துப்பாக்கி சுடுவதில் சாதனை!
பெயரைக் கேட்டதும் இப்படி ஒரு தூய தமிழ் பெயரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று எண்ணத் தோன்றும்.


பெயரைக் கேட்டதும் இப்படி ஒரு தூய தமிழ் பெயரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று எண்ணத் தோன்றும்.
உலகக் கோப்பை போட்டியில், பெண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில், 249.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இளவேனில், தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். அணிகளுக்கான போட்டியிலும், ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஸியெனா கஹிட்டாவுடன் ஜோடி சேர்ந்து இளவேனில் வாலறிவன், தங்கம் வென்றிருக்கிறார். இளவேனிலுக்கு பதினெட்டு வயதாகிறது. கடலூரை பூர்விகமாகக் கொண்டிருக்கும் இளவேனில், பெற்றோர்களுடன் வசிப்பதுஆமதாபாத்தில்.
அப்பா வாலறிவன் ருத்ரபதி. ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராகப் பணிபுரிகிறார். அண்ணன் ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறார்.
அவர் விடுமுறையில் வரும்போது துப்பாக்கிகளை பற்றி சொல்வார். ஒருமுறை அப்பா ஆமதாபாத்தில் இருக்கும் இந்திய ராணுவ துப்பாக்கி சுடும் கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பயிற்சி பெறுபவர்களைக் கண்டதினால் துப்பாக்கி ஏந்த எனக்கும் ஆசை வந்துவிட்டது. 2013 -இல் குறி பார்த்து துப்பாக்கியால் சுடும் பயிற்சியில் சேர்ந்தேன். தொடக்கத்தில் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொண்டேன். சீராக எனது வெற்றி புள்ளிகள் அதிகரித்தன. அதனால் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன்.
சொந்தமாக துப்பாக்கி வாங்கியது 2016 -இல் தான். ஜெர்மனியில் நடந்த 28-ஆவது ஜுனியர் உலகப் போட்டியில் எனக்கு இருபத்தெட்டாவது இடம் கிடைத்தது. சென்ற நவம்பரில் நடந்த பயிற்சியின் போது சர்வதேச சாதனையால் 252 .1 புள்ளிகளை என்னால் எடுக்க முடிந்தது. அதையடுத்து டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிகளில் ஒரு பிரிவில் தேசிய சாம்பியனாக வந்தேன். எனக்கு கிடைத்த வெற்றி புள்ளிகள் புதிய தேசிய சாதனையாக மாறியது.
சென்ற ஆண்டு முழங்கால் மூட்டில் காயம் ஏற்பட்டு சிரமப்பட்டேன். காலும் வீங்கி விட்டது. பல பயிற்சிகள் செய்து போட்டியில் கலந்து கொண்டேன். எனக்கு துப்பாக்கி ஏந்துவதற்கு அடுத்தபடியாக வாகனம் ஓட்டுவதில் விருப்பம் அதிகம். தற்சமயம் ஸ்கூட்டி ஓட்டுகிறேன். சிட்னியில் தங்கப் பதக்கம் வென்றால் எனக்கு கார் வாங்கித்தர வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். நிச்சயம் கார் கிடைக்கும் என நம்புகிறேன். ஏனென்றால், சிட்னியில் நான் எடுத்த மொத்த புள்ளிகள் (631 .4) ஒரு உலக சாதனையாகும். பயிற்சிக்காக சென்னைக்கும், புனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது. ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பில் முதல் ஆண்டு படித்து வருகிறேன். ஓய்வு கிடைப்பது நான் பெற்றோருடன் ஆமதாபாத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதுதான்' என்கிறார் இளவேனில் வாலறிவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...