ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வாழுங்கள்... நிகழ்காலத்தில்!

வாழ்வதே மிகக்கடினமான இருக்கும் இச்சூழ்நிலையில், எந்தவிதக் கவலையுமின்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்ற ஆசை எல்லாருக்கும் இருக்கிறது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:47 am

கோமதி எம். முத்துமாரி


வாழ்வதே மிகக்கடினமான இருக்கும் இச்சூழ்நிலையில், எந்தவிதக் கவலையுமின்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்ற ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாராலும் அனைத்து நிலைகளிலும், எப்போதும் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடிவதில்லை. 

குறை சொல்வது மனித இயல்பு என்ற அடிப்படையில் வாழ்க்கையில் இருக்கும் குறைகளை மட்டும் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை ஒருபோதும் கிடைக்காது. ஆனால், ஒரு சிலர் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு நிகழ்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கிறார்கள். கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ நினைத்து அவர்கள் கவலைப்படுவதில்லை. 

எனவே, நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் மகிழ்ச்சியும் நம்முடன் பயணிக்கிறது. மன அழுத்தம், கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்னைகளைக் கடந்து, கடந்த காலம், எதிர்காலம் பற்றி யோசிக்காமல் நிகழ்காலத்தை மட்டும் அனுபவித்தலே மகிழ்ச்சிக்கான வழி. 

கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ பற்றி யோசிக்கும்போது உங்களுடைய நிகழ்காலத்தை நீங்கள் வீணடிக்கிறீர்கள். இந்த நொடியில் வாழ்க்கையில் முழுவதுமாக கவனம் செலுத்தி மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது உங்களுடைய உடல், மன நலப் பிரச்னைகளும் தானாகக் குறையும். 

வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம். எனவே, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது, இந்த நொடியில் சிறப்பாக வாழ உதவும். 

நிகழ்காலத்தில் வாழ்வது என்பது மிகவும் சுவாரசியமானது. இந்த நிமிடத்தை முழுவதுமாக அனுபவிக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தத் தருணத்தில் வாழ்வது, உங்களை தெளிவாக சிந்திக்க வைப்பதுடன் வாழ்க்கையை முழுவதுமாக புரிந்துகொள்ள கற்றுக் கொடுக்கும். 

அதுமட்டுமின்றி உங்களுடைய ஒட்டுமொத்த செயல்களையும் மாற்றிவிடும் சக்தி கிடைக்கும். உங்களைச் சுற்றி நேர்மறை சிந்தனைகள் மட்டும் இருக்கும். வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களில் உங்களால் கவனம் செலுத்த முடியும். இலக்குகளை நோக்கி சிறப்பாகப் பயணிக்கவும் உங்கள் வாழ்க்கை மட்டுமின்றி மற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளையும் தீர்க்க முடியும்.

ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்!

உங்கள் மனம் தடுமாறும்போது அல்லது திசை திரும்பும்போது வாழ்க்கையைப் பற்றிய புரிதல் கடினமாகிவிடும். மனதை முதலில் ஆரோக்கியமாகவும் அதற்கு அடுத்தபடியாக மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க வேண்டும். 

அதற்கு ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதாவது நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். 

சுய பாராட்டு அவசியம்

உங்களில் எத்தனை பேர் உங்களுக்கு நீங்களே நன்றியோ பாராட்டோ கூறியிருக்கிறீர்கள்? யாருமில்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஆனால், மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகளை எதிர்ப்பார்ப்பதும் அது மறுக்கப்படும்போது மனம் சோர்வடைவதும் நடந்து கொண்டிருக்கிறது. 

உங்களுக்கு நீங்களே நன்றி தெரிவிக்காவிடில், உங்களை நீங்களே பாராட்டாவிடில், மற்றவர்களிடம் பாராட்டுகளை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் என்ன சாதனை எல்லாம் செய்தீர்கள்? மனதுக்கு மகிழ்வான நிகழ்ச்சிகள் எவை? உங்கள் மனதை சந்தோஷப்படுத்த என்னவெல்லாம் செய்தீர்கள் என்று எழுதி வைத்து, அதனை ஒருமுறை பார்த்து உங்களுக்கு நீங்களே நன்றி கூறிக் கொள்ளுங்கள். இந்த நன்றியுணர்வு மனப்பான்மை உங்களை நிகழ்காலத்தை அனுபவிக்க ஊக்கப்படுத்தும். 

தருணத்தை உருவாக்குங்கள்! 

உண்மையில் உங்களுக்கான வாய்ப்பு எதிர்காலத்தில் இல்லை. நிகழ்காலத்தில்தான் இருக்கிறது. ஆம், எதிர்கால சிறந்த வாழ்வுக்கு நிகழ்கால உழைப்பும் மகிழ்ச்சியும் தேவைதானே? 

மகிழ்வான தருணங்கள் தானாக ஒன்றும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக, அவை உங்களாலோ வேறு யாராலோ உருவாக்கப்படுபவையே. எனவே, இந்த நொடியில் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குங்கள். 

உங்களுக்கு எது மிகவும் தேவை என்பதைத் தெளிவுபடுத்தி, அவற்றைச் செயல்படுத்துவதற்கு அதிக நேரத்தைச் செலவிடுங்கள். 

வேண்டுமென்றே செய்யுங்கள்! 

உங்களுடைய மகிழ்ச்சிக்காக சிலவற்றை தற்செயலாக அன்றி திட்டமிட்டு வேண்டுமென்றே செய்வது அவசியம். வாழ்வதற்கான உங்களின் திறனை மேம்படுத்த விரும்பினால் மகிழ்ச்சியாக சில விஷயங்களைத் திட்டமிட்டு அதில் ஈடுபடலாம். 

உதாரணமாக, மனதளவில் நீங்கள் துன்பமாக, சோர்வாக உணர்ந்தால் ஒரு சிறிய சுற்றுலாவுக்குச் செல்லலாம். அவ்வாறு செல்லும்போது நிகழ்காலத்தை உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும்போது ஏற்படும் மாற்றத்தை உணர முடியும். 

கவனமாகக் கேளுங்கள்!

எந்தவித கவனச்சிதறலுமின்றி பிறர் கூறுவதை உன்னிப்பாகக் கேட்பது கூட ஒரு கலைதான். நேரத்தை சரியாகப் பயன்படுத்தி வாழக் கற்றுக் கொள்பவர்கள் இந்தக் கலையை அறிவார்கள். 

உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நிலையை அறிந்துகொள்வது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. அந்தவகையில், நிகழ்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டால் மற்றவர்கள் சொல்வதை உங்களால் உன்னிப்பாகக் கேட்க 
முடியும். ஏன், அவர்களின் பிரச்னைக்கு உங்களால் தீர்வு காண முடியும். இதன் மூலமாக சமூகத்தில் உங்களுக்கு கிடைக்கும் நிறைய உறவுகளினால் வாழ்க்கை அழகாகும். 

நிகழ்காலத்தில் இருங்கள்!

நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனில் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். 

மற்றவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துங்கள், காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள், இயலாதோருக்கு உதவுங்கள், நெருங்கியவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.  இவ்வாறு உங்களுடைய மன நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் எது தேவையோ அதனை உடனே செய்துவிடுங்கள். 

இந்த தருணத்தை நீங்கள் அனுபவிக்கும்போது கடந்தகாலம் மறைவதுடன் எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உண்மையில், கடந்த காலத்தைப் பற்றி யோசிக்காமல் நிகழ்காலத்தை அனுபவிப்பது உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.