புவியியல் படித்தால் வேலை!
வரலாறு, புவியியல் படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? என கேள்வி கேட்கும் காலம் இப்போது இல்லை. காரணம், புவியியல் படித்தால் வேலை தருவதற்கு பல நிறுவனங்கள் காத்திருக்கும் நிலை இன்று உருவாகியிருப்பதே.


வரலாறு, புவியியல் படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? என கேள்வி கேட்கும் காலம் இப்போது இல்லை. காரணம், புவியியல் படித்தால் வேலை தருவதற்கு பல நிறுவனங்கள் காத்திருக்கும் நிலை இன்று உருவாகியிருப்பதே.
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் (தனியஹார் பல்கலைக்கழகங்களும் அடங்கும்) தொலை உணர்வு மையம் தொடர்புடைய படிப்புகள் நடத்தப்பட்டாலும், மற்ற பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் 2 சிறப்புப் படிப்புகளைச் சேர்த்து வழங்குவது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மையம் மட்டுமே.
இந்த மையத்தில் புவியியல் தொழில்நுட்பத்துடன் புவியியல் தகவல் நுட்பத்தையும் மாணவர்களுக்கு எளிதில் கற்றுத் தருகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி, பாதிப்பு ஏற்பட்டால் அதை சீர் செய்வது எப்படி போன்றவையும் கற்றுத் தரப்படுகின்றன. பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலை உணர்வு மையத்தின் மூலம் கற்றுத் தரப்படும் படிப்புகள் குறித்து அந்த மையத்தின் தலைவர் முனைவர் டி. ரமேசுடன் உரையாடிய போது...
""புவியியல் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல் நுட்பத்தை கற்றுத்தரக்கூடிய 6 ஆண்டுகால ஒருங்கிணைந்த எம்.டெக் படிப்பும், புவியியல் தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் நுட்பம் கற்பிக்கும் 2 ஆண்டுகால எம்.டெக் படிப்பும் இந்த மையத்தில் கற்பிக்கப்படுகின்றன.
6 ஆண்டுகால ஒருங்கிணைந்த எம்.டெக். படிப்பில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் (குறிப்பாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பயின்றோர்) சேரலாம். இதுபோல, 2 ஆண்டுகால எம்.டெக். புவியியல் தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் நுட்பம் படிப்பில் புவியியல், கடல்சார் புவியியல் மற்றும் பயன்பாட்டுப் புவியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சேரலாம். 6 ஆண்டு காலம் தொடர்ந்து எம்.டெக். படிக்க இயலாதவர்கள் 4 ஆண்டு காலம் பி.டெக். படிப்புடன் முடித்துக் கொள்ளலாம்.
ஆறு ஆண்டு கால ஒருங்கிணைந்த எம்.டெக் படிப்பவர்களுக்கு நான்காமாண்டில் சிறு திட்ட அறிக்கை தயாரித்து வழங்குதலும், ஆறாம் ஆண்டின் கடைசிப் பருவத்தில் திட்ட அறிக்கை வழங்குதலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் காலத்தில் இஸ்ரோ, டேராடூனிலுள்ள இந்தியத் தொலை உணர்வுக் கழகம், ஐஐடி போன்ற நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர்.
ஆராய்ச்சி மையங்கள், பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சியை அளிக்கும் நிறுவனங்கள், இயற்கை வள மேம்பாடு, பெட்ரோலிய பொருள்கள் கண்டுபிடிப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள், நிலத்தடி நீர் ஆராய்ச்சி போன்ற பல்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
புவியியல் தகவல் அமைப்பு வசதிகள் மூலம் புயல், மழை வருவதற்கு 5 நாள்களுக்கு முன்பே துல்லியமாகக் கண்டறியும் வசதி நம்மிடம் இருந்தாலும், இன்னும் ஒரு வார காலத்துக்கு முன்பே புயல் போன்றவற்றைக் கண்டறியும் வகையில் ஆய்வு இருக்க வேண்டும் என்பதற்கான உயர் ஆய்வுப் பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், புவியியல் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல் தொழில்நுட்பப் படிப்பை பயில்பவர்கள் புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மக்களை பாதுகாப்பாக மீட்பது, மருத்துவமனை, நிவாரண மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பலவற்றை கற்றறிகின்றனர். தொலைவு உணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு வசதியுடன் தகவல் தொழில்நுட்ப வசதியும் இணைந்தால்தான் அவை முழுமை பெறும்.
இரண்டாண்டு கால புவியியல் தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் தொழில்நுட்பப் படிப்பில், தொலை உணர்வு மையச் செயல்பாடுகளில் புவியியல் தகவல்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய தரவுகளைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்துதல் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளக்கூடிய வசதியை நாங்கள் அளித்து வருகிறோம்.
மற்ற பல்கலைக்கழகங்கள் ஒரு பருவத்துக்கு ரூ.50,000 கட்டணம் வசூலிக்கும் நிலையில், இங்கு பருவத்துக்கு ரூ.15,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 40 பேர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதால், இப்படிப்பில் சேர ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மேலும், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்புடன் தொடர்புடையதாக இருக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மாணவர்களின் ஆய்வுக்குத் தேவையான வசதிகளையும் நாங்கள் அளித்து வருகிறோம்.
பல்வேறு ஆராயச்சிப் பணிகளுக்காக இதுவரை பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக ரூ.15 கோடி வரை நிதி பெற்று பயன்படுத்தியுள்ளோம். இன்னும் பலவித ஆய்வுகளுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன'' என்றார் ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...