பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அடுத்த என்ன? மாணவர்களின் மனதில் எழும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
கலை, அறிவியல், வணிகப்பிரிவுகளின் அடிப்படையில் பாடங்களைத் தேர்வு செய்து படித்தவர்கள், அந்தந்த பிரிவுகளில் காணக் கிடைக்கும் படிப்புகளை நாடுவது வழக்கம். அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்கள் மருத்துவம், பொறியியல் தாண்டி யோசிப்பதில்லை. வணிகப் பாடப் பிரிவில் கற்றவர்கள் பட்டயக்கணக்காளர், வங்கியியலைக் கடந்து பார்ப்பதில்லை. கலைப் பாடப்பிரிவில் பயின்றவர்கள் ஆங்கிலம், தமிழ், வரலாறு, சமூகவியலுக்கு வெளியே சிந்திப்பதில்லை. இது காலங்காலமாகக் காணப்படும் மாணவர், பெற்றோர் சிந்தனைப்போக்கு.
காலம் மாறிவிட்டது. அதற்கேற்ப புதிய வேலைத்தளங்களும் தோன்றிவிட்டன. இது கல்விக்களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மேல்நிலையில் அறிவியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்த பலர், இளங்கலையை வணிகப்பிரிவில் பயணித்தவர்கள் உண்டு. அந்த அளவுக்கு வேலைவாய்ப்பும், கல்விவாய்ப்பும் ஒன்றையொன்று விஞ்சும் அளவுக்கு மாற்றங்களுக்கு ஏற்ப வேகமாகத்
தகவமைத்து, புதிய திசையில் பயணப்பட்டு வருகின்றன.
வணிகப் பாடப்பிரிவில் படித்தவர்கள் நிதியியல், சந்தைப்படுத்தல், இணையவழி மதிப்பாய்வு, தொழில் முனைப்பாற்றல், வணிகச்சட்டம், சில்லரை வர்த்தகம், வர்த்தக மேலாண்மை, மனிதவளம், விருந்தோம்பல் போன்ற புதிய தளங்களில் நகரலாம்.
அறிவியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்கள் அடிப்படை அறிவியல், தொழில்நுட்பம், தரவு மேலாண்மை, தரவு திறனாய்வு, மனநலவியல், சூழலியல், வனவியல், விமானவியல், மாற்று மருத்துவம், இந்திய மருத்துவம், பண்ணையியல், பட்டுயியல், புள்ளியியல், நில அமைப்பியல், சுரங்கவியல், எண்ணெயியல் போன்ற எண்ணற்ற படிப்புகளைப் படிக்கலாம்.
கலைப்பாடப்பிரிவில் படித்தவர்கள் இசை, மொழியியல், ஊடகவியல், சமூகப்பணியியல், சிறப்பு சட்டவியல், விளையாட்டு, உடற்கல்வி, துகிலியல், ஊடக உற்பத்தி, இணையநுட்பம், உள் அலங்காரம், விளம்பரவியல், எண்ம சந்தைப்படுத்தல், திரைப்படவியல், கணினி வரைவியல் போன்ற ஏராளமான படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
வேலைச்சந்தையில் வாய்ப்புகளைத் தரும் வேலைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதற்கேற்ப படிப்புகளையும் தேர்ந்தெடுப்பது நல்ல எதிர்காலத்தை வடிவமைக்க உதவியாக இருக்கும். ஒருசில துறைசார் வேலைவாய்ப்புகளைக் காணலாம்.
துகில் நுட்பவியல்:
வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த துகில் நுட்பவியல் தற்போது இந்தியாவில் சக்கைப் போடு போடுகிறது. ஆடை அலங்காரம் இளம் தலைமுறையின் அங்கமாகிவிட்டதால், புதியன அணிதல் நோக்கில் பண்டிகைக்கொரு விதமாக வகைவகையான ஆடைகள் சந்தையில் குவிகின்றன. இந்தத் துறைக்கு தகுதியானவர்களைத் தயார்ப்படுத்துவதற்காகவே துகில் நுட்பவியல் (ஃபேஷன் டெக்னாலஜி) மையங்களை மத்திய அரசு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியுள்ளது. தனியார் கல்லூரிகளும் ஃபேஷன் டெக்னாலஜி பயிற்சியை அளித்து வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. படைப்பாற்றல், ஓவியக் கலையாற்றல், ஆடை அணிகலன்களில் தீராத ஆர்வம், புதிய உடுத்தல், புத்தாக்க மனப்பான்மை இருந்துவிட்டால் உங்களுக்குப் பொருத்தமானது துகிலியல்துறைதான்.
பயணம் மற்றும் சுற்றுலா:
பயணங்களில் அதீத ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏற்றது. பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான கல்வி. எம்.பி.ஏ. கனவுகளோடு பிபிஏ, பிபிஎம் படிக்கும் வணிகப் பிரிவு மாணவர்கள், பி.காம் (பயணம் மற்றும் சுற்றுலா) படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். உணவக மேலாண்மை, விருந்தோம்பல் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதால், பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மைப் படிப்புகளை நாடலாம்.
ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல்:
வாழ்க்கைமுறை மாற்றங்களால் புதிதாக உருவாகியுள்ளதே ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் துறையாகும். சோம்பல் நிறைந்த வாழ்க்கையால் உடல்சார்ந்த நோய்கள், உடல்நலிவுகள் அதிகமாக வருவதால் உணவுக்கட்டுப்பாடு, உடல்கட்டுமானம் குறித்தவிழிப்புணர்வு அதிகரித்து வருவதால், அதுசார்ந்த நிபுணர்களின் தேவையும் பெருகிவருகிறது. உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள என்ன, எப்படி,எப்போது சாப்பிட வேண்டுமென்பதை வழிகாட்டுவதே இதன் அடிப்படைவேலையாகும். உடல்நலனில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் நிபுணர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அத்தியாவசியமாகியுள்ளது.
இதுதொடர்பான கல்விக்கு முக்கியத்துவத்தை தந்துள்ளன. மரபியல், உயிரிதொழில்நுட்பத்துடன் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் படிப்புகளைப் படித்தால் மருத்துவமனைகள், பராமரிப்பு மையங்கள், சிகிச்சையகங்கள், விளையாட்டுக்கூடங்கள், உடற்கட்டு மையங்கள், உணவுத் தொழிலகங்கள், ஆராய்ச்சி மையங்களில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
வர்த்தக விமானிகள்:
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் வேகமாக விரிவடைந்துள்ள துறைகளில் முக்கியமானது வர்த்தக விமானங்கள் தொழிலாகும். பெருநகரங்கள் மட்டுமல்லாது, மாவட்ட தலைநகரங்கள், முக்கிய தொழில்நகரங்களில் விமான சேவை குறிப்பாக சிறிய விமானசேவை தொடங்கப்பட்டுள்ளன. இது வர்த்தக விமானிகளுக்கான தேவையைப் பெருக்கியுள்ளது. போட்டி நிறைந்த பயணிகள் விமானத்துறையில் கைநிறைய வாய்ப்புகள் காத்திருப்பதால், வர்த்தக விமானி உரிமம் பெற பயிலலாம்.
பன்னிரண்டாம் வகுப்பில் வேதியியல், கணிதம் படித்திருப்பது அவசியம். 18 வயது நிரம்பியிருக்கவேண்டும். 200 மணிநேரம் விமானத்தை இயக்கிய பயிற்சி இருந்தால், எழுத்துத்தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்தால் வர்த்தக விமானி உரிமத்தைப் பெறலாம். அதற்கு பிஎஸ்சி விமானவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.
ஊடகவியல்:
காட்சி ஊடகம் மட்டுமல்லாது இணைய ஊடகங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், ஊடகவியல் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. விளம்பரவியல், சந்தைப்படுத்தல், ஊடக உற்பத்தி தவிர ஏராளமான வாய்ப்புகள் ஊடகத்தில் உள்ளன. ஊடகவியலாளராக வேலை செய்வதில் ஆர்வமிருந்தாலும் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. இணையவழி வானொலிக்கு அண்மைக் காலமாக நல்ல மவுசு இருப்பதால், அதிலும் புதிய வாய்ப்புகள் தென்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

சிவகங்கை தொகுதியில் ஜனநாயகக் கடமையாற்றிய வேட்பாளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


