கரோனா: கட்டுப்படுத்திய ஆட்சியர்
சுற்றுலாவுக்கும், காப்பித் தோட்டங்களுக்கும், அடை மழைக்கும் புகழ் பெற்றது கர்நாடக மாநிலத்தின் "கூர்க்' எனப்படும் குடகு மாவட்டம்.


சுற்றுலாவுக்கும், காப்பித் தோட்டங்களுக்கும், அடை மழைக்கும் புகழ் பெற்றது கர்நாடக மாநிலத்தின் "கூர்க்' எனப்படும் குடகு மாவட்டம். கரோனா இந்தியா உட்பட உலகையே கிடுக்கிப் பிடி போட்டு உலுக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், குடகு மாவட்டம் கரோனா பரவலை அற்புதமாகக் கட்டுப்படுத்தியிருப்பதில் வெற்றிப் பெற்றிருப்பது அகில இந்திய அளவில் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் குடகு மாவட்டத்தின் துணைஆட்சியராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆனிஸ் கண்மணி ஜோய். இன்று அகில இந்திய அளவில் பாராட்டுகள் கண்மணியை நோக்கி படையெடுத்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கண்மணியின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளது.
குடகு பகுதியில் கரோனா முதல் முதலாக கால்பதித்தது கடந்த மார்ச் 19-இல் 35 வயதான ஆணுக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. குடகு கேரளாவை ஒட்டி இருப்பதால், கேரளத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட காசர்கோடு, கண்ணனூர், வயநாடு பகுதிகளிலிருந்து மக்கள் குடகிற்கு வந்து போவதால் கரோனா குடகு மாவட்டத்திற்குப் பரவக் கூடாது என்று எல்லைகளை உடனடியாக மூடினார். அடுத்ததாகக் கரோனாவால் பாதிக்கப்பட்ட குடகுக்காரர் எங்குச் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்று விசாரித்துத் தகவல்கள் பெற்று ஒருவரைக் கூட விடாமல் அனைவரையும் தனிமைப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுத்தார். அதனால் குடகு பகுதியில் கரோனா பரவுவது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.
கர்நாடகாவின் இதரப் பகுதிகள் உட்பட இந்தியா முழுவதும், கரோனா தொற்றுக் காட்டுத்தீயாக அதிவேகத்தில் பரவி கொண்டிருக்கும் அபாய காலகட்டத்தில், குடகு மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றே மூன்று பேர் மட்டுமே. அதில் ஒருவர் பூரண குணம் அடைந்துவிட்டார். மலைக்க வைக்கும் சூழ்நிலையில், ஆனிஸ் கண்மணி ஜோய் ஒரு ஆச்சரியக் குறியாக மாறியிருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. கடந்த நான்கு வார காலத்தில் புதிதாக குடகு மாவட்ட பகுதியில் வசிக்கும் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது ஒரு மருத்துவ அதிசயம். கரோனாவுக்கு முன்னும் கண்மணி ஆச்சரியக் குறியாகத்தான் பார்க்கப்பட்டார். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
அடிப்படையில் கண்மணி ஒரு செவிலியர். கேரளாவில் மிகவும் ஏழ்மையான விவசாயிக்கு மகளாகப் பிறந்தவர். வறுமையில் வாடி வளர்ந்த அவரால் பள்ளி சென்றபோது புத்தகம் வாங்கக்கூடப் பணமில்லாமல் தவித்தார். ஆனால் இன்றோ அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் துணைக் கலெக்டர் ஆக சிறப்பாகச் செயல்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
டாக்டர்கள், பொறியாளர்கள், அதிகம் படித்தவர்கள்தான் தேர்வுகள் எழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆவதுண்டு. ஆனால் ஒரு செவிலியராக இருந்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனது இந்தியாவில் கண்மணி மட்டுமே. இந்தச் சாதனைக்காக 2012 -இல் கண்மணி தலைப்பு செய்தியானார். சென்ற ஆண்டும் நிலச்சரிவுகளிலிருந்து குடகு மக்களைக் காப்பாற்றியதற்காக கண்மணி பாராட்டுகளைப் பெற்றார்.
ஆனிஸ் கண்மணி ஜோய் தொடர்கிறார்:
"கரோனா காலத்தில் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடிப்படையில் நான் செவிலியராக இருந்ததால் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எளிதாக இருந்தது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவியாக அமைந்தது.
எல்லாவற்றிற்கும் மேல், குடகு மக்கள் கரோனா பரவல், அதன் விளைவுகள், பரவலைத் தடுக்க என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னதைப் புரிந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதனால்தான் குடகு இந்தியா முழுவதும் சிலாகித்துப் "பேசும் பொருளாக' மாறியுள்ளது. குடகு சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றன.
உண்மையில், செவிலியராகப் பெற்ற பயிற்சி, பொது மக்களிடம் எப்படிப் பேச பழக வேண்டும் என்கிற அணுகுமுறையினைச் சொல்லிக் கொடுத்தது. அவசர சூழ்நிலைகளில் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்ற சமயோஜித அறிவையும் தந்துள்ளது. மருத்துவமனையில் நோயாளிகள் இருக்கும் வார்டுகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்மாகக் கற்றுக் கொடுத்தது. இந்த வல்லமைகள்தான் கரோனா பேரிடர் காலத்தில் என்னைச் சிறப்பாகச் செயல்பட வைத்தன.
"சென்ற ஆண்டு குடகு பகுதியில் பெருமழை பெய்தது. எப்போதும் பெய்வதைவிட ஐந்து மடங்கு அதிகம். விளைவு சுமார் 70 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர் நிலச் சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் சேதமுற்றன. இதை எதிர்பார்த்து பொது மக்களை உடனடியாக வெளியேற்றியதால் உயிர் இழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மரங்களை வெட்டிவிட்டு வணிக நோக்குடன் நிலங்களை விற்பதால் மழைக் காலத்தில் நிலச் சரிவுகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. அதனால் பசுமையான இடங்களை வணிக வளாகங்களாக மாற்றுவதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.
"பள்ளிக் காலத்தில் நான் சராசரி மாணவிதான். வருமானம் சரியாக இருக்கும் சராசரி விவசாயி குடும்பத்தில் பிறந்தவள். டாக்டராக வேண்டும் என்று நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் போதிய மதிப்பெண்கள் கிடைக்காததால் செவிலியர் படிப்பிற்கு இடம் கிடைத்தது. படித்து முடித்துப் பயிற்சி செவிலியராக இருந்த போதுதான் ஐ.ஏ.எஸ் கனவு வந்தது. "செவிலியர் பணி புனிதமான சேவை' என்று பெருமைப்படுத்திச் சொல்லப்பட்டாலும், சமூகத்தில் அதை ஒரு சாதாரண வேலையாகத்தான் பார்க்கிறார்கள். செவிலியர்களுக்கு அரசுத் துறையில் போதுமான மாத ஊதியம் தந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் சம்பளம் மிகமிகக் குறைவு.
ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகத் தேவையான புத்தகங்கள் வாங்க கையில் பணம் இல்லை. தனியாகப் பயிற்சி வகுப்பிலும் சேர முடியாத பொருளாதாரநிலை. செய்தித்தாள்களின் செய்திகள், தலையங்கங்கள், விமர்சனங்கள், அலசல்களை வாசித்துப் பொது அறிவைப் பெருக்கிக் கொண்டேன். சிறப்புப் பாடங்களாக சைக்காலஜி, மலையாள இலக்கியத்தைத் தெரிவு செய்தேன். முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் 580- ஆவது இடத்தில் தேர்வானேன். மத்திய அரசின் நிதித் துறையில் அதிகாரியாக அரசு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஆனாலும் ஐ.ஏ.எஸ் கனவு என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. இரண்டாவது முயற்சியில் 2012-இல் 65-ஆவது நபராகத் தேர்வு பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியானேன்.
வியர்வை சிந்தி உழைத்து என்னைப் படிக்க வைத்த எனது பெற்றோர்கள்தான் எனக்கு ரோல் மாடல்கள். அம்மா வீட்டுவேலைகளையும் பார்த்துக் கொண்டு அப்பாவுடன் இணைந்து பண்ணை வேலைகளையும் செய்வார். ஆயிரம் கைகளைக் கொண்ட தேவதையாக அம்மா எனக்குத் தோன்றுவார் என்று சொல்லும் கண்மணிக்கு 35 வயதாகிறது. குடகு பகுதியில் கரோனா தொற்றுக்கு எதிராக மட்டுமல்ல ..., மரங்களை வெட்டிக் கடத்தும் கொள்ளைக்காரர்களும் எதிராகச் செயல்பட்டுச் சட்டத்தை நிலைநாட்டும் பணியிலும் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார் கண்மணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...