மனதைவிட்டு மறையவில்லை...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகேயுள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் தற்போது 'கேப்டன் ஆலயம்' என்று மாறியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகேயுள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் தற்போது 'கேப்டன் ஆலயம்' என்று மாறியுள்ளது. அவர் மறைந்து மூன்று ஆண்டுகளாகியும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட அருப்புக்கோட்டை அருகேயுள்ள இராமானுஜபுரம் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட விஜயராஜ் என்கிற நடிகர் விஜயகாந்த், தளராக முயற்சியில் மிகவும் கடினப்பட்டு முன்னணி நடிகராக உயர்ந்தார்.
1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-இல் பிறந்த அவர், 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 28-இல் மறைந்தார்.
திரையுலகில் அவர் வளர்ச்சி அடையத் தொடங்கியதும், தனது ரசிகர்கள், பொதுமக்களுக்கு நல உதவிகள், உணவு வழங்குதல், கல்வி உதவிகள் என்று உதவிக்கரத்தை நீட்டினார். 2004-இல் அவர் தேமுதிகவைத் தொடங்கி, ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார். லட்சக்கணக்கானோரின் அஞ்சலிக்குப் பின்னர், தேமுதிக அலுவலக வளாகத்தில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டு, அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
இங்கு நாள்தோறும் பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மரியாதை செலுத்தலாம் என்றும், நாள்தோறும் மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்படும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
ஒவ்வொரு மாவட்ட தேமுதிக நிர்வாகிகளும் சுழற்சி முறையில் சில நாள்கள் உணவு வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர். பிரேமலதா விஜயகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் உள்ளிட்டோர் சென்னையில் இருக்கும் நாள்களில் நேரில் வந்து, உணவு வழங்குகின்றனர்.
நாள்தோறும் கேப்டன் சமாதியில் மலர் அலங்காரம் நடைபெறுகிறது. பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வருகை தருவோருக்கு மதிய உணவு தடையின்றி வழங்கப்படுகிறது.
நினைவிடம் அருகே தேமுதிக நிர்வாகிகள் நின்றுகொண்டு, மூட்டையில் வைக்கப்பட்ட ரோஜாப் பூக்களில் இருந்து மக்களுக்கு சில பூக்களை அளிக்கின்றனர். அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த இந்த ஏற்பாடு.
முக்கிய பிரமுகர்கள் பேட்டி அளிக்கும் வகையில், ஸ்டாண்டுகள், பத்திரிகையாளர்களுக்கு தனியே காலரி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்துதரப்பட்டுள்ளது. வரிசையில் நின்று மக்கள் உணவு பெற்றுச் செல்கிறார்கள். 'வீணாக்க வேண்டாம். சாப்பிட்டுவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று தேமுதிக நிர்வாகிகளின் அன்பு உபசரிப்பு மனதை நிறைவடையச் செய்கிறது.
முடி காணிக்கை செலுத்தும் ரசிகர்களுக்காகவே தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 'முடிகாணிக்கை செய்வோர் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்' என்று ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரிசையாக நின்று சென்று நினைவிடத்தைப் பார்வையிட ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும். விஜயகாந்த் 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' என்று அழைத்ததில் பொய்யில்லை.
படம்: எஸ்.முத்துகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






