என்ன படிப்பு?: திட்டமிடுங்கள்... தெளிவாக!
புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறீர்களா?


புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறீர்களா? என்ன பாடத்தை, என்ன பயிற்சியைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் என்ன படிக்கப் போகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உங்களுடைய கவனத்துக்கு...
வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் கல்வி இன்றியமையாததாக இருக்கிறது. கல்விக்காகவும், கல்வியைத் தேடவும் நேரம் செலவழிக்கும் நபர்கள் எதிர்கால சாதனையாளர்களாக உருவெடுக்கின்றனர். "கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்பதற்கேற்ப வாழ்வின் இறுதி வரை புதிய புதிய அறிவைப் பெற ஒவ்வொருவரும் முனைய வேண்டும்.
அத்தகைய கல்வியில் சரியான போக்கைத் தேர்வு செய்வது வளர்ச்சிக்கு அடிகோலிடும். அதுவே பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்யும்பட்சத்தில் பெரிய தாக்கத்தைக் கூட ஏற்படுத்தலாம். உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பாடங்களை, பயிற்சிகளைத் தேர்வு செய்வது சிறந்தது.
பொருத்தமான ஒரு பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது மட்டுமின்றி தொடர்ந்து அதுசார்ந்த உங்களுடைய தகுதிகளையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய தற்போதைய வாழ்க்கை முறையை மாற்ற விரும்பினால் பொருளாதாரரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தும் படிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும். வேலையில் மாற்றம் பெற விரும்பினால் அதற்கேற்பப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தொழில் மாறலாம். மற்றவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு விருப்பமானது எதுவோ அதனை நோக்கிப் பயணிக்கலாம்.
பாடங்களைத் தேர்வு செய்வதற்கு முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில...
சிறந்த கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்யுங்கள்:
நீங்கள் தேர்வு செய்த புதிய படிப்புக்கான பயிற்சிகளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கினாலும் நீங்கள் எங்கு படிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்யுங்கள். எந்த படிப்பாக இருந்தாலும் சரி, சிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலைப் பெற்றால் குறிப்பிட்ட துறையில் சாதிக்க முடியும்.
மேலும் கல்லூரியின் வரலாறு, அதன் தனிச்சிறப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள், கல்வி உதவித்தொகை, மேற்படிப்புக்கான சாத்தியம் ஆகியவற்றை ஆராய்ந்து சிறந்த கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்யுங்கள்.
தகுதியைச் சோதியுங்கள்:
ஒரு படிப்பைத் தேர்வு செய்யும்முன் அதற்கான கல்வித் தகுதிகள், குறிப்பிட்ட பயிற்சியைப் பெறுவதற்கான உங்களுக்கு ஆர்வம் உள்ளதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு கல்வி நிறுவனத்திற்குச் சென்று நேரடியாகப் படிக்க விரும்பினால் அங்குவளாகச் சூழல் எப்படி உள்ளது? நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து செல்லும் தூரம், வளாகத்தில் பாதுகாப்பு வசதிகள், நண்பர்களுடன் கலந்துரையாடல் ஆகிய மற்ற காரணிகளையும் அலசி ஆராய வேண்டும். கல்வியின் தரத்தை நிர்ணயிப்பதில் மற்ற காரணிகளும் அடங்கியிருக்கின்றன.
வேலைவாய்ப்பு:
பொருளாதாரரீதியாக மேம்பாடு அடையவே கல்வி தேவைப்படுகிறது. அப்படி இருக்க உங்களுடைய பல சூழ்நிலைகளைக் கடந்து அறிவைத் தேடிச் செல்கிறீர்கள் என்றால், அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் இருக்க வேண்டும். நன்றாகப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பலரை நம்முடைய வாழ்க்கையிலே கடந்திருப்போம். எனவே, நீங்கள் செல்லும் கல்வி நிறுவனத்தில் எந்த அளவுக்கு வேலைவாய்ப்பபை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் என்று ஆய்வு செய்யுங்கள். கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே படித்த மாணவர்களின் நிலையை அறிந்துகொண்டு அவர்களிடம் அது குறித்து உரையாடுங்கள். போட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில் படித்தவுடன் வேலை என்பது அனைவருக்குமே அவசியமாகிறது.
முடிவில் உறுதியாக இருங்கள்: உதாரணமாக நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், ஆனால் உங்களுடைய கனவு வேறொன்றாக இருக்கிறது. உங்களுடைய வேலையை விட்டுவிட்டு கனவு வேலைக்கான கல்வியை நோக்கிப் பயணிக்கிறீர்கள் என்றால், அதை உங்களால் முழுவதுமாக செய்து முடிக்க முடியுமா என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள். எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் படிப்பது சாத்தியமல்ல. எனவே, நீங்கள் படிக்க விரும்பும் படிப்புக்கு எவ்வளவு காலம் ஆகுமோ அதற்கேற்ப அனைத்துரீதியிலும் திட்டமிட்டுத்தொடங்குங்கள்.
வெற்றி காணுங்கள்: வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும், வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஒரு முக்கிய முடிவை எடுத்து அதை செயல்படுத்தும்போது பல சூழ்நிலைகளைக் கடக்கலாம். பல தடைகள் வரலாம். எனினும், புதியவற்றைக் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்று முன்னேறிச் செல்லுங்கள். வெற்றி
காணுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...