ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திறன் மேம்பாடு...:  முன்னேற்றப் பாதை!

திறன் என்பது ஒருவருடைய திறமை அல்லது அவர் வெளிப்படுத்தும் ஆற்றலைக் குறிக்கிறது. உடல், கல்வி, அனுபவம் என்ற விதங்களில்  ஒவ்வொருவரின்  திறன்களும் வேறுபடுகின்றன. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:15 pm

கோமதி எம். முத்துமாரி

திறன் என்பது ஒருவருடைய திறமை அல்லது அவர் வெளிப்படுத்தும் ஆற்றலைக் குறிக்கிறது. உடல், கல்வி, அனுபவம் என்ற விதங்களில் ஒவ்வொருவரின் திறன்களும் வேறுபடுகின்றன.

திறன் மேம்பாடு என்பது திறமையை அல்லது ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது. நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்வது என்று சொல்லலாம்.
தற்போதைய போட்டி நிறைந்த இந்தச் சூழ்நிலையில் திறன் மேம்பாடு என்பது அவசியமான ஒன்று. ஒவ்வொருவரும் தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதனை புரிய தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.
பள்ளி மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்றால் அதுகுறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றால் அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு தன்னை திறன்மிக்கவராக மாற்றிக் கொள்வதே வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழி.
நவீன தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், அறிவியல் வளர்ச்சி, மக்கள்தொகை, அதிகரிக்கும் போட்டி என பல காரணிகள் நம் திறனை வளர்த்துக் கொள்ள நம்மைத் தூண்டுகின்றன.
திறன் மேம்பாட்டினால் வேலையின்மை குறையும். வாழ்க்கைத் தரம் மேம்படும். பொருளாதாரநிலை சீரடையும். தலைமைப் பண்பு வளரும். அதிகாரத்துவம் கிடைக்கும். சிக்கலுக்குத் தீர்வு காணும் அனுபவம் பெற முடியும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இளைஞர்கள் என்னென்ன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்?
அறிவாற்றல்: அறிவுபூர்வமான திறன்களை வளர்த்துக் கொள்வது, சிக்கலான சூழ்நிலையில் கருத்துகளைப் புரிந்துகொள்ள உதவும். அடிப்படை
கல்வியறிவு, எண் கணிதம், துறை சார்ந்த அடிப்படைக் கல்வி, சமூக மாற்றங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
படைப்பாற்றல்: நீங்கள் எந்தத் துறையில் கல்வி பயின்றீர்களோ அல்லது எந்த துறையில் பணிபுரிகிறீர்களோ அது குறித்த கல்வியைப் பெறுவதோடு அதில் புதுமையைப் புகுத்த முயற்சி செய்யுங்கள். சிக்கலுக்குத் தீர்வு காணும் அனுபவத்தைப் பெறும்போது படைப்பாற்றல் தோன்றுகிறது. எளிதாக, விரைவாக வேலையைச் செய்து முடிக்க துணை புரியும் புது கண்டுபிடிப்புகள் குறித்து யோசியுங்கள்.
தொழில்நுட்பம்: ஒரு குறிப்பிட்ட பணியை செய்யத் தேவையான அறிவைப் பெற அது சார்ந்த கருவிகள், தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது. துறை சார்ந்த தொழில்நுட்பங்களை அறிவது நீங்கள் அந்த வேலையில் நிபுணத்துவம் பெற உதவும். புது கண்டுபிடிப்புகளுக்கு தொழில்நுட்ப அறிவு உதவும்.
டிஜிட்டல் அறிவு: டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த உலகில், துறைரீதியான டிஜிட்டல் அறிவைப் பெற வேண்டியது அவசியம். இளைஞர்கள் பட்டப்படிப்பு முடிந்து வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் கணினி, மெயில் குறித்த அடிப்படை அறிவு அவசியம்.
இது ஒரு வேலையை அணுகவும், நிர்வகிக்கவும், புரிந்து கொள்ளவும், ஒருங்கிணைக்கவும், ஒருவரைத் தொடர்பு கொள்ளவும், மதிப்பீடு செய்யவும், சரியான தகவல்களைத் திரட்டவும் உதவும்.
சமூகத்தை எதிர்கொள்ளுதல்: சக நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் தொடர்புகொள்வது, கலந்துரையாடுவது ஆகியவை அவசியம். அலுவலகத்தில் ஒரு வேலையை சக ஊழியரின் ஒத்துழைப்போடு செய்வது வேலையை எளிதாக்கும்.
தனிப்பட்ட திறன்கள்: ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தும்போதுதான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். இது உங்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கான முதலீடு என்று கூட சொல்லலாம்.
அந்த வகையில் விமர்சனங்களை எதிர்கொள்ளுதல், சிக்கலைத் தீர்த்தல், முடிவு எடுத்தல் ஆகிய இந்த மூன்று திறன்களையும் அனுபவத்தின் மூலமாக ஒருவர் பெற வேண்டும்.
உதாரணமாக, ஒரு கடினமான சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுடைய வாழ்க்கையே புரட்டிப் போடும். அந்த சூழ்நிலையில் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதேநேரத்தில் நேர்மையான முடிவை எடுக்க முயற்சி செய்யுங்கள். அதேபோல வாழ்வில் வெற்றி பெற விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். உங்கள் செயல்பாட்டின் மூலமாக விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுங்கள்.
முன்னோக்கு சிந்தனை: இறுதியாக, ஒருவர் எவ்வளவுதான் கல்வி, தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தாலும் முன்னோக்கு சிந்தனை இல்லாவிட்டால் துறையிலும் சரி, வாழ்விலும் சரி வெற்றி பெற முடியாது. எனவே உங்கள் மீது நம்பிக்கை கொண்டு முன்னேற்றப் பாதையில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள்.

இந்தியாவில் கல்வியறிவு அதிகம் காணப்பட்டாலும் மாணவர்கள், இளைஞர்களிடையே திறன்களை வளர்த்துக் கொள்ளும் பண்பு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகக் கூட வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். எனவே, வேலைவாய்ப்பைப் பெறவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் உங்களுடைய துறை சார்ந்த மற்றும் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.