உலக வரலாற்றின் திருப்பு முனையாகத் திகழ்ந்த "பிரெஞ்சுப் புரட்சி' 1789ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்புரட்சி தோல்வியில் முடிந்தாலும் இதன் தாக்கம் பிரான்சில் மட்டுமல்லாது, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகள் முழுவதிலும் பிரதிபலித்தது.
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற முப்பெரும் முழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் வீச்சும் வீரியமும் இங்கிலாந்து அரசியல் அமைப்பின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்தது. இத்தகைய பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று முடிந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1792 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மகாகவி ஷெல்லி பிறந்தான்.
முப்பதாண்டுகளுக்குள் ஷெல்லியின் ஆயுள் முடிந்து போய்விட்டாலும் அவனது கந்தகக் கவிதைகளின் மகோன்னதத்தை ஆய்வுசெய்த ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர்கள் ஷெல்லியை "பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை' என்று வரையறை செய்துள்ளனர்.
அதேபோல மகாகவி பாரதியை ஆதியோடு அந்தமாக ஆய்வுசெய்து "பாரதி காலமும் கருத்தும்' என்ற நூலை எழுதி அதற்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதும் பெற்ற பாரதியியல் ஆய்வறிஞர் தொ.மு.சி.ரகுநாதன் 1905 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டில் நடைபெற்றுத் தோல்வியடைந்த முதல் ரஷ்யப்புரட்சியின் குழந்தைதான் மகாகவி பாரதி என்று தனது ஆய்வு நூலில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து நிறுவியுள்ளார்.
சிப்பாய் புரட்சி 1857ஆம் ஆண்டில் தொடங்கி 1858 வரை நடைபெற்றுத் தோல்வியில் முடிந்தது. 1863 ஆம் ஆண்டு விவேகானந்தர் பிறந்தார். புரட்சி முடிந்து ஐந்தாவது ஆண்டில் சிப்பாய் புரட்சியின் தாக்கம் வடஇந்தியா முழுவதிலும் முழுவீச்சில் இருந்த காலகட்டத்தில்தான் விவேகானந்தர் பிறந்துள்ளார்.
அவர் பிறந்து சிறுவனாக வளர்ந்துவந்த காலத்தில்தான் சிப்பாய் புரட்சியைப் பற்றி மக்கள் கதைகதையாகப் பேசிக்கொண்டனர். அப்புரட்சி பற்றி பல இலக்கியங்கள் தோன்றின. புரட்சி பற்றிய பல நாட்டுப்புறப் பாடல்கள் கிராமங்களில் தன்னெழுச்சியாகப் பிறப்பெடுத்தன. இயல்பான தனித்திறன்களும், அதற்கேற்ற வளர்ப்புமுறையும், வாய்ப்பும் விவேகானந்தருக்கு அமையப் பெற்றிருந்ததால் இளம் வயதிலேயே அவர் சிப்பாய் புரட்சியின் முழுத்தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்தார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு விவேகானந்தரின் பிறப்பையும் வளர்ப்பையும் ஆய்வு செய்கிறபோது விவேகானந்தரை "சிப்பாய் புரட்சியின் குழந்தை' என்று சந்தேகத்திற்கு இடமின்றி வரையறுக்கலாம்.
பிரான்சில் ஏற்பட்ட புரட்சி - இங்கிலாந்தில் பிறந்த புரட்சிக்கவிஞன் ஷெல்லியைத் தாக்கியதை விட , ரஷ்யநாட்டில் நடைபெற்ற புரட்சி - இந்தியாவில், அதிலும் தென்கோடியிலுள்ள தமிழகத்தில் மகாகவி பாரதியைத் தாக்கியதை விட, இந்தியாவில் - அதிலும் விவேகானந்தர் பிறந்த வடஇந்திய மண்ணில் தோன்றிய சிப்பாய் புரட்சியின் தாக்கம் விவேகானந்தரிடம் அதிகம் காணப்பட்டது இயல்பானதேயாகும்.
1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்புரட்சி பற்றியான வரலாற்று உண்மைகளைச் சிந்தாமல் சிதறாமல் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் தேடலும் விவேகானந்தருக்கு இறுதிவரை இருந்துள்ளது.
விவேகானந்தருக்கு நாள் கணக்காக, மாதக் கணக்காக கடலில் கப்பல் மூலம் பயணம் செய்த அனுபவம் இருந்தது. அவ்வாறான ஓர் அனுபவத்தை பிற்காலத்தில் வெளிப்படுத்தியுள்ளார் விவேகானந்தர். ""கப்பல் பயணத்தின் போது எதிர்பாராமல் நடுக்கடலில் கப்பல் ஏதாவது ஓர் இடையூறில் மாட்டி, கப்பலே மூழ்கிவிடுமோ என்ற சந்தேகம் பயணிகளின் மனதைக் கவ்வும் போதெல்லாம் ஆங்கிலேயப் பயணிகள் பீதியில் மதுவருந்தத் தொடங்கி தங்களை மறந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் மனதளவில் மிகவும் கோழைகளாக விளங்கினர். அதே சமயத்தில் அதே கப்பலில் பயணம் மேற்கொண்ட இந்தியப் பயணிகள் ஒரு சொட்டு மது கூட அருந்தாமல் வந்த அபாயத்தை எதிர்கொண்டனர். அத்தகைய ஆபத்தான சூழலிலும் கூட இந்தியப் பயணிகள் கோழைத்தனத்தோடு நடந்து கொண்டதைப் பார்த்ததில்லை'' என்று குறிப்பிட்டுள்ள விவேகானந்தர், ""இந்தியக் கப்பல் பயணிகளே இவ்வாறு தைரியத்தோடு விளங்கியபோது சிப்பாய் புரட்சிக் காலத்தில் இந்தியச் சிப்பாய்கள் கோழைத்தனத்தோடு நடந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. இந்தியச் சிப்பாய்களை வழிநடத்த அவர்களுக்கேற்ற தலைவர்கள் இருந்திருக்க வேண்டும்'' என்று தனது கருத்தை ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
சிப்பாய் புரட்சியின் போது பல ஆங்கிலேயே இராணுவ அதிகாரிகள் அப்புரட்சியை முற்றாக முறியடிப்பதற்கான தீவிரப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்தவாறு சிப்பாய் எழுச்சியை அடக்கிய ஆங்கிலேயத் தளபதிகளில் ஜெனரல் ஸ்ட்ராங் என்பவரும் ஒருவராவார்.
சிப்பாய்ப் புரட்சியின்போது போர்க்களத்தில் நின்று இந்தியச் சிப்பாய்களுக்கு எதிராகப் போரிட்ட அனுபவத்தைக் கொண்ட ஜெனரல் ஸ்ட்ராங் பிற்காலத்தில் விவேகானந்தரின் நண்பராக விளங்கினார். விவேகானந்தரும் ஜெனரல் ஸ்ட்ராங்கும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதோடு நாடு மற்றும் உலக நடப்புகள் குறித்தும் மனம் விட்டுப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
அவ்வாறான ஒரு சந்திப்பின் போது விவேகானந்தர் ஜெனரல் ஸ்ட்ராங்கிடம் தனது கடந்த கால கப்பல் அனுபவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி ""இந்தியக் கப்பல் பயணிகளே அவ்வாறு தைரியத்தோடு விளங்கிய போது போதுமான அளவுக்கு துப்பாக்கிகளையும் பிற ஆயுதங்களையும் வைத்திருந்த, முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட இந்தியச் சிப்பாய்கள், புரட்சியில் தோல்வியடைந்தது ஏன்?'' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜெனரல் ஸ்ட்ராங் "" சிப்பாய்களின் தலைவர்கள் படைக்கு முன்நின்று சிப்பாய்களை வழிநடத்துவதற்குப் பதிலாக "வீர இளைஞர்களே! முன்னேறுங்கள்! போரிடுங்கள் என்று சிப்பாய்களை முன்னால்விட்டு கட்டளைகளை மட்டும் பின்னால் மறைவிடங்களில் இருந்தவாறு பிறப்பித்துக் கொண்டிருந்தனர்'' என்று பதிலளித்தார். இந்த உரையாடலை அடிப்படையாகக் கொண்டுதான் விவேகானந்தர், ""கட்டளையிடும் தலைமையதிகாரிகள் படையை வழிநடத்தும் விதத்தில் படைக்கு முன்பு சென்று மரணத்தை துணிச்சலோடு சந்திக்க முற்படாத வரையில், அப்படையிலுள்ள சிப்பாய்கள் முழுமனதோடு போரிட மாட்டார்கள்'' என்ற கருத்தைத் தெரிவித்ததோடு "" நீ ஒரு நற்காரியத்திற்காக உனது உயிரை விடமுடியுமென்றால் மட்டுமே நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்'' என்றும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளார். இத்தோடு மட்டும் இதனை நிறுத்திக் கொள்ளாமல் இந்த உரையாடலையொட்டி எக்காலத்திற்கும் பொருந்தும் விதத்தில் ""நாம் அனைவரும் தேவையான அளவுக்கு தியாகம் செய்யாமலேயே தலைவர்களாக இருக்க விரும்புகிறோம். ஆகவேதான் விளைவு பூஜ்யமாக இருக்கிறது. இதை எவரும் கவனிப்பதில்லை'' என்ற மணிவாசகத்தையும் முத்தாய்ப்பாகத் தெரிவித்துள்ளார் விவேகானந்தர்.
தனக்கு மிக மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தவர் ஜான்சிராணிதான் என்றும், தனது படைக்குத் தானே தலைமையேற்றுப் போர்க்களம் கண்ட வீராங்கனை ஜான்சிராணியின் தியாகம் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாகவும் ஜெனரல் ஸ்ட்ராங் தன்னிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ஸ்ட்ராங் தனது அனுபவமொன்றையும் விவேகானந்தரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். சுல்ப்பாய் புரட்சியில் ஒரு பெரியவர் தனது நான்கு மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக களத்தில் இழந்தாரென்றும், அவ்வாறு இழந்த மகன்களைப் பற்றி பிறர் அனுதாபத்துடன் விசாரித்தபோதெல்லாம் சோகத்தில் மெüனம் சாதித்தாரென்றும், ஜான்சிராணியைப் பற்றி மட்டும் எவரேனும் பேச்செடுத்தால் கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பித்தேம்பி அழுதவாறே, ""ராணி எம் தெய்வம்; ராணி எம் தேவி'' என்று சொல்லியவாறு சோகத்தின் எல்லைக்கே சென்றுவிடுவாரென்றும் ஸ்ட்ராங் தன்னிடம் தெரிவித்ததாக விவேகானந்தர் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலேயர்களின் ஆவணங்களில் " சிப்பாய் கலகம்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்திய வரலாற்றறிஞர்களால் இது வெறும் கலகமல்ல, ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக வெடித்துக் கிளம்பிய புரட்சியென்று வரையறுக்கப்பட்டு " சிப்பாய் புரட்சி' என்றும் , " தேசியப் புரட்சி' என்றும் , "தேசிய எழுச்சி' என்றும் வரலாற்றேடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இது சிப்பாய் புரட்சி என்று அழைக்கப்பட்டாலும் சுதேசி மன்னர்கள், பொது மக்கள் என பெரும் திரளானோர் படைவீரர்களோடு இவ்வெழுச்சியில் முழுமுச்சோடு பங்கேற்றனர். இந்திய நாட்டின் இளைய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கு அக்காலத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய நூல் வீரசாவர்க்கர் எழுதிய "இந்திய சுதந்திரப் போர் - 1857' என்ற சிப்பாய் புரட்சியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூலாகும்.
மாவீரன் பகத்சிங் கல்லூரி மாணவனாக இருந்த போதே இந்நூலை ஆழந்து வாசித்திருந்ததோடு , இந்நூல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டிருந்த சூழலிலும் பகத்சிங்கின் பெரும் முயற்சியால் ரகசியமாக ஒரு பதிப்பகத்தின் உதவியைப் பெற்று மறுபதிப்பு செய்யப்பட்டு இரண்டு பாகங்களாக வெளிக் கொண்டு வரப்பட்டது . இந்நூலைப் படித்துத் தான்பெற்ற எழுச்சியை தனது சக தேசபக்த இளைஞர்களும் பெறவேணடும் என்று கருதி, அரிதின் முயன்று இந்நூல் பதிப்புப் பணியில் தன்னை முழமையாக ஈடுபடுத்திக் கொண்டான் பகத்சிங். அறிஞர் கார்ல் மார்க்ஸ் சிப்பாய் புரட்சி வெடித்த சில நாட்களிலேயே அமெரிக்காவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பிரசித்திபெற்ற இதழான " நியூயார்க் டெய்லி டிரிபியூன்' என்ற இதழில் இப் புரட்சி பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். அப்போது அவருக்கு வயது 39 மட்டுமே. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா போன்ற தொலைதூர அயல்நாடுகளிலிருந்து அப்போது வெளியான சில முக்கிய இதழ்களில் சிப்பாய் புரட்சி நடந்துகொண்டிருந்தபோதே இப்புரட்சி பற்றியான சில சிறப்பு ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.
இவ்வாறு இந்திய மண்ணிலும் , வெளிநாடுகளிலும் வலுவான தாக்கத்தை உருவாக்கியிருந்த சிப்பாய் புரட்சி நடந்து முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துப் பிறந்ததோடு , அத்தகைய சமூக உணர்வைத் தூண்டும் சூழலோடு வளர்ந்த விவேகானந்தரிடம் அப்புரட்சி அழுத்தமான தாக்கத்தை உருவாக்கியதில் வியப்பில்லை.
(தொடரும்)