இளைய பாரதமே...எழுக!-28: அப்பழுக்கற்ற நேர்மையுடன் இருங்கள்!
1800இல் நடந்த " கோவைப் புரட்சி' தென்னிந்தியாவிலிருந்த பாளையக்காரர்களும், குறுநில மன்னர்களும், போர்வீரர்களும், பொதுமக்களும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக களமிறங்கிய புரட்சியாகும்.


1800இல் நடந்த " கோவைப் புரட்சி' தென்னிந்தியாவிலிருந்த பாளையக்காரர்களும், குறுநில மன்னர்களும், போர்வீரர்களும், பொதுமக்களும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக களமிறங்கிய புரட்சியாகும்.
தமிழகத்திலும் தென்னிந்தியப் பகுதிகளிலும் புரட்சிக்குழுக்கள் தன்னெழுச்சியாக உருவெடுத்தன. கோயம்புத்தூர் கோட்டையில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் படையை அழிப்பதுதான் இப்புரட்சியின் நோக்கமாக இருந்தது. இப்புரட்சி தோல்வியில் முடிந்தது.
1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக வேலூர்க் கோட்டையில் தங்கியிருந்த சிப்பாய்கள் ஒரு புரட்சியை நடத்தினர். ஆங்கிலேய படைத்தளபதிகள் இந்தியச் சிப்பாய்களின் சீருடையில் சில மாற்றங்கள் கொண்டு வந்ததை எதிர்த்து இப் புரட்சி நடைபெற்றது. புதிய தலைப்பாகையை ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது. அதில் பன்றிக்கொழுப்பு தடவப்பட்டுள்ளதென்றும், பசுவின் கொழுப்பு தடவப்பட்டுள்ளதென்றும் வதந்திகள் பரவின. இந்துச் சிப்பாய்கள் நாமம், திருநீறு போன்ற மதக்குறிகளுடன் இருக்கக்கூடாதென்றும் காதுகளில் கடுக்கன்கள் அணியக் கூடாதென்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் தங்களுக்கே உரியமுறையில் தாடி வைத்திருக்கக் கூடாது என்றும் முற்றிலும் மழித்திருக்கவேண்டுமென்றும் ஆங்கிலேய தளபதிகள் உத்தரவுகள் வெளியிட்டனர்.
இதற்கெதிராக இந்து, இஸ்லாமியச் சிப்பாய்கள் வெகுண்டெழுந்து புரட்சியில் ஈடுபட்டனர். இப்புரட்சியின்போது பொதுமக்கள் புரட்சியாளர்களான சிப்பாய்களுக்கு கிராமங்கள் தோறும் ஆதரவளித்தனர். இப்புரட்சியும் வெற்றி பெறவில்லை.
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி நாடு முழுவதிலுமுள்ள நாட்டுப்பற்றுக் கொண்ட இளைஞர்களைத் தட்டியெழுப்பியது. புரட்சி தோல்வியடைந்தாலும் நாடுமுழுக்க ஒரு தேசபக்தப் பேரெழுச்சியை உருவாக்குவதில் இப்புரட்சி பெரும் வெற்றி பெற்றது.
இத்தகைய புரட்சிகளுக்கு முன்னும் பின்னும் ஆங்கிலேய ஆட்சியினருக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளில் பலரும் வீரமிக்க போராட்டங்களில் ஈடுபட்டு அந்தமான் உட்பட இந்தியாவின் பல சிறைகளில் அடைக்கப்பட்டு கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையாக்கப்பட்டனர். சிலர் நடுரோட்டில் அடித்தே கொல்லப்பட்டனர்.
ஆங்கிலேய ஆட்சி உச்சகட்ட அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட காலத்தில் அத்தகைய ஆட்சிக்கெதிராக தன்னெழுச்சியாகத் திரண்டெழுந்த மக்களை ஆற்றுப்படுத்தவும், ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து அடக்கிவைக்கவும், ஆட்சிக்கெதிரான மக்களின் முணுமுணுப்பு, ஒருபெரும் முழக்கமாக முற்றிவிடாமல் முளையிலேயே முறியடிக்கவும், சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அன்றைய ஆட்சியாளர்கள் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்தக் காலகட்டத்தில்தான் 1885 ஆம் ஆண்டு பம்பாய் மாநகரில் ஆட்டோவான் ஹ்யூம் என்ற ஆங்கிலேயர் தலைமையில் எழுபத்தைந்து ஆங்கிலம் அறிந்த பட்டதாரிகள் ஒன்றிணைந்து இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தனர். இதில் பலர் கற்றறிந்த தேசபக்தர்களாக விளங்கினாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தனித்துவம் மிக்க முத்திரை பதித்தவர்களாகத் திகழ்ந்தாலும், அவர்கள் நடத்துகிற கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஆங்கிலேய ஆட்சியின் மாண்பைப் பாராட்டியும் , பிரிட்டிஷ் மகாராணி உள்ளிட்ட ஆங்கிலேய மன்னர் பரம்பரையை வாழ்த்தியும் சில வரிகளை முன்னுரையாக எழுதிய பின்னர்தான் இந்தியர்களுக்கு அதிக சலுகை கேட்கும் தீர்மானங்களையே இயற்ற முடிந்தது .
ஆண்டுக்கொருமுறை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் " இன்னும் சில வசதிகள் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்', "இந்தியர்களுக்கு அரசுப்பணிகள் சில ஒதுக்கப்படவேண்டும்' போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவையனைத்தும் ஆங்கிலேயர் ஹ்யூம் மூலம் அன்றைய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அத்தகைய தீர்மானங்களில் காணப்படும் வாசகங்கள் கூட கோரிக்கை வடிவத்திலில்லாமல், வேண்டுதல் முறையில் இருக்கவேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் அக்காலத்தில் இருந்தது .
அரசின் அராஜகமும் மக்களின் அவநம்பிக்கையும் தலைவிரித்தாடிய இத்தகைய இருண்ட அரசியல் காலகட்டத்தில்தான் விவேகானந்தரின் ஆன்மீகப் பயணம் தொடங்கியது.
உலகெங்கும் விடுதலைக்குப் போராடிய நாடுகளுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தது 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியாகும்.
இப்புரட்சியின் ஒத்திகை போல் 1905 ஆம் ஆண்டு முதல் ரஷ்யப் புரட்சி நடைபெற்றது. அது தோல்வியில் முடிந்தது. ஆயினும் அப்புரட்சியின் தாக்கம் பல நாடுகளில் பிரதிபலித்தது. அத்தகைய புரட்சி தோன்றுவதற்கு முன்பு விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டே இறந்துவிட்டார்.
இவ்வாறான இந்திய மற்றும் அயலக வரலாற்றுச் சூழல்களையும் இணைத்து ஆய்வு செய்கிற போதுதான் விவேகானந்தரின் தனித்தன்மை வெளிப்படுகிறது.
ஓர் அரசியல் அமைப்பு தோன்றி நேரடியாக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து முனைப்பான தீர்மானங்கள் கூட நிறைவேற்றமுடியாத சூழல் நிலவிய காலகட்டத்தில், உலகமெங்கும் விழிக்கச்செய்த முதலாம் ரஷ்யப் புரட்சியின் சுவடு தெரியாத சூழலில், விவேகானந்தர் தனது ஆன்மிகப் பயணத்தின் ஊடே ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக இந்திய இளைஞர்களை தட்டியெழுப்பியது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
அவருடைய வீரியம் மிக்க சில கருத்துக்களுக்கு எந்த அளவுக்கு சிறப்புத் தன்மை இருந்ததோ, அதே அளவுக்கு அக்கருத்தைச் சொல்லும் விதத்திலும் அவரிடம் தனித்தன்மை வாய்த்திருந்தது.
""மரணத்தை நேசிப்பது என்றால் என்ன? நாம் இறந்தே தீரவேண்டும். அது உறுதி. அப்படியானால் ஒரு நல்ல இலட்சியத்திற்காக இறப்போம். நமது செயல்கள் எல்லாம், உண்பது உடுப்பது என்று நாம் செய்கின்ற அனைத்தும், நமது ஆன்ம தியாகத்திற்கு நம்மை இட்டுச் செல்வதாக இருக்கட்டும். சாப்பிட்டு உடலை வளர்க்கிறோம். பிறரது நன்மைக்காகத் தியாகம் செய்வதற்கு அது இல்லையென்றால் அதைப் போற்றி வளர்ப்பதில் என்ன பயன்? புத்தகங்களைப் படிப்பதன் மூலம் மனதைப் பண்படுத்துகிறோம். ஆனால் அதையும் உலகின் சேவைக்காகப் பயன்படுத்தாவிடில் பயன் ஒன்றுமில்லை. சுயநலத்தை வளர்ப்பதைவிட உங்கள் லட்சக்கணக்கான சகோதரர்களுக்குச் சேவை செய்வதே செய்யத்தக்கது'' பேலூர் மடத்திலாற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தர்.
அதே உரையில், ""இவ்வாறு படிப்படியாக நீ இறக்கவேண்டும். இத்தகைய மரணத்தில் சொர்க்கம் உள்ளது. எல்லா நன்மைகளும் நிறைந்துள்ளது. இதற்கு எதிர்மாறான மரணம், அனைத்து அமங்கலங்களும் தீமைகளும் நிறைந்தது'' என்று மரணத்திற்குப் புது விளக்கமளித்தார் விவேகானந்தர்.
""நாம் எல்லாரும் சமம். பரம்பொருளுடன் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசுகிறோம். இதில் அணுவளவுகூட செயல்முறையில் இல்லை. "ஆனால் நண்பர்களே ! என்ன இருந்தாலும் அது மனதளவில் இருக்கவேண்டுமே தவிர செயல்முறையில் கடைபிடிக்க முடியாது' என்று இதில் உபதேசம் வேறு ! இந்தக் கறையை அழியுங்கள். "எழுந்திருங்கள், விழித்திருங்கள்; இந்த அற்ப வாழ்க்கை போனால்தான் என்ன ? தூயவன், தீயவன், பணக்காரன், ஏழை என்று ஒருவர் விடாமல் அனைவரும் இறக்கத்தான் வேண்டும். அப்பழுக்கற்ற நேர்மையுடன் இருங்கள். இந்தியாவில் நேர்மையின்மை என்பது பயங்கரமாக இருக்கிறது. நமக்கு வேண்டியது நற்பண்பு'' என்று தனது லாகூர் உரையில் குறிப்பிட்டுளார் விவேகானந்தர்.
""தைரியமான சொற்கள், மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள், வீரர்களாக்கும் கொள்கைகள் இவையே நமக்கு இப்போது வேண்டும். பாரதமாதாவின் நன்மைக்காக அவருடைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன்
இப்போது இந்தியாவுக்கு என்ன வேண்டும்? தியாகத்தோடு கூடிய குறைந்தபட்சம் ஆயிரம் இளைஞர்களே வேண்டும்; மூடர்கள் அல்ல. வீரமனிதர்கள், சுயநலமற்றவர்கள். எடுத்த காரியங்களைச் சிறப்பாக சாதித்து முடிக்கக் கூடியவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்களே இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுகிறார்கள்.
நாட்டின் பொன்னான எதிர்காலமே உங்களைத்தான் சார்ந்திருக்கிறது. நாட்டின் வருங்கால நம்பிக்கைகள் உங்களையே எதிர்நோக்கியுள்ளன. எனவே செயலாற்று வாழ்க்கையை வீணாகக் கழித்துகொண்டிருக்கிற உங்களைப் பார்க்கும்போது என்மனம் சொல்ல முடியாத வேதனைப்படுகிறது. உழைப்பில், உயரிய உழைப்பில் ஈடுபடுவீர்களாக ! இதில்தாமதம் சிறிதும் வேண்டாம்''
- இவையும், இளைஞர்களை களத்தில் இறக்குகிற இவைபோன்ற ஏராளமான அனல்பறக்கும் வித்தியாசமான கருத்துக்களையும் அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் விவேகானந்தர்.
""உலகிலுள்ள எல்லாத் தெய்வங்களிடமும் கதறினீர்கள். துன்பம் தீர்ந்ததா ? இந்தியர்கள் ஆறு கோடி தெய்வங்களை நோக்கிக் கதறுகின்றனர். என்றாலும் நாய்களைப்போல்தான் சாகின்றனர். இந்தத் தெய்வங்கள் எங்கே இருக்கின்றனர்? நீங்கள் வெற்றி பெற்றால் அதன்பின் தெய்வங்கள் உங்களுக்கு உதவி செய்ய வருகின்றனர். அதனால் என்ன பயன்? இன்பமாக உயிர் விடுங்கள். மூட நம்பிக்கைகளுக்கு மண்டியிடுவது என் உயிருக்கு உயிராகிய உங்களுக்குத் தகாது. நீங்கள் எல்லையற்றவர்கள். மரணமற்றவர்கள். பிறப்பற்றவர்கள். நீங்கள் எல்லையற்ற ஆன்மா. அடிமையாயிருப்பது உங்களுக்குப் பொருந்தாது. எழுந்திருங்கள் ! விழித்திருங்கள்'' என்று அடிமைத்தனத்திற்கெதிராக ஆர்த்தெழுமாறு இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் விவேகானந்தர்.
விவேகானந்தரின் அணுகுமுறையும் பார்வையும் மன்னர்களையும் சமூக செல்வாக்கு மிக்கவர்களையும் மையமாகக் கொள்ளாமல் ஒட்டுமொத்தமான மக்களையும் குறிப்பாக , சாதாரண பாமர மக்கள் அனைவரையும் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவதாக அமைந்தது.
முன்பு நடைபெற்ற புரட்சிகளும் போராட்டங்களும் உருவாக்கிய தாக்கம், உள்நாட்டில் மக்களோடு மக்களாக உலவி மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்ட பாங்கு, ஆண்டுக்கணக்காக தேடல் உணர்வோடு மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள், நல்லவை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ளவேண்டுமென்ற விசாலமான சிந்தனை, பத்தாம் பசலித்தனமான பழைய பழக்க வழக்கங்களுக்கெதிரான புதிய பார்வை போன்றவை ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருந்த விவேகானந்தர் அரசியல் மாற்றத்திற்காகப் போராடிய இளைஞர்களும் கையிலெடுக்கத்தக்க கருத்துக்களைச் சொல்வதற்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன.
"போராட்டங்கள்தான் வாழ்க்கையின் அடையாளம்' என்று சொன்ன விவேகானந்தர் இன்னொரு கட்டத்தில் இவ்வரியை சற்று விளக்கி, ""போராட்டம்தான் ஒருவன் பெறும் பெரிய படிப்பினை. இந்த வாழ்க்கையில் நாம் பெறும் பெரிய நன்மை இந்தப் போராட்டப் பயிற்சியே. போராட்டத்தின் வழியாகவே நாம் செல்லவேண்டும். சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்குமானால் அது நரகத்தின் வழியாகவே இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
விவேகானந்தரின் இதுபோன்ற கருத்துக்களை ஊன்றி வாசிக்கிற எவருக்கும் அநீதியை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற எண்ணம் உருவாகுமல்லாவா? அதுதான் சுதந்திரப் போராட்டத்திலும் நடந்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...