இளைய பாரதமே...எழுக!-19: அன்பே வாழ்வின் சட்டம்!
ஆகா... ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உருவாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரததேசத்தை உருவாக்கியவர்களில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர்'' என்று தனது கட்டுரையொன்றில் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.


ஆகா... ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உருவாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரததேசத்தை உருவாக்கியவர்களில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர்'' என்று தனது கட்டுரையொன்றில் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.
விவேகானந்தரின் கருத்துகளை முழுவதுமாகக் கற்றுணர்ந்தால், அவற்றுள் பெரும்பான்மையான கருத்துகள் மகாகவி பாரதியாரிடம் பிரதிபலிப்பதை நம்மால் உணரமுடியும். விவேகானந்தரின் கருத்துகளைப் பிழிந்து மையாக்கி அதனை பாரதி தனது பேனாவில் ஊற்றி எழுதியது போன்றே பாரதியின் சில கவிதைகளும் கட்டுரைகளும் காணப்படுகின்றன.
விவேகானந்தரின் தாக்கம் பாரதியிடம் வலுவாகக் காணப்பட்டது உண்மையேயானாலும் இருவரின் இயல்பான பிறவி மேதைமையும் இவற்றிற்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதிலும் சந்தேகமில்லை. இந்த அடிப்படையில் விவேகானந்தரையும் பாரதியையும் தனித்தனியாக ஆய்வு செய்தும், பின்னர் இணைத்தும் ஒப்பிட்டும் ஆய்வு செய்தும் பார்த்தால், இருவருக்குமே தனித்தனிச் சிறப்பம்சங்கள் இருப்பதையும், அதேசமயத்தில் விவேகானந்தரின் தாக்கமும் செல்வாக்கும் பாரதியின் படைப்புகள் சிலவற்றில் படிந்திருப்பதையும் உணர்ந்து கொள்ள இயலும்.
தனக்கு இயற்கையாகவே அமையப்பெற்ற தனித்திறமைகளைக் கூட சமுதாயத்தின் கொடை என்று சித்திரித்து மகிழும் மாண்பும் பண்பும் பாரதியிடம் இருந்துள்ளதை நுட்பமாகப் பார்த்தால் நம்மால் அதை உணர்ந்து கொள்ள முடியும். பிற ஆளுமைகளைப் பற்றியும் படைப்பாளிகளைப் பற்றியும் விதந்தோதும் பெருந்தன்மையும் விசால மனப்பான்மையும் அமையப்பெற்றவர் மகாகவி பாரதி.
தனது சமகாலத்தில் வாழ்ந்த, தமிழகத்திற்குக் கூட வருகை புரியும் வாய்ப்பினையும் பெற்றிருந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தன்னைப் பற்றிப் பெயரளவிற்குக் கூடத் தெரிந்திருக்கவில்லை என்பதை அறிந்திருந்தும் தாகூரைக் கொண்டாடி மகிழ்ந்த பண்பாளன் பாரதி. இப்படி எத்தனையோ உதாரணங்களை பாரதியின் வாழ்க்கையிலிருந்தும் படைப்புகளிலிருந்தும் எடுத்துக் கூற இயலும்.
விவேகானந்தர் கருத்துகளின் தாக்கம் பாரதியிடம் வலுவாகக் காணப்பட்டது உண்மையென்றாலும், பாரதிக்கு இயல்பாகவே அமையப்பெற்ற விசால மனதும், நற்பண்பும் கூட விவேகானந்தரைத் தமிழ் வாசகர்களுக்கு உணர்வுப்பூர்வமாக எடுத்தியம்புவதற்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன.
1902-ஆம் ஆண்டு தனது 20-ஆவது வயதில், பாரதியார் எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அவருக்கு மன்னரால் வழங்கப்பட்ட பணிகளில் ஒன்று வேதாந்த நூல்களை ஆராய்வதாகும். அத்தகைய பணி நிமித்தமாக வேதநூல்களை ஆய்வு செய்த பாரதிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோரின் கருத்துகள் பரிச்சயமாயின.
1903-ஆம் ஆண்டே எட்டயபுரம் சமஸ்தானத்துப் பணியினை விட்டு விலகி மதுரை சேதுபதி பள்ளியில் தற்காலிகத் தமிழாசிரியராகப் பணி நியமனம் பெற்றார் பாரதி. மதுரையில் செயல்பட்டு வந்த "நச்சினார்க்கினியர் தமிழ்ச்சங்கம்' என்ற அமைப்புடன் பாரதிக்குத் தொடர்பு ஏற்பட்டது. அச்சங்கத்தைச் சேர்ந்த மதுரை நேடிவ் கல்லூரித் தமிழாசிரியர் புலவர் கோபாலகிருட்டிண ஐயர் மன்னர் பாஸ்கர சேதுபதியுடன் பாம்பனில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய விவேகானந்தரை வரவேற்றவர்.
புலவர் கோபாலகிருட்டிண ஐயருக்கும் பாரதிக்கும் நச்சினார்க்கினியர் தமிழ்ச்சங்கத்தின் மூலம் நல்ல நட்பு ஏற்பட்டதால் அவர் மூலம் விவேகானந்தரைப் பற்றி ஏராளமாகத் தெரிந்துகொள்ள பாரதிக்கு வாய்ப்புக் கிடைத்தது.
எட்டயபுரத்துக் கவிஞர் பாரதியின் தனிச்சிறப்பையும் ஆளுமையையும் மதுரைத் தமிழறிஞர் கோபாலகிருட்டிண ஐயர் நன்கு உணர்ந்து கொண்ட நிலையில் அவரின் நண்பரான சென்னை "சுதேசமித்திரன்' இதழின் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு பாரதியை அறிமுகப்படுத்தினார். ஜி.சுப்பிரமணிய ஐயரும் பாரதியின் தகுதியை உணர்ந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று "சுதேசமித்திரன்' இதழின் துணையாசிரியராக நியமித்தார்.
இதழியல் பணிக்காக சென்னை சென்ற நிகழ்வுதான் பாரதியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. "சுதேசமித்திரன்' இதழில் நாட்டுநடப்புகளைக் கூர்ந்து கவனித்து அவற்றை செய்திகளாக்குவதும், பிற மொழிகளில் வெளிவரும் அரசியல் கருத்துகளை உள்வாங்கி அவற்றைத் தான் பணியாற்றும் இதழில் இடம்பெறச் செய்வதும் தான் பாரதிக்கு வழங்கப்பட்ட வேலை. அதன் காரணமாக அரசியல் ஆன்மீகப் பிணைப்பிற்கு அச்சாணியாக விளங்கிய விவேகானந்தரைப் பற்றி மேலும் ஆழமாகக் கற்கும் வாய்ப்பாக அப்பணி அமைந்தது.
1897-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் அரங்கத்தில் விவேகானந்தர் "வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும்' என்ற தலைப்பில் பிரசித்தி பெற்ற பேருரை நிகழ்த்திய போது, அவரோடு மேடையில் அமர்ந்தவாறே அவ்வுரையைக் கேட்டுப் பரவசமடைந்ததோடு, விவேகானந்தரின் சிகாகோ உரை குறித்து அவர் முன்னிலையிலேயே பாராட்டிப் பேசும் வாய்ப்பினையும் பெற்றவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். விவேகானந்தரைச் சந்தித்து உரையாடியது மட்டுமின்றி அவரின் அனைத்துப் பணிகளையும் போற்றி தன்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த "இந்து' ஆங்கில இதழில் அப்போதே தலையங்கம் எழுதியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர்.
அக்காலத்தில் புகழ்மிக்க அமைப்புகளாக விளங்கிய "திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம்', "சென்னை இந்து ஆசார சீர்திருத்தச் சங்கம்' எனும் இரண்டு சங்கங்களும் விவேகானந்தரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த அமைப்புகளாக விளங்கின. ஜி. சுப்பிரமணிய ஐயர் இந்த இரண்டு அமைப்புக்களிலும் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.
தனது இதழியல் மற்றும் அரசியல்துறையின் வழிகாட்டியாக விளங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர், பலவகைகளில் விவேகானந்தரை நன்கு நேரடியாக அறிந்திருந்தவராதலால் அவர் மூலம் விவேகானந்தரைப் பற்றியும் அவரது கருத்துகள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்கிற வாய்ப்பு பாரதிக்குக் கிடைத்தது. பாரதி ஆசிரியராக விளங்கிய "இந்தியா' இதழின் அதிபர்களாக விளங்கிய "மண்டயம் குடும்பத்தார்' என்று அழைக்கப்பட்ட சீனிவாசாச்சாரி, எம்.பி.திருமலாச்சாரியா, எஸ்.எஸ்.திருமலாச்சாரியா உட்பட விவேகானந்தரின் சென்னைச்சீடர்கள் பலருடன் பிற்காலத்தில் நெருங்கிய தொடர்புடன் விளங்கியவர் பாரதி. இப்படி எத்தனையோ காரணங்களினாலும் பாரதிக்கே இயல்பாக அமையப்பெற்ற ஆன்மீக மற்றும் அரசியல் உணர்வாலும் விவேகானந்தர் மீது கடைசிவரை ஆழமான பற்றுடன் விளங்கினார் பாரதி.
தனது அரசியல் குருவாக விளங்கிய திலகரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடிவந்த பாரதி, விவேகானந்தரின் பிறந்த நாளையும் அதேபோல ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடிவந்தார்.
விவேகானந்தரது பிறந்த நாளன்று சிறுவர், சிறுமிகளுக்கு கதைகள் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பாரதியார். அந்நாளில் எத்தகைய கதைகளை எந்தெந்த முறையில் சொன்னார் என்பதை பாரதியின் மகள் சகுந்தலா பாரதி தனது நினைவுக்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
""அப்பா கதை சொல்வதில், எந்த தேசத்துக் கதையாக இருந்தாலும் அதையெல்லாம் அவர் சொல்லி முடிக்கும் போது நம் பாரதநாடு அன்னியர் ஆதிக்கத்தின் கீழ் அவலமடைந்திருந்த நிலையை விளக்கும் ஓர் உதாரணமாவது, ஒரு சொற்றொடராவது, அதில் இல்லாமல் போகாது. நண்டு வளை தோண்டும் கதையாக இருந்தாலும் சரி; நட்சத்திரக் குவியலின் கதையாக இருந்தாலும் சரி, அதில் பாரதநாடு சுதந்திரமடைய வேண்டுமென்ற கருத்து கலந்தேயிருக்கும்'' என்று சகுந்தலா பாரதி "என் தந்தை' என்ற அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்போது தனது தந்தை பாரதி அவர்களின் இல்லத்தில் விவேகானந்தர் பிறந்த நாளைக் கொண்டாடியதாகவும் அந்நிகழ்வில் தனக்கு மேடையில் பேசக் கற்றுக்கொடுக்கும் பொருட்டு விவேகானந்தரின் வரலாற்றுச் சுருக்கத்தை எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்து பேசச் சொன்னதாகவும் தனது நூலில் பதிவு செய்துள்ளார் சகுந்தலா பாரதி.
பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "சக்கரவர்த்தினி' என்ற மகளிருக்கான மாத இதழில் "ஸ்ரீமத் ஸ்வாமி விவேகானந்த பரமஹம்சர்' என்ற தலைப்பில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு தொடர் கட்டுரையாக எழுதினார் பாரதி.
"ராம் மோகன ராயர், கேசவ சந்திர ஸேனா, தயானந்த சரஸ்வதி, விவேகானந்தரின் சற்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் ஆகிய இவர்களே அதி சமீபத்தில் தோன்றி மறைந்த மஹான்கள்' என்று இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பாரதியார்.
பாரதியாருக்கும் விவேகானந்தருக்கும் இடையிலான கருத்தொற்றுமையை பாரதியியல் ஆய்வறிஞர் பெ.சு.மணி தனது "பாரதியார் பார்வையில் இராமகிருஷ்ணர் இயக்கம்' என்ற நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.
விவேகானந்தரை விரிவாகப் படிப்பதும், ஆழமாக ஆய்வு செய்வதும், ஏராளமாக எழுதுவதும் பேசுவதுமாகத் திகழ்ந்த பாரதியார், முத்தாய்ப்பாக ""ஈசன் அருளாலும் , நம்மவர் அதிர்ஷ்டத்தாலும், மற்றெல்லாப்பற்றையும் துறந்த அவர் , நாட்டுப்பற்றை மட்டும் நெடுங்காலம் கொண்டிருந்தார். ஆனால் பரம சந்நியாசியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பூமிப்பற்று இல்லாத விஷயத்தில் பிணங்களுக்குச் சமமானவர்கள் என்பதை இம்மகரிஷி மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்'' என்று விவேகானந்தருக்கு இருந்த நாட்டுப்பற்றை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார்.
நாட்டு விடுதலை குறித்த உணர்வுகளோடு மட்டுமின்றி, சமுதாய விடுதலை பற்றிய சில சிந்தனைகளோடும் விவேகானந்தரும் பாரதியும் பல இடங்களில் கைகுலுக்கிக் கொள்கின்றனர். தீண்டாமை பற்றி பாரதி எழுதியுள்ள எரிமலை வரிகளை அறிந்திருக்கிறோம். அதே தீண்டாமை பற்றி, ""தொடாதே என்பது ஒரு மனோ வியாதி. விழிப்புணர்வடையுங்கள்; விரிவதெல்லாம் வாழ்க்கை, சுருங்குவதெல்லாம் இறப்பு; அன்பனைத்தும் விரிவாகும். தன்னல மனைத்தும் சுருங்குவதாகும்; ஆகையால், அன்பு ஒன்றே வாழ்வின் சட்டமாகும்'' என்று குறிப்பிடுகிறார் விவேகானந்தர்.
விவேகானந்தரின் கருத்துகள் பாரதியின் கவிதைகளைப் போலவும் பாரதியின் கவிதைகள் விவேகானந்தரின் கருத்துகளைப் போலவும் பல இடங்களில் நம்மால் பார்த்து, படித்து, உணர முடிகிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...