கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பெண்மையை போற்றுவோம்

கரோனா நோய்த் தொற்று ஒருபுறம், மறுபுறம் ஊரடங்கு என உலகமே அடங்கியிருக்கும் வேளையில் இருட்டில் பாதை காட்டும் விட்டில் பூச்சிகள் போல் பெண்கள் பலர் தங்களுடைய சேவையால் இச்சமூகத்திற்கு  பாதை

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

வனராஜன்

கரோனா நோய்த் தொற்று ஒருபுறம், மறுபுறம் ஊரடங்கு என உலகமே அடங்கியிருக்கும் வேளையில் இருட்டில் பாதை காட்டும் விட்டில் பூச்சிகள் போல் பெண்கள் பலர் தங்களுடைய சேவையால் இச்சமூகத்திற்கு பாதை காட்டியுள்ளனர். அவர்களது சேவைகளை இங்கே பார்ப்போம்:

கண்கலங்க வைக்கும் காக்கி பெண்கள்!: ""உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேவையின்றி வெளியில் வராதீர்கள்'' என எண்ணற்ற விழிப்புணர்வு விடியோக்கள், செய்திகள் வந்தாலும் ஒரு சில பேர் தடையை மீறி வெளியே வந்து போலீசாருக்கு சிரமத்தை அளித்து வருகின்றனர்.

அதை காரணம் காட்டி கடலூர் போலீசார், இதைப் பார்த்தாவது மக்கள் மாறமாட்டார்களா என்ற நம்பிக்கையில் புதிய விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டனர். அதில், அவர்களது சொந்த பிரச்னையை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர். அதில் பேசும் பெண் காவலர் ஒருவர், "" எனக்கு இரண்டு குழந்தைகள் அவர்களை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பணிக்கு வந்துள்ளேன். தற்போது ரோட்டில் உங்களுக்காகத் தான் நிற்கிறேன். தயவு செய்து நீங்கள் வீட்டில் இருந்தால் தான் நான் சீக்கிரமாக வீட்டிற்குச் சென்று குழந்தைகளைப் பார்க்க முடியும்'' என்கிறார். அடுத்த நிமிடம் வீட்டிலுள்ள அந்த இரண்டு குழந்தைகள் திரையில் தோன்றி ""எங்க அம்மா வேலைக்குப் போய்ட்டாங்க. நாங்க தனியா தான் இருக்கோம். நீங்கள் வீட்டிலேயே இருங்கள் என்ற ஆங்கில வாசகத்தை அட்டையில் எழுதி காண்பிக்கிறார்கள். எங்க அம்மா வீட்டுக்கு சீக்கிரமா வரணும் அதுக்கு நீங்க தான் உதவி செய்யணும்'' என்று பேசுவது பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது.

இது ஒருபுறம் இருக்க கடலூர் டிஎஸ்பி சாந்தி தனது ஒரு மாத ஊதியத்தில் இருந்து காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல் படையினர், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் பொருட்களை வாங்கி, சுமார் 500 காவலர்களுக்கு வழங்கியுள்ளார். மற்றொரு புறம் மெரினா கடற்கரையில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் காவலர் அங்குள்ள நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி வந்து உணவாக அளிக்கிறார்.

Story image

தாய்மையிலும் சேவை: 6 மாத கால பேறு கால விடுப்பு வேண்டாம் என்று சொல்லி, பிறந்த 22 நாள்களே ஆன குழந்தையை தூக்கி கொண்டு அர்ப்பணிப்புடன் பணிக்கு வருகிறார் ஆந்திராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீஜனா.

2013-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஸ்ரீஜனா தற்போது விசாகபட்டினத்தின் முனிசிபல் கார்பரேஷன் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் குழந்தையுடன் பணிக்கு வந்து கிடைக்கும் இடைவேளையில் குழந்தைக்கு பாலூட்டும் தனது தாய்மையிலும் தவறுவதில்லை அவர். எப்படி இது சாத்தியம் என்று கேட்ட போது சொன்னார்:

""ஒட்டுமொத்த உலகமே கஷ்டமான சூழலில் இருக்கும் போது இதில் என்னுடைய பணி என்பது சிறியது தான். என்னுடைய குடும்பத்தார் தந்த நம்பிக்கை தான் நான் இந்த நேரத்திலும் பணி செய்ய காரணம்'' என்று கூறுகிறார்.

இந்த தேசத்தின் உண்மையான போர் வீரர் நீங்கள் தான் என மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

செவிலியரின் சேவை மனப்பான்மை: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்கு எங்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று சொல்லி அனைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த அரசு செவிலியர் பாப்பா.

கேரளாவிலுள்ள கோட்டயம் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்ற இருந்தவர் தான் இந்த செவிலியர் பாப்பா.

இத்தனைக்கும் உடன் பணி செய்த சக செவிலியருக்கு நோய்த் தொற்றியதால் பாப்பாவும் தனிமைப்படுத்தப்பட்டார். 14 நாள்கள் முடிந்த பின் இப்போது சொந்த ஊரான பீர்மேட்டில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார் பாப்பா.

ஆனால் அவருடைய சேவை மனப்பான்மை அவரை ஓய்வில் இருக்க விடவில்லை. நம்மால் ஆன உதவிகளை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து அவர்களை உயிர் பிழைக்க உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ""நான் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்'' என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிடம் சொன்னார்.

இந்நிலையில் காசர்கோடில் பணி செய்ய மருத்துவ குழுவில் கேரள அரசு பாப்பாவை இடம் பெற செய்து மகிழ்ச்சிபடுத்தியிருக்கிறது.

முகக் கவசம் ஏற்படுத்திய மாற்றம்: கரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்கள் முகத்தில் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பணியாற்றுகின்றனர். முகத்தில் அணிந்திருக்கும் "மாஸ்க்' செவிலியர்களுக்குக் கடுமையான வடுக்களை ஏற்படுத்துகின்றது. நீண்ட நேரம் மாஸ்க் அணிந்திருப்பதால் வடுக்கள் ஏற்படுகின்றன. அந்தக் காயத்துக்கு பிளாஸ்திரிகளைப் போட்டுக்கொண்டு மீண்டும் மாஸ்க் அணிந்து மருத்துவ சேவையைத் தொடர்ந்து வருகின்றனர் செவிலியர்கள்.

நகரத்தை சுத்தமாக்கும் சேவகர்களுக்கு மரியாதை: உலக சுகாதாரப் பணியாளர்களில் 67 சதவிகிதம் பேர் பெண்கள். தன்னை அழுக்காக்கி.. நகரத்தை சுத்தமாக்கும் தூய்மை பணியாளர்களின் சேவை கரோனாவுக்குப் பிறகுதான் பலருக்கும் புரிய வைத்திருக்கிறது. இப்போது தூய்மை பணியாளர்கள் என சொல்ல வைத்திருக்கிறது.

Story image

நாம் வீட்டை விட்டு வெளியே வந்தால் கரோனா வந்து விடும் என பயந்து வீட்டில் முடங்கி கிடக்கிறோம். ஆனால் நோய்களை நம்மிடம் அண்ட விடாமல் தினமும் பணியாற்றி வருகின்றார்கள் இந்த சமூக சேவகர்கள். பயத்தை தூர விரட்டி அழகான சுத்தமான பகுதியாக மாற்ற வேண்டும் என இரவு, பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். ஊரடங்கிய இரவு நேரத்தில்தான் அவர்களின் பணி துவங்குகிறது. கரோனா பாதிப்பு வந்த பிறகு தூய்மை பணிக்கு செல்வதை, அவர்கள் குடும்பத்தாரே வேண்டாம் என்று தடுத்தும் வேலைக்கு வந்துவிடுகிறார்கள். தொடர்ந்து இதனை செய்துதான் ஆக வேண்டும் என்ற மன உறுதியுடன், வேலைக்கு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களின் சேவை பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்தது. மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களையும் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரச் சொல்லி பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர். அதற்காக பள்ளி ஒன்றையும் தேர்வு செய்து விழாவை சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை, பரிசுப் பொருள்கள், சைவ, அசைவ, உணவு வகைகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மகிழ்விக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு புறம் புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் குர்ஷித்பானு தூய்மை பணியாளர்களை அழைத்து பாராட்டி தேநீர், பிஸ்கட், மதியம் உணவு வழங்கியுள்ளார்.

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் சகோதரிகள்: மனிதர்களே உணவில்லாமல் தவிக்கும் போது நாய்களின் நிலைமையை கேட்கவா வேண்டும். வாயில்லாத ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்ட பலர் அவைகளுக்கு உணவு அளித்து வருகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காஜல், திஷா ஆகிய சகோதரிகள். நாக்பூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும், தங்கள் வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு அன்றாடம் வழங்குகின்றனர்.

கரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, முகக் கவசம் அணிந்து வரும் இவர்கள் கூடுமானவரை நாய்களுக்கும் சமூக இடைவெளியை ஏற்படுத்தி உணவளித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்திலும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கிய சகோதரிகளின் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆந்திர பெண்ணின் உதவி: ஆந்திர மாநிலத்தில் ஏழைப் பெண் ஒருவர் ரோந்து பணியில் இருந்த போலீஸாருக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். நாள்தோறும் நூறு ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் அவர் காவலர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். அதனை வாங்க மறுக்கும் காவலர்களிடம், நான் வசதியானவள் இல்லை.

என்னுடைய ஒரு நாள் ஊதியத்தை உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்கு செலவிட நினைத்தேன். தாகம் எடுக்கும் போது இதனை ஒரு வாய் குடித்துக் கொள்ளுங்கள் என அவர்களிடம் கெஞ்சி கொடுக்கிறார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த விடியோவை முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஊரடங்கின் போது மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை கொடுக்கிறது இந்த விடியோ.

அந்த பெண்ணின் விலைமதிப்பில்லாத உதவியை உண்மையிலேயே பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

பெண்மையின் மேன்மையை போற்றுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.