இளைய பாரதமே...எழுக!-16: சொந்தக் கால்களில் நில்லுங்கள்!
இந்தியர்களிடையே மண்டிக் கிடக்கிற மூடநம்பிக்கைகளைப் பற்றி வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அழுத்தம் கொடுத்துப் பேசியுள்ளார் விவேகானந்தர்.


இந்தியர்களிடையே மண்டிக் கிடக்கிற மூடநம்பிக்கைகளைப் பற்றி வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அழுத்தம் கொடுத்துப் பேசியுள்ளார் விவேகானந்தர்.
""அவன் கல்வியறிவு பெற்றவன். ஆனால், ஒன்றைப் பற்றிக் கொண்டு அது தான் சரி என்று சாதிப்பவன் அவன். சகுனத்திற்குக்கூட அது... இது... என்று விளக்கங்கள் தருகிற மற்றோர் எல்லையை நோக்கி ஓடுகிறான். அவன், விசித்திரமான தனது இனமாகட்டும், விசித்திரமான தனது குட்டி தேவதைகளாகட்டும், விசித்திரமான தனது கிராம வழக்கமாகட்டும் - இவை பற்றிய ஒவ்வொரு மூட நம்பிக்கைக்கும் தத்துவ விளக்கம் தேவையா... இல்லை... உவமான உவமேயங்களுடன் விளக்கம் தேவையா , எல்லாம் அவனிடம் உண்டு. இன்னும் என்னென்ன விளக்கங்கள் வைத்திருக்கிறானோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஒவ்வொரு சின்னஞ் சிறு கிராமத்தின் மூடநம்பிக்கையும் அவனுக்கு வேதவிதி. அவனைப் பொறுத்தவரை, அவற்றைப் பின்பற்றுவதைச் சார்ந்துதான் தேசிய வாழ்க்கையே இருக்கிறது. இத்தகையவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்று 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர்.
இதே உரையில் இன்னும் ஒரு படி மேலே போய், ""இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையுடைய முட்டாள்களாக இருப்பதை விட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால், நாத்திகர்களிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது. அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும். ஆனால் மூட நம்பிக்கை மட்டும் நுழைந்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது. மூளை மழுங்கி விடுகிறது. வாழ்க்கை சீரழிவுப் பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது'' என்று மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுகிற முனைப்புடன் பேசியுள்ளார்.
மூடநம்பிக்கையுடன் வாழும் மக்களை சிந்திக்கத் தூண்டிய அதே வேளையில் மூடநம்பிக்கையை மூலதனமாக்கி மக்களை மதிமயக்கும் வித்தைக்காரர்களையும் விவேகானந்தர் விட்டு வைக்க வில்லை.
""ரகசிய வித்தைகளையெல்லாம் தவிர்த்து விடுங்கள். மதத்தில் மர்மத்திற்கு இடமில்லை. வேதாந்தத்திலோ, வேதங்களிலோ, சம்ஹிதைகளிலோ, புராணங்களிலோ மர்மமாக ஏதாவது இருக்கிறதா? மதத்தைப் போதிக்க பழங்கால ரிஷிகள் எந்த ரகசிய சங்கங்களை வைத்திருந்தார்கள் ? மகத்தான உண்மைகளை மனிதகுலத்திற்கு அளிப்பதற்காக அவர்கள் மாயாஜாலமோ, மந்திரஜாலமோ செய்ததாக எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? மர்மவித்தைகளை நாடுவதும் சரி , மூடநம்பிக்கைகளும் சரி இரண்டுமே பலவீனத்தின் அடையாளங்கள். சீரழிவின் அடையாளங்கள். மரணத்தின் அடையாளங்கள். அவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வலிமையாக இருங்கள். உங்கள் சொந்தக்கால்களில் நில்லுங்கள்'' என்று பேசியிருப்பதன் மூலம் ஆன்மீகத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதையும் மந்திரம் , தந்திரம் , வித்தை போன்றவையனைத்தும் மனிதர்களை மதிமயக்கும் முயற்சிகளே தவிர, வேறொன்றுமில்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துள்ளார் விவேகானந்தர்.
தன் வாழ்நாளையே ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்த விவேகானந்தர், அதே ஆன்மீகத்தின் பேரில் பலரால் பரப்பப்பட்டுள்ள மூட நம்பிக்கைகளை முற்றாக வெறுத்து ஒதுக்கியது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.
விவேகானந்தரைப் பொத்தாம் பொதுவாகப் பார்க்காமல், மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளாமல், சிலரால் சித்திரிக்கப்பட்டிருக்கிற அவரைப்பற்றியான பிம்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதோ ஒரு விதத்தில் மட்டும் புரிந்து கொள்ளாமல், சமூகக் கண்ணோட்டத் தோடும், பொதுமைச் சிந்தனையோடும், இந்த மண்ணின் மரபார்ந்த கருத்தோட்டத்தோடும் அவரின் சிந்தனைகளையும், அணுகுமுறையையும் ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் அவரின் வித்தியாசம் விளங்கும்.
1897-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி சென்னை - ஹார்ம்ஸ்டன் சர்க்கஸ் வளாகத்தில் "இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் விவேகானந்தர் நிகழ்த்திய உரையில், ""இனிவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே - ஈடு இணையற்ற நமது இந்தியத்தாய். அதுவரை மற்ற எல்லா வீண்தெய்வங்களும் நம் மனதிலிருந்து மறைந்துவிடட்டும். நமது சொந்த இனம் - இது ஒன்று மட்டுமே விழிப்புற்ற தெய்வம். எங்கும் அவரது கைகள், எங்கும் அவரது கால்கள், எங்கும் அவரது செவிகள், அவரே அனைத்திலும் வியாபித்திருக்கிறார். மற்ற எல்லா தெய்வங்களும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். நம்மைச் சுற்றிலும் காண்கிற விராட் தெய்வத்தை வழிபடாமல் வேறு வீண்தெய்வங்களை நாம் தேடிச் செல்லவேண்டுமா? இந்த தெய்வத்தை முதலில் வணங்கினால், பிற எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம்.
அரை மைல் ஊர்ந்து செல்லவே முடியவில்லை. அதற்குள் அனுமனைப் போல் கடலைத் தாண்ட விரும்புகிறோம். அது முடிகிற காரியமில்லை.
எல்லோரும் யோகியாக முடியுமா? அது நடக்காது. நாள் முழுவதும் உலக வாழ்க்கையில் கர்ம காண்டத்துடன் அல்லாடுகிறோம். மாலையில் உட்கார்ந்து மூக்கின் வழியாகக் காற்றை இழுத்துவிட்டால் எல்லாம் ஆயிற்றா? இல்லை. நீங்கள் மூன்றுமுறை மூக்கைப் பிடித்துக் கொண்டு காற்றை இழுத்தவுடன் ரிஷிகள் எல்லோரும் காற்றில் பறந்து உங்களிடம் வரவேண்டுமா? என்ன வேடிக்கை இது ! சுத்த முட்டாள்தனம்.
தேவை சித்த சக்தி, இதயத் தூய்மை, அது எவ்வாறு வரும்? முதலில் விராட்டை அதாவது உங்களைச் சுற்றியிருப்பவர்களை வழிபடுங்கள். வழிபாடு - அதுதான் அந்த சமஸ்கிருதச் சொல்லுக்குச் சரியான பொருள். வேறு எந்த வார்த்தையும் பொருந்தாது. நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள் நம்நாட்டு மக்கள். ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு சண்டையிடுவதற்குப் பதிலாக, இவர்களை நாம் வழிபட்டாக வேண்டும்'' என்று தனது நீண்ட உரையின் இடையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
1897-ஆம் ஆண்டு விவேகானந்தர் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார் என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் கருதிப்பார்க்க வேண்டும். "இந்தியத்தாயே... எல்லோரும் சேர்ந்து 50 ஆண்டுகளுக்கு வணங்க வேண்டிய ஒரே கடவுள்' என்றும் "ஒவ்வொருவரின் பக்கத்திலுள்ள மனிதர்களே வணங்க வேண்டிய கடவுளர்கள்' என்றும் சொல்லியிருப்பதை என்னவென்று சொல்வது !
இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்குள் போட்டி - பொறாமையில்லாமல், உயர்வு - தாழ்வு பாராட்டிக் கொள்ளாமல் அத்தனை வேறுபாடுகளையும் மறந்து இந்திய சுதந்திரத்திற்காகக் களமிறங்கினால் அன்னியர்களாகிய ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சியதிகாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் வேரூன்ற வைப்பது தானே விவேகானந்தர் நிகழ்த்திய இவ்வுரையின் சாரம் !
அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு வணங்கப்படவேண்டிய ஒரே கடவுள் இந்தியத்தாய் மட்டுமே என்றால் அதற்கு என்ன பொருள்? நம்முடைய சிந்தனை, கவனம், செயல் அத்தனையும் இந்தியச் சுதந்திரத்தைக் குவிமையப்படுத்தியே இருக்கவேண்டும் என்பதுதானே !
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்தால் 1897 காலகட்டம் இத்தகைய முறையில் மக்களை மையப்படுத்தி, அவர்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான கருத்துக்களை முன்வைத்து எவரும் பேசக் கூட முன்வர பக்குவப்படாத தொடக்க காலம்.
எந்த ஓர் அரசியல் கட்சியோ, சமூக அமைப்போ ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக மக்கள் எத்திசை நோக்கிச் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்பதை சொல்வதற்குக் கூட அமைப்புரீதியான இலக்கணத்திற்குட்பட்டு உருவெடுக்காத காலம்.
காங்கிரஸ் கட்சி 1885 - இல் உருவாகிவிட்ட போதிலும் 1905 வரை அத்தகைய சிந்தனையோடு செயல்படும் சூழல் இல்லாத ஆங்கிலேயர் தலைமையிலான அரசியல் கட்சியாகவே விளங்க முடிந்தது. அக்கட்சியில் மாபெரும் தேசபக்தர்கள் சிலர் அங்கம் பெற்றிருப்பினும் அவர்களெல்லாம் இத்தகைய சரியான ஒரு சூழல் எதிர்காலத்தில் உருவாகும் என்று எண்ணி அத்திசை நோக்கி அக்கட்சியை மெதுவாக முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்த காலகட்டம் தான் 1897 காலகட்டமாகும்.
அத்தகைய ஒரு வரலாற்று நெருக்கடியான காலச் சூழலில்தான் ஒற்றை மனிதனாக விவேகானந்தர் இந்திய சுதந்திரம் பற்றியும் அதற்கு மக்கள் தயாராக வேண்டிய அவசியம் பற்றியும் இடைவிடாது வெவ்வேறு கோணங்களில் அனல் பறக்கும் ஆவேச உரைகளின் மூலம் நாடெங்கும் எழுச்சியை உருவாக்கியுள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியத் தாயை மட்டுமே வணங்குங்கள் என்றால் ஆங்கிலேய ஆட்சி அப்புறப்படுத்தப்படுவதற்கு எப்படியிருந்தாலும் அரை நூற்றாண்டு காலமாவது ஆகும் என்று தீர்க்கதரிசனத்தோடு சிந்தித்துள்ளார் விவேகானந்தர் என்பதை இப்போது எண்ணிப்பார்க்கிற போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் பிரகடனம் செய்தது போலவே அவ்வுரை நிகழ்த்தப்பட்டு சரியாக ஐம்பதாண்டுகள் கழித்து நம் நாட்டுக்கு விடுதலை கிடைத்தது.
இந்த உரை மட்டுமல்ல , விவேகானந்தரது அனைத்து உரைகளிலுமே நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தும் கருத்துக்கள் ஊடும் பாவுமாக இழையோடியுள்ளது என்பதை அத்தகைய பார்வையோடு ஆய்வு செய்பவர்களால் அறிந்து கொள்ள முடியும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...