/

தெரிந்து கொள்ளுங்கள்... ஏற்றுமதித் தொழிலை!

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த இளைஞர் டி.ரமேஷ்குமார். சுயமாக ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கி, கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்துக்கு டீ-ஷர்ட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:36 pm

க. தங்கராஜா

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த இளைஞர் டி.ரமேஷ்குமார். சுயமாக ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கி, கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்துக்கு டீ-ஷர்ட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், வாரத்தில் 2 நாட்கள் இளைஞர்கள், விவசாயிகள், குடும்பத் தலைவிகளுக்கு ஏற்றுமதி தொழில் குறித்த பயிற்சியை வழங்கி வருகிறார். அவரிடம் கேட்டோம்:

ஏற்றுமதி தொழிலுக்கு படிப்பறிவு அவசியமா?

எந்த ஒரு தொழிலுக்கும் ஆர்வம் அவசியமானது. அதனுடன் படிப்பறிவும் இருந்தால் நல்லது. இருப்பினும் ஏற்றுமதியாளருக்கு படிப்பறிவு கட்டாயம் தேவை என்ற அவசியம் இல்லை. குடும்பத்தில் உள்ள படித்த நபர்களின் உதவியுடனோ, படித்த இளைஞர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதன் மூலமும் படிப்பறிவு இல்லாமலேயே ஏற்றுமதி தொழிலில் சாதிக்க முடியும்.

ஏற்றுமதி நிறுவனம் தொடங்குவது எப்படி?

ஏற்றுமதி நிறுவனத்துக்கென பெரிய அளவிலான இடவசதி அவசியமில்லை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கினாலே போதுமானது. பின்னர் நிறுவனத்துக்கான பெயரைத் தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து, ஐஉ (ஐம்ல்ர்ழ்ற் உஷ்ல்ர்ழ்ற்) இர்க்ங் பெற வேண்டும். இதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து வெளிநாட்டு வர்த்தகத்துக்கான அலுவலகத்தில் வழங்க வேண்டும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் Director General of Foreign Trade (DGFT)  அலுவலகத்தின் கிளைகள் உள்ளன.

தமிழகத்தில் இருந்து என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாம்பழங்கள், மாம்பழக் கூழ், திராட்சை, வாழை, அரிசி, கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி வகைகள், எண்ணெய் வகைகள், மல்லிகை, ரோஜா போன்ற மலர்கள், தானியங்கள், கீரைகள், காபி, டீ தூள், கரும்புச் சர்க்கரை, ஊறுகாய், அப்பளம், வடகம், நெய், தேன், மூலிகை குளியல் சோப்புகள், மட்பாண்டங்கள், படுக்கை விரிப்புகள், தரை விரிப்புகள், ஆடைகள், அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்கள், காலணிகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதி உரிமம் பெற்ற ஒருவர், ஒரு பொருளை குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியுமா?

ஏற்றுமதிக்கான உரிமம் பெற்ற ஒருவர் ஒரு பொருள் மட்டுமின்றி, பல பொருள்களையும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

ஏற்றுமதி நிறுவனம், பொருள்கள் பற்றிய விவரங்களை எப்படித் தயார் செய்வது?

ஏற்றுமதி செய்யக் கூடிய பொருள்களின் புகைப்படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி பொருள்களைக் குறித்த விவரங்கள் தெளிவாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும். ஏற்றுமதியாளரைப் பற்றிய முழு விவரமும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனம் குறித்த விவரங்களை விளக்கமாகத் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை முறையாக இறக்குமதியாளருக்கு அனுப்ப வேண்டும்.

ஏற்றுமதி சிறப்பாக நடைபெற என்ன தேவை?

ஏற்றுமதி செய்யக் கூடிய பொருள்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். அவற்றை பேக்கிங் செய்வது அழகாகவும், நேர்த்தியாகவும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். இறக்குமதியாளர் கூறும் தேதிக்கு முன்னதாகவே கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ பொருள்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும்.

ஏற்றுமதி தொழிலில் வங்கிகளின் பங்கு என்ன?

நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கான பணம் இறக்குமதியாளரிடம் இருந்து நமக்கு வங்கி மூலமாகத்தான் கிடைக்கும். எனவே வங்கிகளில் நாம் நமது ஏற்றுமதி நிறுவனத்தின் பெயரில் நடப்புக் கணக்கு தொடங்க வேண்டும். வங்கி மேலாளரிடம் இதற்கான சான்றிதழைப் பெறுவதும் அவசியம். இறக்குமதியாளரிடம் இருந்து பணம் பெறுவதற்கு

Advance Payment

Letter of Credit

Documents Against Payment

Documents Against Acceptance

என்ற நான்கு வழிகள் உள்ளன. இதில் முன் கூட்டியே பணம் பெறுவதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் ஏற்றுமதி செய்ய முடியுமா?

நிச்சயமாக முடியும். வெளிநாடுகளில் வசிக்கும் உங்களது நண்பர்களோ, உறவினர்களோ இறக்குமதியாளர்களாக இருந்து செயல்பட்டால் இன்னும் சுலபமாக இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும், நண்பர்கள் மூலம் அங்குள்ள இறக்குமதியாளர்களை அணுகுவது, முன்பணம் பெறுவது, தொடர்ந்து ஆர்டர்கள் கிடைப்பது போன்ற நன்மைகள் ஏற்படும்.

பெண்கள் சுலபமாக ஏற்றுமதி செய்யக் கூடிய பொருள்கள் எவை?

ரெடிமேட் ஆடைகள், அரிசி, மஞ்சள், சோற்றுக் கற்றாழை, கருவேப்பிலை, வெல்லம், காளான், தேங்காய், காய்கறிகள், மலர்கள், முந்திரி, ஏலக்காய், பாக்குமட்டை தட்டுகள், வாசனை மெழுகுவர்த்திகள், பொம்மைகள், கவரிங் நகைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், ஓவியம் வரையப்பட்ட பாய்கள் போன்றவற்றை பெண்கள் சுலபமாக ஏற்றுமதி செய்யலாம்.

ஏற்றுமதிக்கான வாய்ப்பு வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கும்?

ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள், உணவுப் பொருள்கள், வீட்டு உபயோக துணிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு எப்போதுமே நன்றாக இருக்கும். வரும் ஆண்டுகளில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு மேலும் பிரகாசமாக இருக்கும். மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறிக் கொண்டு, கிடைத்த வேலையைச் செய்யாமல் இருக்கக் கூடாது. தங்களது பகுதியில் உள்ள ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருள்கள் குறித்து அறிந்து கொண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்கலாம். இதன் மூலம் சுய தொழில் முனைவோராகி, பிறருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன் நாட்டுக்கும் அன்னிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.