணை அடங்கியிருப்பது போலத் தென்பட்டது அவருக்கு. இது வானிலையை முன்னிட்டு வளிமண்டலத்தில் நடைபெறும் ஒரு ஒளி நிகழ்வு என்று வெறுமனே பதில் சொல்லிவிட்டுப் போக விரும்பவில்லை அவர். கொஞ்சம் விரிவாகப் பேச விரும்பினார்.
""கடவுள்தான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைச்சாரு. மனுஷனுக்கு மட்டும்தான் அவர் ஆறாவது அறிவைக் கொடுத்தாரு! இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கை அவரோட ஏற்பாடுதான். இயற்கைங்கறது வெறும் விஷயமில்லை. அது ஓர் உணர்வு! அந்த இயற்கை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுகிறது. அதுல சில வியூகங்கள் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்குது. சில விஷயங்கள் துன்பத்தைக் கொடுக்குது. உதாரணமாக இருட்டு நமக்கு அச்சத்தைக் கொடுக்தது. புயல், எரிமலை, பூகம்பம் இது மாதிரியான சீற்றங்கள் நமக்குச் வியப்பையும், பயத்தையும் தர்ற விஷயம். வானவில்லும் அப்படித்தான்! தான் கண்டதையும் கேட்டதையும் காரண காரியங்களோட பகுத்துணர முடிந்த மனுஷனுக்கு பார்த்தவுடன் வியப்பையும் சந்தோஷத்தைத் தர்றதுக்காக வானவில் வருதுன்னு வைச்சுக்கலாமா ஆதித்யா?'' என்று கேட்டார் ராமலிங்கம்.
""தாராளமாக வைச்சுக்கலாம்!'' என்றாள் ஆதித்யா.
அப்பா காதிதங்களை ஆதித்யாவிடம் கொடுத்துவிட்டு,வீட்டிற்குள் போய்விட்டார். ஆதித்யா தம்பிக்கு கப்பல் செய்து தந்து கொண்டிருந்தாள். வானில் வானவில் சில நிமிடங்களில் கரைந்து மறைந்து போய்விட்டது. ஆனால் அப்பா சொன்ன மாதிரி அது ஏற்படுத்திச் சென்ற மகிழ்ச்சி இருவரின் உள்ளத்திலும் நீக்கமற நிறைந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...