எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிறுகதை: நந்தவனம்

மாலதி டீச்சர் வர ஆரம்பித்ததிலிருந்து அந்தப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமானதாய் மாறிவிட்டன. ஒவ்வொரு வாரமும் அவர் தன்னுடைய வகுப்பில் மாணவர்களுக்கு நிறைய

News image
Updated On :25 டிசம்பர் 2023, 1:53 pm

மா. பிரபாகரன்

மாலதி டீச்சர் வர ஆரம்பித்ததிலிருந்து அந்தப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமானதாய் மாறிவிட்டன. ஒவ்வொரு வாரமும் அவர் தன்னுடைய வகுப்பில் மாணவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவார். அதில் அவர்களின் மனதில் ஆழமாய் பதியும் வண்ணம் ஒரு போதனையும் வைத்திருப்பார். அடுத்து அவரின் வகுப்பு எப்போது வரும் என்று ஏங்கும்படி செய்திடுவார். இந்த வாரமும் வகுப்பறைக்குள் நுழைந்த மாலதி டீச்சர் மாணவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

""குழந்தைகளே! நான் இன்னைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன். ஒரு ஊர்ல ஒரு நந்தவனம் இருந்துச்சு. அந்த நந்தவனத்துல நிறையப் பூக்கள் இருந்துச்சு. பல வண்ணங்கள்ல பூத்துக் குலுங்குன அந்தப் பூக்களால அந்த நந்தவனம் பார்க்க அழகா இருந்துச்சு. அந்த வழியா போனவங்க எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு அந்த நந்தவனத்தோட அழகுல மனசைப் பறிகொடுத்துட்டுப் போவாங்க. இதனால, அந்த நந்தவனத்துல இருந்த பூக்கள் எல்லாத்துக்கும் கர்வம் வந்திடுச்சு. இந்த நந்தவனத்தோட அழகுக்கு நாமதான் காரணம்னு அதுங்க ஒவ்வொன்னும் நினைக்க ஆரம்பிச்சிடுச்சு. அதனால, ஒரு பூ இன்னொரு பூக்கிட்ட தன்னைப் பற்றி உயர்வாயும், அடுத்ததப் பத்தி இகழ்ந்தும் பேச ஆரம்பிச்சிடுச்சு!''

""ரோஜாப்பூ மல்லிகைப் பூக்கிட்ட சொல்லுச்சு. "பூக்களின் ராஜா நான்தான்! எந்த விருந்து விசேஷம்னாலும் மனிதர்கள் என்னைத்தான் பயன்படுத்துவாங்க. வைபவங்களின் போது என்னால் தொடுக்கப்பட்ட மாலைகளுக்குத்தான் முதல் இடம். நான் கௌரவச் சின்னம். கண்ணைப் பறிக்குற பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குற என்னாலதான் இந்த நந்தவனமே அழகா காட்சியளிக்குது' அப்படின்னுச்சு!

அதுக்கு மல்லிகைப் பூ, "நீ வேனா பூக்களோட ராஜாவா இருக்கலாம். ஆனா, பூக்களோட ராணி நான்தான்! உனக்கு விருந்து விசேஷத்தப்பதான் மதிப்பு. எனக்கு எல்லா நாளும் மதிப்பு. பெண்கள் தினமும் என்னைத்தான் விரும்பி அவங்களோட தலைல சூடிக்கிறாங்க. என்னோட மணத்துக்கு மயங்காதவங்களே கிடையாது. செடில கொத்து கொத்தா பூத்துக் குலுங்குற என்னோட வெண்ணிற மொட்டுக்களாலத்தான் இந்த நந்தவனமே பளீர்னு அழகாத் தெரியுது' அப்படினுச்சு! இதுங்க ரெண்டும் பேசிக்கிட்டிருக்குறத கேட்ட செம்பருத்திப் பூ சொல்லுச்சு! "நீங்க ரெண்டு பேரும் பூக்களோட ராஜா ராணியா இருக்கலாம். ஆனா மருத்துவ ரீதியா மனுஷங்களுக்கு அதிகம் பயன்படறது நான்தான்! அழகான குழல் வடிவத்துல செடி முழுக்க செக்கச் செவேல்னு பூத்துக்குலுங்குற என்னாலதான் இந்த நந்தவனமே அழகாத் தெரியுது அப்படின்னுச்சு!''

""இப்படி ஒவ்வொரு பூவும் தங்களுக்குள் நான்தான் அழகு, நான்தான் அழகுன்னு சண்டை போட்டுச்சுங்க. ஒரு கட்டத்துல சண்டை முத்திப் போயி நம்மளைப் படைச்ச கடவுள் கிட்டயே போயி நம்மில் யார் அழகுன்னு கேட்டுக்கலாம்னு முடிவு பண்ணி கடவுள்கிட்ட போச்சுங்க. கடவுள் சிரிச்சாரு. அவர் சொன்னாரு! "பூக்கள்ல உயர்ச்சி,

தாழ்ச்சி கிடையாது. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதத்துல அழகுதான். நீங்க எல்லாரும் ஒவ்வொரு காரணத்துக்காக என்னால இந்த பூமில படைக்கப்பட்டிருக்கீங்க. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் உங்களை கஷ்டப்பட்டு பராமரிச்சுட்டு வர்ற தோட்டக்காரனோட மனசு கோணாதபடிக்கு நல்லபடியா வளர்ந்துட்டு வர்றதுதான்' அப்படின்னாரு! பூக்களும் சரின்னு சமாதானமாகி தங்களோட இடத்துக்கு திரும்பிப் போச்சுங்க!'' என்று மாலதி டீச்சர் கதையைச் சொல்லி முடித்தார்.

தன் முகத்தையே அபூர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து, ""குழந்தைகளே! இந்தக் கதை மூலமா நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியுதா? யாராவது சொல்ல முடியுமா?'' என்று கேட்டார். ஓரிரு மாணவர்களுக்கு இந்தக் கதை மூலமாக மாலதி டீச்சர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. அவர்கள் எழுந்து ஓரிரு வார்த்தைகள் சொன்னார்கள்.

""வெரிகுட்!'' என்று அவர்களைப் பாராட்டிய மாலதி டீச்சர், அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாய் சொல்ல ஆரம்பித்தார்.

""இந்தக் கதைல வர்ற பூக்கள் மாதிரி நீங்களும் உங்களுக்குள் யார் பெரியவன்னு போட்டி போடுறீங்க! ஒரு சில பேரு தங்கள்கிட்ட இருக்குற விலையுயர்ந்த உடமைகளை வைச்சு அடுத்தவங்களை மட்டம் தட்ட நினைக்குறீங்க! சிலபேரு நல்லாப் படிக்குறதால மத்தவங்களை ஏளனமாப் பாக்குறீங்க. இன்னும் சிலபேரு வெறும் உடல் பலத்தால அடுத்தவங்களை அடக்கிடலாம்னு நினைக்குறீங்க. இப்படி நீங்க ஒவ்வொருத்தரும் உங்களுக்குள் நான்தான் பெரிய ஆளுன்னு போட்டி போடுறதுனால தேவையில்லாத சண்டை சச்சரவு வருது. யாராவது யாரைப் பத்தியாவது சதா காலமும் குறை சொல்லிக்கிட்டும், கோள் சொல்லிக்கிட்டும் இருக்கீங்க. இது ரொம்பத் தப்பு'' என்று சொல்லி சற்று இடைவெளி விட்ட மாலதி டீச்சர், மீண்டும் தொடர்ந்தார்.

""கடவுள் சொன்ன மாதிரி பூக்கள்ல எப்படி உயர்வு, தாழ்வு இல்லையோ அதே மாதிரி மாணவர்களாகிய உங்க மத்தியிலயும் உயர்வு, தாழ்வு கிடையாது. நீங்க ஒவ்வொருவரும் பூக்கள் மாதிரியே ஒவ்வொரு காரணத்துக்காக இந்தப் பூமியில படைக்கப்பட்டிருக்கீங்க! உங்கள்ல முதல் ரேங்க் வாங்குற தீபா ஒரு அழகான ரோஜான்னா, தன்னோட இனிமையான குரல்வளத்தால பரிசுகள் பல வாங்கிக் குவிக்குற ஜனனி ஒரு மணம் வீசும் மல்லிகை!

தடகளத்துல முத்திரை பதிச்சு பள்ளிக்கு பெருமை சேக்குற முத்து ஒரு செம்பருத்தினா, பொதுஅறிவு, இலக்கியம்னு புகுந்து கலக்குற சேகர் ஒரு சூரியகாந்தி! இப்படி நீங்க எல்லாரும் ஒவ்வொரு விதத்துல திறமைசாலியாத்தான் இருக்கீங்க. அதனால உங்க மத்தியில யார் பெரியவன்ங்குற அகங்காரம் தேவையில்லை. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் உங்களை கஷ்டப்பட்டு வளர்க்குற பெத்தவங்களும், உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற ஆசிரியர்களும் சந்தோஷப்படுற மாதிரி நல்லா படிச்சு சிறந்த மாணவனா வெளிவர்றதுதான்!'' என்றார் மாலதி டீச்சர். அவரே தொடர்ந்து பேசினார்.

""ஒரு தனி பூச்செடி நந்தவனம் ஆகாது. பல பூச்செடிகள் சேர்ந்து இருக்குறதுனாலதான் அது நந்தவனம் ஆகுது. அதே மாதிரி மாணவர்களாகிய நீங்க உங்க திறமைகளை மேம்படுத்தி நல்ல குடிமகனா வெளிவரும் போதுதான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். எப்படி நந்தவனத்தோட அழகுல மயங்கி எல்லாரும் திரும்பிப் பார்த்துட்டுப் போனாங்களோ அதே மாதிரி எழுச்சிமிக்க சமுதாயத்தை இந்த உலகம் திரும்பிப் பார்க்கும். என்ன  நீங்க அத்தனை பேரும் உங்களுக்குள்ள சண்டை போடாம சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவீங்களா?'' என்று மாலதி டீச்சர் கேட்க, அனைத்து மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து கோரஸôக, ""கண்டிப்பா மிஸ்!'' என்று குரல் கொடுத்து ஆர்ப்பரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.