எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முயற்சியால் வென்ற முத்து - சிறுகதை

முத்து ஒரு ஏழைச் சிறுவன். மாடு மேய்ப்பது அவன் தொழில். அவன் வசிக்கும் ஊரின் பெரிய தனக்காரர்கள் வீட்டு மாடுகளை மேய்த்து வந்தான். முத்துவின் அப்பா நல்லவர்தான். ஆனால், தீயவர்களின் சேர்க்கையால் கெட்டுப் போ

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:34 pm

மா. பிரபாகரன்

முத்து ஒரு ஏழைச் சிறுவன். மாடு மேய்ப்பது அவன் தொழில். அவன் வசிக்கும் ஊரின் பெரிய தனக்காரர்கள் வீட்டு மாடுகளை மேய்த்து வந்தான். முத்துவின் அப்பா நல்லவர்தான். ஆனால், தீயவர்களின் சேர்க்கையால் கெட்டுப் போனவர். அவர் முத்துவை கவனித்துக் கொள்ளமாட்டார்.

  முத்துவிற்கு தான் செய்யும் இந்த வேலையில் விருப்பம் கிடையாது. தன் வயதையொத்த மற்ற சிறுவர்கள் போன்று சீருடையணிந்து தானும் பள்ளிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். முத்துவின் அப்பாதான், ""படிச்ச வரைக்கும் போதும்! ஒழுங்கா வேலைக்குப் போ. ஏதோ அஞ்சுபத்து வரும்படியாவது வரும்!'' என்று சொல்லி, பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தவனை போகவிடாமல் தடுத்து மாடு மேய்க்க அனுப்பிவிட்டார்.

  ஐந்தாம் வகுப்பு வரை அவனை அவர் அனுப்பியதே பெரிய விஷயம். அற்ப ஆதாயத்துக்காக மகனின் எதிர்காலத்தை தான் அடகு வைப்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை.

  ஒவ்வொரு நாளும் மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு முத்து  ஒரு ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்வான். முத்துவைப் போன்றே இன்னும் நிறைய சிறுவர்கள் ஆடு மாடு மேய்க்க அப்பகுதிக்கு வருவார்கள்.

  அவர்கள் யாரும் வந்த வேலையைப் பார்க்க மாட்டார்கள். ஆடு மாடுகளை விட்டுவிட்டு தத்தம் மனம் போன போக்கில் இருப்பார்கள். முத்துவிற்கு இது பிடிக்காது. அவர்களோடு ஒட்டாமல் தனித்து இருப்பான். அவர்கள் அவனை பரிகாசம் செய்வார்கள். கண்டுகொள்ள மாட்டான். இவையெல்லாம் அற்ப சந்தோஷங்கள் வாழ்க்கைக்குப் பயன்படாது என்று அவனுக்கு அந்தச் சிறிய வயதிலேயே நன்றாகப் புரிந்திருந்தது. ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், என்ன செய்வது என்பதுதான் அவனுக்குப் பிடிபடவில்லை.

  ஒரு நாள் ஒரு பணக்காரர் வீட்டுக் கொட்டடியில் மாடுகளை அடைத்து விட்டு திரும்ப எத்தனித்த போது வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து அந்த வீட்டம்மா தன் பையனோடு கீழே இறங்கினார். அந்தப் பையன் படிக்கும் மழலையர் பள்ளியில் ஏதோ மாறுவேடப் போட்டியாம். அந்தச் சிறுவன் கிருஷ்ணர் வேடம் போட்டிருந்தான். அதற்கு முதல் பரிசு. அந்த வீட்டுப் பெண்கள் அவனை சூழ்ந்து நின்று ஆரத்தி எடுத்து திருஷ்டிக் கழித்தனர்.

  ""எங்க வீட்டுப் பிள்ளை சாட்சாத் அந்த கோகுல கண்ணன் மாதிரியே இருக்கானே!'' என்று ஆளாளுக்கு கொஞ்சினார்கள். தன்னை அந்தப் பருவத்தில் யாரும் இப்படியெல்லாம் கொஞ்சவில்லையே என்று முத்துவிற்கு ஏக்கம் வந்தது. முத்து அந்தச் சிறுவனை உற்றுப்பார்த்தான். அவன் கையில் ஒரு புல்லாங்குழல். அது மட்டும் அவன் மனதில் ஆழப் பதிந்தது.

  முத்துவின் பக்கத்து வீட்டில் பாட்டி ஒருவர் இருந்தார். மண்பாண்டங்கள் செய்து ஊர் ஊராய் சென்று விற்பனை செய்வார். தாயில்லாப் பிள்ளை என்பதால் முத்துவின் மீது அவருக்குப் பாசம் அதிகம். அவ்வப்போது வாய்க்கு ருசியா ஏதாவது தின்னக் கொடுப்பார். முத்து அவரை நச்சரித்து பக்கத்து ஊர்ச் சந்தையில் ஒரு புல்லாங்குழல் வாங்கியிருந்தான்.

  அதை வாயில் வைத்து ஊதிப் பார்த்தான். வெறும் காற்றுதான் வந்தது. முத்து விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தான். பல நாட்கள் இடையறாத முயற்சியால், அந்த புல்லாங்குழலின் துவாரங்கள் வழியாக நாதம் பிறக்கும் சூட்சுமத்தைக் கண்டு கொண்டான். கண்ணனின் புல்லாங்குழல் இசைக் கேட்டு பசுவின் மடியிலிருந்து தானாகவே பால் சுரந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறான். முத்துவிற்கு அப்படியெல்லாம் அற்புதங்கள் நடக்கவில்லை. ஆனால், மனம் லேசாகக் காற்றில் பறப்பது போலிருந்தது.

  முத்துவின் அருமை பெருமை ஊருக்குள் பரவத் துவங்கியது. இசையில் நாட்டம் கொண்ட ஒருசிலர் முத்துவைப் புல்லாங்குழல் வாசிக்கச் சொல்லி கேட்டார்கள். இது அவன் மாடு மேய்க்கும் வீடுகளைச் சேர்ந்த ஒருசில பேருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் முத்துவின் அப்பாவை தூண்டிவிட்டார்கள்.

  ஒரு நாள் பாட்டி தந்த உணவை சாப்பிட உட்கார்ந்த சமயம், முத்துவின் அப்பா அவன் பின்னால் வந்து சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கினார். ""ஏன்டா... உனக்குப் பெரிய இவன்னு நினைப்போ? வேலை பார்க்கப் போன இடத்துல வேலைய பார்க்காம வேற வேலையா பார்த்துக்கிட்டு திரியுற? மாடுக வயல்ல புகுந்து பயிரெல்லாம் கடிச்சு நாசம் பண்ணிருச்சுன்னு மாணிக்கம் ஐயா வந்து கத்திட்டு போறாரு பாரு! அவருக்கு என்ன பதில் சொல்றது? ஒழுங்கா வேலைய மட்டும் பாக்கலை உன்னைத் தொலைச்சுப் போடுவேன்!'' என்றபடி அவனை அடித்தார். அவன் வைத்திருந்த புல்லாங்குழலை முறித்து குப்பையில் வீசினார். அன்று இரவு முத்து அழுத அழுகை சொல்லி மாளாது.

  அந்த நிகழ்வுக்குப் பின் முத்து புல்லாங்குழலைத் தொடவில்லை. மனதில் ஆசை இருந்தது. ஆனால், அப்பாவின் அடிக்குப் பயந்து மனதைக் கட்டுப்படுத்தினான். அந்த நிலையிலும் அவனுக்கு அப்பாவின் மீது வெறுப்பு வரவில்லை. சிந்திக்க மறுப்பதால்தான் அவர் அடிமை வாழ்வில் உழன்றுக் கொண்டிருக்கிறார் என்று அவர் மீது பச்சாதாபம் வந்தது. ஆனால், தான் அப்படி இருக்கப் போவதில்லை என்று மனதில் உறுதிபூண்டான்.

  ஒரு நாள் அப்பா வேலைக்குப் போன சமயம், அவருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

  ஊருக்கு வெளியே மலையடிவாரத்தை ஒட்டி அமைந்த ஆற்றங்கரையின் ஒரு பாறையில் அமர்ந்தபடி முத்து புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான். புல்லாங்குழலின் நாதம் ஒரு இனிய பிரவாகமாய் உருவெடுத்து நதியின் பிரவாகத்தோடு இரண்டறக் கலந்த நேரம். ஏதோ நிழலாடுவது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தான். அவன் முன்னே நீண்ட தாடியுடன் ஒரு பெரியவர் நின்றிருந்தார். பார்ப்பதற்கு மகான் போன்றிருந்தார்.

  அந்தப் பெரியவர் ஒரு துறவி. அவர் ஆசிரமங்களை நிறுவி மக்களுக்கு வாழும் நெறிமுறைகளைப் போதித்து வருபவர். அந்த மலையடிவாரத்தில் ஆசிரமம் ஒன்று நிறுவ இடம் தேர்வு செய்ய வந்த போதுதான் முத்து அவர் கண்ணில் பட்டான். அவனது அபார இசை ஆற்றல் அவரைப் பெரிதும் ஈர்த்தது. முத்துவின் நிலையைக் கேட்டறிந்து தான் அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவனை தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார்.

  அனைவரும் சந்தோஷப்பட்டனர். ஆனால், ஒருசில மட்டும் அதை எதிர்த்தனர். முத்துவின் அப்பாவை தூண்டி விட்டனர். அவர் தத்துத்தர மறுத்தார். ஆனால், ஞானி முத்துவின் அப்பாவை சம்மதிக்க வைத்தார்.

  முத்துவிற்கு அந்தத் துறவியின் ஆசிரமத்தில் குருகுல கல்வி அளிக்கப்பட்டது. கூடுதலாக இசைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. நாளடைவில் அவன் இசை மேதையாய் உருவெடுத்தான்.

  இசைப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி, தன்னைப் போல எண்ணற்ற கிராமப்புற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புத் தந்தான். ஒருகாலத்தில் அவனை வளரவிடாமல் ஒடுக்க நினைத்தவர்கள் இன்று அவனைத் தேடி வந்து அரவணைத்துக் கொண்டார்கள். எத்தனை இழிவான சூழ்நிலையில் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அதிலிருந்து விடுபட முத்து மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான முயற்சிதான் அவனை இந்த உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தது. இது நமக்கெல்லாம் ஒரு பாடம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.