/

விமானப்படை பொதுசேர்க்கைத் தேர்வு!

பட்டம் படித்துவிட்டு இந்திய விமானப்படையில் குறுகியகால அல்லது நிரந்தர அதிகாரியாக பணியாற்ற விருப்பமா? அப்படியானால், நீங்கள் எழுத வேண்டிய தேர்வு: விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வு (ஏர்போர்ஸ் காமன் அட்மிசன்

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

ந.முத்துமணி

பட்டம் படித்துவிட்டு இந்திய விமானப்படையில் குறுகியகால அல்லது நிரந்தர அதிகாரியாக பணியாற்ற விருப்பமா? அப்படியானால், நீங்கள் எழுத வேண்டிய தேர்வு: விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வு (ஏர்போர்ஸ் காமன் அட்மிசன் டெஸ்ட்) . விமானப்படையில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகளாகப் பணியாற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வம் கொண்டு விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில், விமானப்படைக்குத் தேவையான நுண்ணறிவு மற்றும் ஆற்றல்மிகுந்தவர்களைக் கண்டறிந்து, தகுதியானவர்களை அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக இருந்து வந்தது. இந்த நோக்கத்திற்காக இந்திய விமானப்படையால் அறிமுகப்படுத்தப்பட்டது தான், விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வு.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் தான், அதிகாரிகளாகப் பணியாற்றுவதற்கான தகுதிகளை முழுமையாக மதிப்பிடும் பணியாளர் தேர்வுவாரியத்தின் (சர்வீஸ் செலக்ஷன் போர்டு) நேர்காணல் உள்ளிட்ட தேர்வுகளில் பங்கேற்க இயலும். தரைப்படை, கப்பற்படை, விமானப்படைகளுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேசிய பாதுகாப்பு அகாதெமி (நேஷனல் டிஃபென்ஸ் அகாடெமி } என்டிஏ) தேர்வு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (கம்பைன்டு டிஃபென்ஸ் சர்வீசஸ் எக்ஸôமினேசன்) நீங்கலாக, இந்தியவிமானப்படையின் பல்வேறு பணிகளுக்காக தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுவதுதான் விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வு.

விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் அல்லாத வான்களம் அல்லது தரைக்களப்பணிகளில் சேர்வதற்கு நுழைவுவாயிலாக அமைவது தான் விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வு. விமானப்படையின் தொழில்நுட்பப்பணிகளில் சேரவிரும்புவோர் கூடுதலாக பொறியியல் அறிவுத்தேர்வையும் எழுத வேண்டும். விண்ணப்பதாரரின் பொறியியல் பாடங்கள் சார்ந்த அடிப்படை அறிவைச் சோதிப்பதற்காக 50 கேள்விகள் கொண்ட 45 விநாடிகளுக்கு நடத்தப்படுவது தான் பொறியியல் அறிவுத்தேர்வாகும். விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வில் மொத்த 100 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு 300 மதிப்பெண்கள் அளிக்கப்படும். இயற்பியல், கணிதம் அல்லது பொறியியல் பாடங்களுடன் கூடிய இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் தேர்வு எழுதத் தகுதியானவர்கள். வான்களப்பணிகளுக்கு 20 முதல் 24 வயதுள்ளவர்களும், தரைக்களத் தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு 20 முதல் 26 வயதுள்ளவர்கள், திருமணமாகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள், மனைவியை இழந்தவர்கள், மணவிலக்கு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வு, ஆண்டுக்கு இரண்டுமுறை பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை முறையே நவம்பர், ஜூன் மாதங்களில் உரிய ஆவணங்களுடன் இணையவழியில் பதிவிடலாம். ஆங்கிலமொழியில் இணையவழியில்(ஆன்லைன்) தேர்வு நடத்தப்படும் விமானப்படை பொதுசேர்க்கைத்தேர்வு ஆங்கிலம், பொதுவிழிப்புணர்வு, எண்ணியல் திறன், தருக்கத்திறன் மற்றும் ராணுவத்திறன் ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டது. அவற்றை பகுதிவாரியாக அறிவோம்.

ஆங்கிலம்: ஆங்கிலமொழிப் புலமையை மதிப்பிடுவதற்காக 20 முதல் 25 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இந்த பகுதியில் புரிந்துணர்திறன், பிழை கண்டறிதல், உரிய வார்த்தைகளுடன் வாக்கியங்களை முழுமையாக்குதல், சொல்லாட்சி (இணைபொருட்சொல், எதிர்ச்சொல், ஒருசொல் மாற்றீடு), மரபுத்தொடர், சொற்றொடர் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இந்தப் பகுதியில் சிறப்பாக எழுதுவதற்கு நாளேடுகள், அவற்றின் தலையங்கங்கள், மாத, வார இதழ்கள், தருக்கவியல்சார் நூல்கள் படிப்பதை வழக்கமாக கொண்டிருப்பது நல்லபலனை தரும்.

பொதுவிழிப்புணர்வு: இந்த பகுதியில் இளங்கலைப் பட்டப்படிப்புக்கு நிகரான பொதுவிழிப்புணர்வுசார் 20 முதல் 25 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். வரலாறு, புவியியல், குடிமையியல், அரசியல், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, விளையாட்டு, நடப்புநிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்த அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது பயன் தரும். நிலையான பொது அறிவுநூல்கள், என்.சி.இ.ஆர்.டி.வெளியிட்டுள்ள நூல்கள் பயனுள்ளவையாக இருக்கும். இவற்றுடன், யூடியூப் சேனல்களில் பொது அறிவுசார் தகவல்கள் அறிவை பட்டை தீட்டுவதற்கு உதவும்.

எண்ணியல் திறன்: இந்த பகுதியில் 10 }ஆம் வகுப்பு கணிதம் தொடர்பான 18 முதல் 20 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். பதின்பகுப்பு மற்றும் பதின்ம பின்னம், காலம் மற்றும் வேலை, சராசரி, ஆதாயம் மற்றும் இழப்பு, சதவீதம், விகிதாச்சாரம் மற்றும் விகிதசமம், தனிவட்டி மற்றும் கூட்டுவட்டி, காலம் மற்றும் தூரம் போன்றவற்றின் எண்ணியல் திறனைப் பெற்றிருப்பது அவசியமாகும். கேட்கப்படும் கேள்விகள் 10 } ஆம் வகுப்புக்குரியதாக இருந்தாலும், குறைந்த நேரத்தில் கேள்விக்கு விடை காண்பது கடினமாக இருக்கும். எண்ணியல் சார்ந்த கேள்விகளைத் துரிதமாக கணக்கிட்டு விடையைக் கண்டுபிடிக்க கற்றுத்தேர்வது முக்கியமாகும். குறிப்பிட்ட நேரத்தில் விடைகாண்பதற்கு அடிக்கடி கணித கேள்விகளைச் செய்து பார்த்து பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகும். குறுகியகாலத்தில் கேள்விகளுக்கு விடைகாணும் திறனை மேம்படுத்திக் கொள்ள விமானப்படையின் https://afcat.cdac.in என்ற இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். தொடர்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் இப்பகுதியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

தருக்கத்திறன் மற்றும் ராணுவத்திறன்: மற்ற மூன்று பகுதிகளைக் காட்டிலும் தருக்கத்திறன் மற்றும் ராணுவத்திறன் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, இளங்கலை பட்டப்படிப்புக்கு நிகரான 30 முதல் 35 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். வரைபடம், உருவகத் தொடர், உருவக வகைப்படுத்தல், ஒப்புமை அல்லது செயலொற்றுமை, வாய்மொழி அல்லது சொல் வகைப்படுத்தல், இடம்சார்ந்த திறன் சோதனை, தொடர்பை நிறுவுதல், எழுத்து அல்லது சின்னங்கள் தொடர் போன்றவற்றின் கேள்விகள் கொண்டதாக இப்பகுதி இருக்கும்.
தேர்வாளர்களின் கூர்நோக்குத் திறனையும், குறிப்பிட்ட சூழலில் நுட்பமான கூறுகளை பதிந்துகொள்ளும் திறனையும், தருக்கரீதியான மற்றும் காரணங்களுடன் கூடிய அணுகுமுறைகளையும் சோதித்து அறிவதற்கு இப்பகுதியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த பகுதியில் நல்ல
மதிப்பெண்களைப் பெறுவதற்கு முந்தைய கேள்விதாள்களை பார்த்து அதன் போக்குகளை புரிந்துகொள்ளலாம்.
வழிகாட்டுதல்கள்: மொத்தமுள்ள 300 மதிப்பெண்களில் கடந்த பல ஆண்டுகளாக தகுதிகாண் மதிப்பெண்களாக 140 முதல் 150 எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றிபெறுவதோடு, பணிக்குத் தகுதி பெறுவதற்கு குறைந்தது 200 மதிப்பெண்களைப் பெற தேர்வு எழுதுபவர்கள் இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும். 10 } ஆம் வகுப்பு கணக்கு பாடத்தில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
10 ஆண்டுகளின் முந்தைய வினாத்தாள்களை எழுதி பயிற்சி பெற வேண்டும். இணையவழி மாதிரித் தேர்வுகளை எழுதிப் பழக வேண்டும். நேர மேலாண்மையை மேம்படுத்திக் கொள்ள இது உதவும். எதிர்மறை மதிப்பெண்களைத் தவிர்க்க, விடையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சராசரி மாணவர்கள் விமானப்படை பொதுசேர்க்கைத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற 3 அல்லது 4 மாதங்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள நாளிதழ்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.