தேவை அரசுப்பள்ளி!
புதிய கண்டுபிடிப்புகள் தேவைகளின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன என்பார்கள். ஒவ்வொருவரின் வாழ்விலும் இதன் பிரதிபலிப்பைப் பார்க்க முடியும்.


புதிய கண்டுபிடிப்புகள் தேவைகளின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன என்பார்கள். ஒவ்வொருவரின் வாழ்விலும் இதன் பிரதிபலிப்பைப் பார்க்க முடியும். வாழ்வின் தேவைகள் நம்மை நகர்த்துகின்றன. அப்படி நகரும் பொழுது நாம் நமக்காக மட்டுமின்றி சக மனிதர்களையும் மனதில் கொண்டு வாழும் பொழுது சாதனையாளர்களாக அடையாளம் காணப்படுகிறோம். அப்படியானவர் தான் யமுனா. தன்னுடைய தேவை என்பதைத் தாண்டி தன் அனுபவங்களால் சமூகத்தின் தேவைகளை உணர்ந்து அதற்காகவும் சிந்திக்கிறார். காஞ்சிபுரத்தின் அடையாளமாக உயர்ந்து வரும் யமுனா தன் எண்ணங்களை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
உங்கள் பின்புலம் எப்படியானது...
நான் பிறந்து வளர்ந்தது படித்தது வாழ்க்கைப்பட்டது எல்லாமே காஞ்சிபுரத்தில் தான். காஞ்சிபுரம் என்னுடைய தாய் மண். என்னுடைய கல்வி உழைப்பு எல்லாமே காஞ்சிபுரத்தில் இருப்பதில் எனக்குப் பெருமை. நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருக்கும் எல்லா சிக்கல்களோடும் கஷ்டங்களோடும் வளர்ந்தேன். பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு என்னை கல்லூரிக்கு அனுப்பினார்கள். இளங்கலை கணிதம் படித்தேன். இறையருளால் நல்ல கணவர் வாய்த்தார். தனியார் நிறுவனத்தில் வேலை. எனக்கு என்னவோ இன்னொருவரிடம் சென்று வேலை செய்வதை விட நாமே சுயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. அந்த எண்ணம் தான் இந்த இடத்திற்கு என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
தொழில் முனைவோர் ஆனது எப்படி?
என் மாமனார் காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் டீ கடை வைத்திருந்தார். எங்களுக்கு அந்தக் கடையை எடுத்து நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. டீ கடை என்றாலே ஆண்களுக்கானது என்பது போல அதன் சூழ்நிலை இருக்கும். அதை மாற்ற வேண்டுமென நினைத்தேன். ஆண் பெண் பேதமற்று எல்லாரும் வரவேண்டுமானால் பீடி சிகரெட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதெல்லாம் ஒத்துவராது. டீ கடை என்பதன் அர்த்தமே இல்லாமல் போகும் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். ஆரம்பத்தில் சில மாதங்கள் பெருத்த நஷ்டத்தையும் சந்தித்தோம். பின்னர், புதிய முறையில் மசாலா டீ, மூலிகை டீ என்று அறிமுகம் செய்தோம். கூட்டம் வரத் தொடங்கியது.
பெண்களுக்கானதாக டீ கடையை மாற்றியிருக்கிறீர்களே எப்படி சாத்தியமாயிற்று...
ஆம். டீ கடையில் அனுபவமும் வருமானமும் நன்முறையில் வரத் தொடங்கிய பிறகு நானே தனியாக ஒரு டீ கடை தொடங்கினேன். என் கணவர் என் எண்ணங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். கோபு காபி ஷாப் என்று என் மாமனார் பெயரிலேயே தொடங்கினேன்.பெண்கள் தனியே டீ கடைக்கு வரத் தயங்குகிறார்கள். இதை உணர்ந்து, டீ மாஸ்டர் முதல் வேலைக்கு வைத்துக் கொண்டவர்களும் பெண்கள் தான். எங்கள் கடையில் பெண்கள் சகஜமாக வர வேண்டுமென்றால் இது தான் வழி என்று தோன்றியது. என் எண்ணம் வெற்றி அடைந்தது. கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் கல்லுரிக்குப் போகும் பெண்கள் வரை அனைவரும் கடைக்கு வரத் தொடங்கினார்கள். பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் கடை என்று அடையாளம் கிடைத்துவிட்டது.
உங்கள் டீ கடையின் விசேஷம் என்ன?
பசும்பால் மட்டுமே எங்கள் கடையில் பயன்படுத்துகிறோம். வெள்ளம் கருப்பட்டி என்று தொடங்கி சித்த மருத்துவர் அறிவுரைப்படி அதிமதுரம், போன்ற 13 மூலிகைகளை சரியான முறையில் அளவில் கலந்து மூலிகைப் பொடி தயார் செய்திருக்கிறோம். இது எங்கள் கடையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சொந்தத் தயாரிப்பு. சுக்கு காபி, மசாலா டீ, கருப்பட்டி காபி என்று ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல விதமான பிரத்யேகமான டீ எங்களிடம் இருக்கிறது. அதற்காக வாடிக்கையாளர்களும் எங்களைத் தேடி வருகிறார்கள்.
அதோடு, கைக் குழந்தைகளுக்கு பசும்பால் இலவசமாக வழங்குகிறோம். குடும்பத்தோடு வருபவர்களுக்கும் பெரியவர்களுக்கு மட்டுமே பணம் வாங்குகிறேன். குழந்தைகளுக்குப் பணம் வாங்குவதில்லை. வீடுகளிலிருந்து இதற்காகவே வந்து பால் வாங்கிக் கொண்டு போகும் பெண்களும் உண்டு. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதை சேவையாக செய்து கொண்டிருக்கிறோம்.
சமூக நோக்கில் எப்படி செயல்படத் தொடங்கினீர்கள்...
காஞ்சிபுரத்தை சேர்ந்த ராணுவஅதிகாரி கிள்ளிவளவன் என்பவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் துணையோடு மரம் நடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தார். அதிலே என் கணவர் ஈடுபாட்டோடு செயல்பட்டு வந்தார். நானும் அந்த இயக்கத்தினரோடு செயல்பட தொடங்கினேன். தெருக்களில் மரம் நட்டு அதனைப் பராமரிக்கிறோம். கிள்ளிவளவன் பள்ளிக்குழந்தைகளைக் கொண்டு எல்லையில் ராணுவப்படை வீரர்களுக்கு கடிதம் எழுத வைத்து அனுப்புவார். எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் அப்படியான கடிதங்கள் வரும் பொழுது மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்று தன் அனுபவங்களைச் சொல்வார். எனக்கு இந்த விஷயம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தேசத்தைக் காக்க எல்லையில் நிற்கும் வீரர்கள் நமக்காகத் தானே அத்தனை சிரமங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சகோதரர்கள் தானே அவர்களும். அவர்களை உற்சாகப்படுத்துவதும் நலம் விசாரிப்பதும் நமக்கும் கடமை என்று நினைத்தேன். இதை என் கடைக்கு வருபவர்களிடம் எடுத்துச் சொல்லி ஒரு தபால் அட்டையில் கடிதம் எழுதச் சொல்லுவேன். அப்படி எழுதப்படும் கடிதங்களை எல்லைப்படை ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதை செய்து வருகிறேன். தற்பொழுதெல்லாம் நாங்கள் சொல்லாமலே கடைக்கு வருபவர்கள் தாங்களே தபால் அட்டை எடுத்து கடிதம் எழுதத் தொடங்கி விடுகிறார்கள். இந்த செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்...
என் இரண்டாம் மகன் வளர்ச்சி குறைபாடு உள்ளவன். அவனுக்கான சிகிச்சைகளுக்கு நிறைய செலவாகிறது. அதற்காகவே என் கணவரும் நானும் உழைக்கிறோம். ஒரு இல்லாத வீட்டுக் குழந்தைக்கு இப்படியான சிக்கல் ஏற்படும் பொழுது அவர்களுக்கு பயிற்சி வழங்குவது படிக்கச் வைப்பது போன்றவற்றிற்கு அரசோ தனியார் தொண்டு நிறுவனங்களோ பெரிதாக ஏதும் செய்திருக்கவில்லை. ஊர் தோறும் அரசுப் பள்ளிகள் இருப்பதைப் போல வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்டம் தோறும் சிறப்புப் பள்ளிகள் அமைத்து நன்கு செயல்பட்டால் அந்தக் குழந்தைகளுக்கும் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும். பெற்றோருக்கும் சற்று ஆறுதலாக இருக்கும். வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்டு அவர்களின் தேவைகளும் நிறைவேற அரசும் சேவை உள்ளம் கொண்டோரும் ஆவன செய்யவேண்டும். இதுவே அரசு மற்றும் நல்ல உள்ளங்களுக்கு ஒரு தாயாக நான் வைக்கும் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...