/

இளைய பாரதமே...எழுக!-25: சுயநலமின்மையே நல்லொழுக்கம்!

தன்னம்பிக்கை' பற்றி பலரும் , பலவாறு , பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். "முன்னேறுவதற்கு மூன்றே வழிகள்' என்றும் " கோடீஸ்வரர் ஆவது எப்படி?' என்றும் குறுக்கு வழிகளைச் சொல்லித்தரும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:13 pm

த. ஸ்டாலின் குணசேகரன்

தன்னம்பிக்கை' பற்றி பலரும் , பலவாறு , பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். "முன்னேறுவதற்கு மூன்றே வழிகள்' என்றும் " கோடீஸ்வரர் ஆவது எப்படி?' என்றும் குறுக்கு வழிகளைச் சொல்லித்தரும் தலைப்புகளில் புற்றீசலைப் போல ஏராளமான நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்தவண்ணம் உள்ளன. இவற்றுள் பலர் எழுதிய கருத்துகள் மிகவும் மேலோட்டமானதாகவும் செயற்கையான செய்திகளை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றன. சிலரின் தன்னம்பிக்கை எழுத்துகள் மட்டுமே இளைஞர்களைத் தட்டியெழுப்பும் தகுதிமிக்கவையாகத் திகழ்கின்றன.
விவேகானந்தரின் தன்னம்பிக்கைக் கருத்துகள் மிகவும் வித்தியாசமானவை. அசலானவை. ஆழமானவை. சொல்லும் கருத்துகளும், சொல்லும் விதமும் உண்மையானவை என்பதால் அவை உயிரோட்டமாக விளங்குவதுடன், படிப்பவரின் நெஞ்சில் ஒரு தாக்கத்தை உருவாக்கும் வலிமை மிக்கவையாகவும் திகழ்கின்றன. 
"உலக வரலாறு என்பது தன்னம்பிக்கையுடைய சிலரின் வரலாறே. அத்தகைய தன்னம்பிக்கை நம்முள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துகிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எல்லையற்ற ஆற்றல் வெளிப்படும் அளவுக்கு நீங்கள் முயலாதபோதுதான் தோல்வியடைகிறீர்கள். தன்னம்பிக்கையை இழக்கின்ற அந்தக்கணமே ஒருவன் அழிகிறான்; ஒரு நாடும் அவ்வாறே என்று வரலாற்றுடன் தன்னம்பிக்கையை இணைத்ததோடு தனிமனிதனின் வளர்ச்சிக்கானது மட்டுமல்ல தன்னம்பிக்கை; ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அதுதான் அடிப்படை' என்று சமுதாயக் கண்ணோட்டத்துடன் விளக்கமளிக்கிறார் விவேகானந்தர்.
"முயலாதபோதுதான் தோல்வியடைகிறீர்கள்' என்ற ஒருவரி நமக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்கிறது.
"நமது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது ஏதோ ஒன்றல்ல, யாரோ ஒருவரல்ல, நம்முடைய முயற்சியின்மைதான் முழுமுதல் காரணம்' என்று அழுத்தமாகத் தெரிவிக்கிறார் விவேகானந்தர்.
"என் இளைய நண்பர்களே! வலிமை பெறுங்கள். இதுவே நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதை விட கால்பந்தாடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும். இவை தைரியமான வார்த்தைகள். இருப்பினும் இவற்றை நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். பிரச்னை எங்கு என்பது எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. உங்கள் கை, கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்' என்று வலிமைக்குப் புதுவிளக்கம் அளித்துள்ளார் விவேகானந்தர்.
நம்பிக்கையை நாட்டுப்பற்றோடு இணைப்பதும் , நாட்டுப்பற்றை சமூகக் கண்ணோட்டத்தோடு கலப்பதும் விவேகானந்தரின் தனித்தன்மையாகும்.
"நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல. ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்களாவதற்கு இது தருணம் அல்ல. மென்மை, மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி
விட்டோம். பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு இப்போது வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகிலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும், ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால், அதற்காகக் கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகச் சந்திக்கக் கூடிய மகத்தான, சக்திவாய்ந்த, யாராலும் தடுக்க முடியாததான சங்கல்பமும்தான் நமக்கு இப்போது தேவை'' என்று 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர்.
அதே சொற்பொழிவில், ""வருவோரும் போவோருமான, விரல்விட்டு எண்ணக்கூடிய அந்நியர் சிலர் , முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மிதித்து அரசாளக் காரணம் என்ன ? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தது, நமக்கு இல்லை. மேலை நாட்டில் நான் என்ன கற்றுக் கொண்டேன் ? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பதுதான் எனக்குத் தெரிந்தது. " நான் ஆங்கிலேயன்; என்னால் எதையும் செய்ய முடியும்' என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான். அமெரிக்கச் சிறுவனும் அதையே சொல்வான். ஐரோப்பாவிலுள்ள எந்தச்சிறுவனும் இதையேதான் சொல்வான். ஆனால், இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் ? அவர்களின் தந்தையரே சொல்லமாட்டார்கள். நாம் தன்னம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று இந்தியர்கள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டதற்கு முதல் காரணமே தன்னம்பிக்கையில்லாததுதான்'' என்று கூறியுள்ளார் விவேகானந்தர்.
விவேகானந்தருக்கு முன்னும் பின்னும் இதே ஆன்மிகத் துறையில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஒரு மனிதனின் வளர்ச்சிக்கான காரணங்களை விவேகானந்தரைப்போல் அழுத்தமாகவும் அதே சமயத்தில் யதார்த்தமாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் கூறியவர்கள் எத்தனைபேர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 
""அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் வாழ்வியல் நடைமுறைச் சிந்தனையும் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கையைப்பற்றி விதவிதமான கருத்துக்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் விவேகானந்தரைப்போல் அழுத்தம் கொடுத்து வெளிப்படுத்த முடியும்.
நான் அனுபவிக்கும் இந்தத் துன்பத்திற்கு நானே காரணம் .
ஆகவே நானேதான் இதற்குப் பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் படைத்ததை நானே அழிக்க முடியும். ஆகவே எழுந்திருங்கள், உறுதியுடனும் தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்துகொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்ற வலிமையும் உதவியும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன'' என்று கூறியுள்ளார் விவேகானந்தர்.
""உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களைக் குறித்து அவமானப்படாதீர்கள். அதற்குப் பதிலாகப் பெருமைப்படுங்கள். ஒருபோதும் போலித்தனமாக நடிக்காதீர்கள். நீங்கள் பிறருடைய கையசைவிற்குக் கட்டுப்பட்டு இருக்கும்வரை உங்கள் சுதந்திரத்தை இழக்கிறீர்கள். ஆன்மிக விஷயத்தில் கூட மற்றவர்களின் கட்டளைக்குப் பணிந்து நீங்கள் செய்யும் வரை சிறிது சிறிதாக உங்கள் சிந்தனைத் திறனை இழந்து விடுகிறீர்கள். உங்கள் உள்ளத்திலிருப்பதை , உங்கள் சொந்த உழைப்பின் மூலம் வெளியே கொண்டு வாருங்கள். உங்களை எப்படி உருவாக்கிக் கொள்ள முடியுமோ , அப்படி உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிறரைக் காப்பியடிக்காதீர்கள். எனினும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். பிறரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள மறுப்பவன் செத்தவனே'' என்ற விவேகானந்தரின் உரைப் பகுதியிலிருந்து ஒரு முழு மனிதனை உருவாக்குவதற்கான சூத்திரமே உள்ளடங்கியிருப்பதை நம்மால் உணர முடிகிறது.
""காப்பியடித்தல் தற்கொலைக்குச் சமமானது. பிறருடைய பேச்சுப்பாணி நமக்கு வர வேண்டும். பிறர் எழுதுகிற அதே முறையில் நாமும் எழுத வேண்டும், பிறரைப் போலவே நாமும் உடையணிய வேண்டும் , அவரைப் போலவே நானும் முடியலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயல்படும் எத்தனையோ பேரைப் பார்க்க முடிகிறது. வெற்றியாளரைப் பார்த்து அப்படியே செய்யத் தொடங்கிய பலரும் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் பிறரின் உழைப்பைப் பார்த்து தானும் உழைக்க வேண்டுமென்று சிந்தித்து, தனக்கென இயல்பாக வரும் பாணியில் வெவ்வேறு துறைகளானாலும் உழைத்தவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு தன்னுடைய இயல்புக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு அவற்றை நடைமுறைப்படுத்துபவர்கள் பெறும் வெற்றி உண்மையானது மட்டுமல்ல, நிலைத்து நிற்கக்கூடியதுமாகும். பிறரிடம் கற்றுக்கொள்ள மறுப்பவன் செத்தவனே'' என்ற விவேகானந்தரின் முத்தாய்ப்பான வரி மனிதனின் மனம் எத்தகைய விசாலமானதாக இருக்கவேண்டும் என்பதையும் , "தான்' என்கிற அகங்காரம் கூடாது என்பதையும் , தனக்குத்தான் தெரியும் மற்றவர்களுக்குத் தெரியாது என்ற "அகந்தை' கூடவே கூடாது என்பதையும் , எளியவர்களிடமிருந்து கூட கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன என்பதையும் உணர்த்துகிறது.
கற்றுக் கொடுப்பதையும் கற்றுக் கொள்வதையும் வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் வலியுறுத்துகிறார் விவேகானந்தர். 
"இதைத்தான் கற்றுக் கொள்ளவேன்டும்' என்று கூட இந்த உரைப் பகுதியில் விவேகானந்தர் சொல்லவில்லை. கற்றுக் கொள்பவரின் முன்னேற்றத்திற்கும் அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் எவையெல்லாம் ஏற்புடையனவோ, அவற்றையெல்லாம் பிறரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதே விவேகானந்தரின் நோக்கமாக இருந்துள்ளது என்பதை இவரின் பல உரைகளின் மூலமும் எழுத்துக்
களின் வாயிலாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.
தனக்காக மட்டும் சிந்திப்பவர்களை சிறந்த தன்னம்பிக்கையாளர்களாக விவேகானந்தர் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. தனக்காகவும் தன்னை வளர்த்தெடுத்த இச்சமூகத்திற்காகவும் சிந்திப்பவர்களையே சிறந்த தன்னம்பிக்கையாளர்களாக கருதியிருக்கிறார் விவேகானந்தர்.
""ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு . நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல். ஏ... கோழையே ! முட்டாள்தனமாக என்ன பேசுகிறாய் ? இப்படி "முடியாது முடியாது' என்று அழுது அழுதுதான் இந்த நாட்டையே நீங்கள் நாசமாக்கி விட்டீர்கள். மனித முயற்சியால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது ?
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எண்ணத்தில் ஏற்படும் தீமைகள் முதலிய எல்லாத் தீமைகளோடும் போரிட்டுக் கொண்டே இரு. இப்படி எதிர்ப்பதில் நீ வெற்றி பெற்ற பிறகுதான் அமைதி உன்னைத் தேடிவரும்'.
இவை போன்ற எண்ணற்ற வைரவரிகள் விவேகானந்தரின் கீர்த்திமிக்க உரைகளிலிருந்தும் , நேர்த்திமிக்க கடிதங்களிலிருந்தும் தெறித்து விழுவதை அவரின் உரைகளையும் எழுத்துக்களையும் உன்னிப்பாக கவனிப்பவர்களால் உணர
முடியும்.
எல்லா நதிகளும் கடலில் கலப்பதுபோல விவேகானந்தரின் எல்லாச் சிந்தனைகளும் கடைசியில் பொதுநலத்தோடு பொருத்தப்படுவதை கொஞ்சம் சிரத்தையெடுத்துப் படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.
""சுயநலமே ஒழுக்கக்கேடு ; சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணமாகும்'' என்று ஒழுக்கத்திற்கு அர்த்தம் கூறியுள்ளார் விவேகானந்தர். 
ஆம்... தன்னலமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.