பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 8: காந்த சக்தி பெறலாம்

பேச்சு பல விஷயங்களை உணர்த்தும். எப்படி என்று கேட்கிறீர்களா? ஒருவர் பேசும் பொழுது நாம் தகவல்களை மட்டும் தெரிந்து கொள்வதில்லை.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:32 am

கோதை ஜோதிலட்சுமி

பேச்சு பல விஷயங்களை உணர்த்தும். எப்படி என்று கேட்கிறீர்களா? ஒருவர் பேசும் பொழுது நாம் தகவல்களை மட்டும் தெரிந்து கொள்வதில்லை. அவருடைய குணாதிசயத்தையும் தெரிந்து கொள்ளலாம். சிலர் பேசும் பொழுது எதற்கெடுத்தாலும் சலித்துக் கொள்வார்கள். சிலர் தன்னைப் பற்றி பேசும் பொழுதும் தனக்கு வேண்டாதவர்கள் பற்றி ஒப்பிட்டுக் கொள்வார்கள். சிலர் உலகத்திலேயே தான் தான் கஷ்டப்படுவதற்கென்றே பிறந்த ஜீவன் என்பதாக அலுத்துக் கொள்வார்கள். சிலர் உலகமே தனக்காகத் தான்சுற்றுகிறது என்பது போல ஒரு நினைப்போடு பேசுவார்கள்.

யார் பேசினாலும் அதிலே அவர்களுடைய சிந்தனை நம்பிக்கை குணநலன்கள் தெரிந்து விடுகிறது. ஒருசிலரின் பேச்சு அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிப் பின்பற்றச் செய்துவிடும். சிலர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டார்களா என்று எண்ண வைக்கும். சுதந்திரப்போராட்ட காலத்தில் மஹாத்மா காந்தி தேசம் முழுவதும் எங்கே சென்று பேசினாலும் ஜனங்கள் அவர் சொல்வதை அப்படியே பின்பற்றினார்கள் அல்லவா?

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் உரையாற்றும் பொழுது அடுக்கடுக்காகக்கதைகள் சொல்லி அதிலும் நகைச்சுவை ததும்பப் பேசும்பொழுது கூட்டம் அப்படியே கட்டுண்டு அந்தப் பேச்சில் லயித்திருக்கும். பெரிய சித்தாந்தங்கள் கூட எளியவர்களுக்கும் புரிந்து விடும். நம்மோடும் சிலர் இப்படி இருப்பார்கள். அவர்கள் பேசுவது நமக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி சிந்திக்க வைத்துவிடும்.

உள்ளார்ந்த ஆர்வத்தோடு ஆத்மார்தமாகச் செய்யும் செயல்கள் பேசும் சொற்கள் அப்படி எதிரில் இருப்பவர்களையும் பாதிக்கும். நாம் நேர்மறையான சிந்தனை செயல் என்று இருக்கும் பொழுது நம்மைச் சுற்றி இருப்போரையும் அது பாதிக்கும். நம்முடைய நேர்மறை எண்ணம் நம்மை நோக்கி அனைவரையும் இழுத்து கொண்டு வரும். உறவுகளுக்குள்ளோ அல்லது அலுவலகத்திலோ சிலரைச் சுற்றி மட்டும் எந்த நேரத்திலும் கூட்டமும் கலகலப்பும் இருப்பதற்கு அவர்களின் இந்த ஆத்மார்த்தமான நேர்மறை எண்ணங்களே காரணம்.

ஒரு நாட்டில் மகான் ஒருவர் மிகுந்த புகழோடு இருந்தார். எந்த நேரத்திலும் மக்கள் அவரை நாடிச் செல்வதும் அருள் பெற்றுத் திரும்புவதுமாய் இருந்தார்கள். மகானோ தனக்கென எதையும் வைத்துக் கொள்வதில்லை. சதா காலமும் யோகத்தில் இருப்பதும் வேதம் சித்தாந்தம் என்ற ஆராய்ச்சியிலும் இருப்பவர். மரத்தடி தவிர வேறு எங்கும் அவரைப் பார்க்க முடியாது. இப்படி எதுவுமே இல்லாத ஒரு பரதேசி ஆனால் அவரைக் கண்டு திரும்பும் மக்கள் மிகுந்த ஆனந்தத்தோடு திரும்புகிறார்கள். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட அந்த தேசத்து இளவரசி ஏன் அந்த மகான் சொல்வதை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்? இவரைக் காண்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாள்.

இளவரசி தான் நாடாளும் மன்னன் மகள் என்ற கர்வத்தோடு இருப்பவள். ஆடை அலங்காரத்தில் மிகுந்த பற்றுடையவள். தன்னை அனைவரும் கண்டு அதிசயித்துப் போக வேண்டும் என்று நினைப்பவள். அவள் ஒரு நாள் மகானைப் பார்க்க ரதத்தில் புறப்பட்டு வந்தாள். மகான் அமர்ந்திருந்த மரத்தடியில் அவரைச் சுற்றி மக்கள் வெள்ளம். மகானோடு சேர்ந்து நாமஜெபத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவராவது அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. இது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இளவரசி வந்து நிற்கிறேன். ஒருவரும் என்னை சட்டை செய்யாமல் இப்படி இந்த ஆண்டிப்பண்டாரத்தோடு கூடி பஜனை செய்வதில் மும்முரமாய் இருக்கிறார்களே என்று வந்த வழியே திரும்பிப் போய்விட்டாள்.

சில காலம் கழிந்தது. பகை மன்னன் தன் படைவலிமையால் நாட்டை முற்றுகையிட்டான். இந்த தேசத்தின் மன்னருக்கு வெற்றி சாத்தியமாகவில்லை வீரமரணம் அடைந்தார். இளவரசி உட்பட மன்னரின் குடும்பத்தினர் மகானிடம் அடைக்கலம் புகுந்தார்கள். மகானும் அவர்களை ஆசுவாசப்படுத்தி இறைத் தொண்டில் ஈடுபடுமாறும் மக்களுக்குத் தங்களால் இயன்ற நன்மைகளை செய்து கொண்டு வரும்படியும் அறிவுரை கூறினார்.

இளவரசி அன்றாடம் நாமஜபத்திற்கென வருவோருக்கு நீர்மோர் தரும் பணியை மேற்கொண்டாள். நாளாக நாளாக அவளுக்கு இந்த எளிமையும் தொண்டும் மனத்துக்குப் பிடித்துவிட்டது. அமைதியான மனதோடு சேவையைத் தொடர்ந்தாள். இளவரசியாய் வாழ்ந்த பெண் இப்படி அன்பாக சேவை செய்கிறாளே என்று மக்கள் அவளிடம் மிகுந்த பிரியம் கொண்டதோடு அவளைக் கொண்டாடி அவர்களும் அவளுக்கு உதவிக்கு வந்தனர். அந்த மக்களின் உதவியோடு அவள் பகையரசனுடன் போரிட்டு தன்னுடைய நாட்டை மீட்டு அவளே மகாராணியாக ஆட்சி நடத்தினாள்.

மகானை தரிசித்து அவள் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பழைய சந்தேகத்தைக் கேட்டாள். "உங்களை நாடி மக்கள் வருவதன் காரணம் என்ன? இளவரசியாக இருந்த நாளில் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காத மக்கள் ஒரு சேவகியாக இருந்த நேரத்தில் ஏன் என் மீது அன்பும் பரிவும் காட்டினார்கள்?" புன்னகையோடு இந்த வினாக்களைக் கேட்டுக் கொண்டிருந்த மகான் சொன்னார். "நீ நிறைந்த மனதோடும் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் ஒரு காரியத்தில் ஈடுபடும் பொழுது உன்னைச் சுற்றிலும் அதே சிந்தனையும் செயலையும் விரும்பும் மக்கள் கூடி வருவார்கள். உன் எண்ணங்களும் செயல்களுமே உன்னைக் காந்தமாக்கி உடனிருப்போரை உன்வசப்படுத்துகின்றன". இதைப் புரிந்து கொண்ட மகாராணி தன் தேசத்து மக்கள் மகிழ்ச்சியோடு வாழும் படி நாட்டை ஆண்டு வந்தாள்.

இந்தக் கதையும் அதன் கருத்தும் புதிதல்ல என்றாலும் கதை படிப்பவரின் மனத்துக்கேற்ப புதிய அர்த்தங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். எனக்கு இந்தக் கதை, மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடு சமீபத்தில் சாதனை படைத்த ஒரு அழகியை நினைவு படுத்தியது. அழகிக்கு வயது நூற்றிநான்கு.

குட்டியம்மாவைத் தெரியுமா?

கேரளம் கோட்டயத்தைச் சேர்ந்த மூதாட்டி. நல்ல குடும்பம் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் கொள்ளுபேரக்குழந்தைகள் என்று உறவுகள் சூழ வாழும் பேறு பெற்றவர். தன்னுடைய நூறாவது வயதுப் பிறந்தநாளை பேரக்குழந்தைகள் உற்சாகமாகக் கொண்டாடுவதைத் திருவிழாவை வேடிக்கை பார்க்கும் குழந்தையைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பேரக்குழந்தை ஏதாவது ஆசை இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றி வைக்கிறோம் என்று கேட்க, நான் பள்ளிக்கூடம் சென்றதேயில்லை. எழுதவும் படிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனாலும் எனக்கு இப்பொழுது அதற்கெல்லாம் வழி இல்லையே என்று சொல்லியிருக்கிறார்.

கேரளத்தில், சக்ஷ்ரதா என்ற எழுத்தறிவு இயக்கம். கேரளா அரசால் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அதிலே அடிப்படை மொழி மற்றும் கணிதம் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த அமைப்பின் வழியாகக் கல்வி கற்பதற்கான வாய்ப்பு இருப்பதைச் சொன்னவுடன் குட்டியம்மா தயாராகி விட்டார். சிரத்தையுடன் அன்றாடம் கற்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். வகுப்பில் இருக்கும் சக மாணவர்கள், கற்றுத் தரும் சிறுபெண் என்று அனைவரிடமும் நட்போடும் உற்சாகத்தோடும் பழகும் இனிமையான இயல்பு அனைவரையும் நட்பாக்கியிருக்கிறது.

தேர்வு வந்தது. குட்டியம்மா மொழிப் பாடத்தில் எண்பத்தியொன்பது மதிப்பெண்களும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்கிறார். அவருக்கு மகிழ்ச்சி இத்தனை மதிப்பெண்கள் பெற்றோம் என்பதில் இல்லை. தற்போது அவரால் விரும்பிய புத்தகங்களைப் படிக்க முடிகிறது. வயதில் என்ன இருக்கிறது. எண்ணத்தில் தான் எல்லாம் இருக்கிறது என்று ஆர்வமாகப் புத்தகத்தைப் படித்துக் காட்டும் குட்டியம்மாவைப் பார்த்து தேசமே உற்சாகம் கொண்டு வாழ்த்தியது.

எனக்குத் தெரிந்த பெண் வீட்டு வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறாள். தன்னைப் பற்றி அவளுக்குக் கழிவிரக்கம். "ஒவ்வொரு நாளும் வீட்டு வேலை செய்து எலும்பு தேய்கிறது. என்றைக்குத் தான் அக்கடான்னு உட்கார நேரம் கிடைக்குமோ? பொழுது விடிந்தால் வரிசையாய் வேலை வேலை வேலை தான். தூக்கத்தில் கூட எப்போ பொழுது விடியுமோன்னு நினைப்பு, ஏன் தான் பொழுது விடியுதோன்னு இருக்கு" இப்படிப் புலம்பாத நாள் கிடையாது. அவளைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு இளக்காரம் என்ற எண்ணம்.

பள்ளிக்கூடம் படித்திருக்கிறாள். ஆனால் கல்லூரியைக் கண்டதில்லை. "எல்லாரும் பி ஏ, எம் ஏ என்றெல்லாம் பேருக்குப் பின்னால் போட்டுக் கொள்கிறார்களே அதெல்லாம் தன்னால் படிக்க முடியாமல் போய்விட்டது இப்படி வீட்டு வேலை செய்து கஷ்டப்படும்படி ஆகிவிட்டது. நானும் படித்திருந்தால் அலுவலகத்தில் போய் வேலை பார்த்து இன்னும் நல்லபடியாக வாழ்ந்திருப்பேன்" என்று வருந்துவாள், கூடவே," இப்போது வயதாகி விட்டது. எல்லாம் கனவு தான்" என்று பெருமூச்சு விட்டுக்கொள்வாள்.

குட்டியம்மா கதையைக் கேட்டதும் பாட்டி தொலைக்காட்சியில் படித்துக் காட்டுவதைப் பார்த்ததும் என்னவோ உற்சாகம் தொற்றிக் கொண்டுவிட்டது. "அட, நானும் படித்து ஒருநாள் நல்ல பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் போகிறேன் பாருங்கள்" சொன்னவள் தொலைநிலைக் கல்வியில் சேர்ந்து பிஏ வரலாறு படிக்கிறாள். இதோ இந்த ஆண்டு தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை இவ்வளவு சுலபமானது என்ற எண்ணத்தை ஆசுவாசத்தை வாழ்க்கையின் மீதே ஒரு பிடிப்பை குட்டியம்மாக்கள் ஏற்படுத்திவிடுகிறார்கள். நம்மால் முடியவே முடியாது என்று நமக்குள் இருக்கும் இறுக்கத்தை ஒரு கணத்தில் உடைத்தெறிந்து விடுகிறார்கள். குட்டியம்மாக்கள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் இன்னும் நம்மை உயர்த்தும். தொடர்ந்து முன்னேறுவோம்.

- தொடரும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.